என்னை மிகவும் யோசிக்க வைத்த படம் UNTHINKABLE (2010)…. காலத்திற்கு ஏற்ற படம் என்று கூட சொல்லலாம். என்னுடைய பல எண்ணங்களை மாற்றிய, மிகவும் பாதித்த சில படங்களில் இதுவும் ஒன்று.
படம் ஒரு சிறிய கதை தான். ஸ்டீவென் ஆர்தர் எனும் ஒரு அமெரிக்க முஸ்லிம் மூன்று அமெரிக்க நகரங்களில் அணுகுண்டுக்களை வைத்து விட்டு, தானே போலீசிடம் சரணடைகிறான். எங்கே குண்டுகள் உள்ளன என்னும் விவரத்தை சொல்ல மறுக்கிறான். சாவதற்கு துணிந்தும் உண்மையும் சொல்லாத ஒருத்தனிடம் இருந்து எப்படி உண்மையை வரவழைக்க போகிறோம்? அந்த உண்மையை வரவழைக்க எவ்வளவு தூரம் நாம் செல்ல வேண்டி இருக்கும் என்பதுதான் கதை.
ஒரு பக்கம் அவனை கொடுமைப்படுத்தக்கூடாது என்று FBI ஏஜென்ட் போர்டி வாதாடுகிறார். போர்டி ஒரு பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பக்கம் கொடுமைப்படுத்தா விட்டால் உண்மையை வாங்க முடியாது என்று ஒரு கூட்டம், அதாவது CIA. மனித உரிமைகளை மீறக்கூடாது என பேச ஆரம்பிக்கும் இந்த கூட்டம், இன்னும் மூன்று நாளில் உண்மையை வரவழைக்க முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என பயந்து “H” இடம் உண்மையை வரவழைக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். “H” என்பவர் CIAவின் சுய ஆலோசகர் அதாவது Independent Consultant.
H ஓர் அதிரடி பேர்வழி. ஆர்தர் அடைத்து வைத்து உள்ள அறைக்கு சென்று அவரை ஒரு நாற்காலியில் வைத்து கட்டி, கைகளை இறுக்கி நாற்காலியின் பிடியில் கட்டுகிறார். பேசிக்கொண்டு இருக்கும்போதே ஒரு சிறு கோடாலியை எடுத்து ஆர்தரின் ஒரு விரலை அப்படியே மெதுவாக நறுக்க ஆரம்பிக்கிறார். பேசிக்கொண்டே விரலை துண்டாக்கும்போது நம் மூச்சே ஒரு நிமிடம் நின்று விடுகிறது. இவ்வாறு ஆரம்பிக்கிறது “H”ன் அட்டகாசம். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்தரை எல்லோர் முன்னிலையுளும் கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறார்.
அவர் செய்யும் கொடுமைகளில் சில… வெற்று உடம்பின் மேல் தண்ணியை ஊற்றி மின்சாரம் பாய்ச்சுவது, விரல்களை வெட்டுவது, பல்லை புடுங்குவது, ஆண் உறுப்பை வெட்டி எடுப்பது, தலையை பாலிதீன் கொண்டு அடைத்து மூச்சு திணற வைப்பது என நினைத்துப்பார்க்க முடியாத கொடுமைகளை செய்கிறார். எதற்கும் அசையாத ஆர்தர் உண்மையை கூற மறுக்கிறார். அவருக்கு என்ன வேண்டும் என்பதையும் சொல்ல மறுக்கிறார். இப்படியே எதுவும் தெரியாமல் மனிதனை உயிருடன் சாகடிப்பதில் இரண்டுநாள் சென்றுவிடுகிறது.
ஒரு கட்டத்தில் FBI அவர் குண்டு வைத்து உள்ளார் என்பதை நிரூபிக்க எதாவது ஒரு குண்டை சொல்ல சொல்லி கேட்கிறது. ஆர்தரும் ஒரு விலாசம் சொல்கிறார். FBI அந்த இடத்துக்கு விரைந்து சென்று தேட ஆரம்பