மோடி ஒரு மந்திரச்சொல்: பாகம் 3

2002ல் குஜராத் கலவரங்களுக்கு பின் தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் முதல்வர் பதவிக்கு வருnarendramodi1ம்பொழுது அந்த முதலமைச்சர் நாற்காலி முழுதும் முட்களாக காணப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், இந்திய பெரும் தொழில் நிர்வாகிகளும் இனி குஜராத்தை தவிர்ப்போம் என குரல் கொடுத்தனர். 2003ல் புது தில்லியில் கூடிய இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மோடியை விருந்தினராக அழைத்திருந்தது. மிக முக்கியமான அந்த கூட்டத்தில், மிகப்பெரிய இந்திய தொழிலதிபர் ஒருவர் மோடியை பார்த்து இப்படி கேட்டார் “நாங்கள் ஏன் காஷ்மீர், உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்களில் முதலீடு செய்யக்கூடாது. ஏனெனில் குஜராத் ஏற்கனவே பாதுகாப்பற்ற மாநிலமாகிவிட்டது. கடந்த வருடம் உங்களுக்கு தொலைந்த வருடமாகிவிட்டது” என்றார். மேலும் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் நோக்கம் என்ன? ஏனெனில், எங்களுக்கு மாநிலத்தின் தலைமை மிக முக்கியம், அதை வைத்துத்தான் நாங்கள் முடிவு செய்ய முடியும்” என ஒரு விதமாகவே பேசினார்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த  மோடி, மேடையில் இருந்த தொழிலதிபர்களை பார்த்து “நீங்களும் போலி மதச்சார்பற்ற உங்கள் நண்பர்களுக்கும் பதில் வேண்டுமானால் குஜராத் வாருங்கள். என் மக்களிடம் பேசி பாருங்கள். குஜராத் நாட்டில் மிகவும் அமைதியான மாநிலமாக உள்ளது.” என்று கர்ஜித்தார். அறை முழுவதும் கொஞ்சம் பதட்டம் நிலவ ஆரம்பித்தது.  தொடர்ந்து பேசினார் “மற்றவர்களுக்கு குஜராத்தை அவமானப்படுத்தும் நோக்கம் அதிகம் உள்ளது. உங்களுடைய நோக்கம் என்னவோ?” என்றார் அனல் பறக்க. மோடி தில்லியில் இருந்து திரும்பியதும், குஜராத் கம்பனிகள் CIIல் இருந்து விலகுவதாக மிரட்டின. பின்பு நடந்தது எல்லாம் பெரும் கதை. கொஞ்சம் கொஞ்சமாக மொத்த வணிக சமூகத்தை தன் பக்கம் கவர்ந்தார் மோடி. மிக புத்திசாலி, நிர்வாக கில்லாடி மோடி. தன் ஆட்டத்தை நிதானமாக கவனமாக ஆடி தன் பக்கம் எதையும் சாதித்து விடுவார்.

தினம் மோடியின் பொழுது சராசரியாக காலை 4 அல்லது 5 மணிக்கு ஆரம்பமாகிறது. காலையில் தினம் யோகா செய்கிறார். பின்னர் செய்திகளுக்காக நேரத்தை செலவிடுகிறார். செய்தி படிக்கும்பொழுதே அதற்குரிய அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து நிலவரத்தை முழுதாக தெரிந்துகொள்கிறார். ஒவ்வொரு புதன்கிழமையும் தவறாமல் தன் மந்திரிசபையை சந்திக்கிறார். மோடி நேரத்தை கடை பிடிப்பதில் மிகவும் கண்டிப்பானவர். யாரையும் காக்கவைப்பதில்லை. மதிய நேரங்களில் தன்னை பார்க்க வந்தவர்களை காக்க வைக்க மனமில்லாமல் பலமுறை தன்னுடைய சாப்பாட்டை தவிர்த்திருக்கிறார். தனக்கென ஒருசில முக்கியமான அரசதிகாரிகளுடன் மட்டுமே அதிகம் காணப்படுவார். எல்லா முடிவுகளுமே ஓரிடத்தில் தான் எடுக்கப்படுகின்றன. இதனால் முடிவுகள் வேகமாக எடுக்கப்படுகிறது என சொல்கின்றனர். மந்திரிகள் கூட பொம்மைகளாகவே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க  முழுக்க தொழில்நுட்பத்தை நம்புகிறார் மோடி. தொழில்நுட்பத்தின் மூலமாக தெளிவான நிலவரம் மட்டுமின்றி, விரைவான ஒப்புதலும் கிடைக்கிறது என்பது இவர்களின் வாதம்.

லஞ்சத்தை  சுத்தமாக விரும்பாதவர் மோடி. அதனால், தன்னுடைய நிர்வாகத்திலும் ஊழல் புகாதவாறு பார்த்துக்கொள்கிறார். மின்னாட்சி (E Governance) முறையை அமல்படுத்தி உள்ளதால், எந்த ஒரு திட்டத்தையும் ஊழலின்றி அமல் படுத்தமுடிகிறது. முதல்வரும் தினம் தினம் நிலவரத்தை அறிந்துகொள்கிறார். சரியாக வேலை செய்யாத எந்த ஒரு உயர் அதிகாரியையும் இடம் மாற்றவோ, மறைமுகமாகவோ தண்டிக்க தவறுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தன்னைப் போலவே தன்னைச்சுற்றி இருப்பவர்களையும் பம்பரமாக சுற்ற வைக்கிறார்.

Google Plus Hangout by Modi (Video Chat)

மோடி இளைஞர்களை கவர்வதில் அதிக கவனம் செலுத்துகிறார் என்றே சொல்லலாம். முகநூல் (facebook), ட்விட்டர், கூகிள்+ என எல்லாவற்றிலும் தனக்கு என்று பக்கத்தை வைத்துள்ளார். மேலும் அதில் அடிக்கடி செய்திகளை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். அரசு செய்யும் ஒவ்வொரு நற்செயலையும் உடனுக்குடன் மக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கிறார். இதுவே மோடியையும், அவரது அரசையும் நல்லரசாக பிரதிபலிக்க உதவுகிறது. ஒருமுறை கூகிள்+ல் வீடியோ அரட்டையில் பொது மக்களை சந்தித்தார். இதனால் தன்னைப் பற்றி எழும் எதிர்மறை கருத்துக்களை தவிர்க்க வசதியாக உள்ளது. ஏன் நடந்து முடிந்த தேர்தலில் கூட 3D தொழில்நுட்பத்தை ஐரோப்பாவில் இருந்து வரவழைத்து, ஒரே நேரத்தில் பல நகரங்களில் மேடையில் தோன்றி தேர்தல் பிரச்சாரம் செய்தார். இவர் ஒரு புது தொழில்நுட்ப காதலர்.

இப்படியாக நல்ல விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இதன் முதல் இரண்டு பகுதியை படித்த சில நண்பர்கள் சில கேள்விகளை முன் வைத்தார்கள். அதில் முக்கியமானது, முஸ்லிம் மக்களின் நிலைமை உண்மையில் அங்கு எப்படி இருக்கிறது. அவர்கள் சந்தோசமாக இருக்கிறார்களா? என்பதுதான்.  முஸ்லிம் சகோதரர்களுக்கு நடந்த அசம்பாவிதத்திறக்கும் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தீர்ப்பாகியுள்ள இந்த நேரத்தில் அந்த சம்பவத்தை பற்றி நான் எதையும் எழுத விரும்பவில்லை. ஆனால், இன்று முஸ்லிம் மக்கள் சந்தோசமாகவே இருகின்றனர். கோத்ரா சம்பவத்திற்கு பின் எந்த அசம்பாவிதமும் குஜராத்தில் நடக்கவில்லை. எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் நண்பரிடம் கேட்ட பொழுது, நாங்கள் மோடியை நம்புகிறோம், எம்மக்கள் (முஸ்லிம்) மோடிக்கே வாக்களிகின்றனர், வேறென்ன வேண்டும் அவரைப் பற்றி சொல்ல என்று சுருக்கமாக முடித்தார். நானோ, இல்லை இந்த படுகொலை சம்பவம் என்று ஆரம்பிக்கும் போதே அவர் “இருக்கலாம். ஆனால் இன்று நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம். எங்கள் மாநிலம் வளர்ச்சி அடைகிறது, நாங்கள் அதனால் பயன் பெறுகிறோம். இந்து முஸ்லிம் மோதல்கள் எதுவும் மாநிலத்தில் எந்த ஒரு மூலையுளும் நடப்பதில்லை. நீங்கள் எதாவது சமீப காலங்களில் கேள்விப்பட்டீர்களா? நிறைய மாறுபட்ட கருத்துக்களே பத்திரிக்கையில் வருகின்றன. அவை எல்லாம் எங்களின் வளர்ச்சியை விரும்பாதவர்கள்” என்று விவரித்தார். நானும் குஜராத் செல்வதற்கு முன்பு ஊடகங்களில் படித்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்கிறேன்.

பிரச்சனைகள் எப்படி வேணாலும் கூறப்படலாம். நல்லது ஒரு பக்கம் நடப்பின், கெட்டதும் இன்னொரு புறம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், குஜராத் வளர்ச்சியில் முதன்மை மாநிலம் என்பதில் எந்த வித மாறுபட்ட கருத்தும் இல்லை. நெருப்பில்லாமல் புகையாது. ஒரு சாதனையில்லாமல், சத்தம் வராது. மோடி செயலில் நிரூபித்துள்ளார் என்பதை நீங்கள் குஜராத் சென்றால் உணரலாம். குஜராத்தில் தொடர்ந்து 4 முறை எந்த ஒரு முதலமைச்சரும் பதவியில் இருந்ததில்லை. இன்னும் 5 வருடங்கள் முதல்வராக நீடிக்க மக்கள் கொடுத்த வாய்ப்பே, உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில்.

குஜராத்தைப் பற்றியும், மோடியை பற்றியும் நிறைய எழுத வாய்ப்பிருந்தும், முக்கியமான சிலவற்றையே இங்கே பதிவு செய்துள்ளேன். உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

எனக்கு உதவிய வலைத்தளங்கள்.

  1. http://newshopper.sulekha.com/a-loner-even-at-the-top-modi-s-daily-routines_news_889330.htm
  2. http://businesstoday.intoday.in/story/gujarats-power-sector-turnaround-story/1/21750.html
  3. http://businesstoday.intoday.in/story/narendra-modi-on-management-style/1/11912.html
  4. http://www.lensonnews.com/blog_details.php?post_id=11&&blogger_id=4
  5. http://expertscolumn.com/content/what-happening-gujarat
  6. http://www.ndtv.com/article/wikileaks-india-cables/wikileaks-on-narendra-modi-93412
  7. http://www.caravanmagazine.in/reportage/emperor-uncrowned?page=1
  8. என்  சொந்த அனுபவங்கள்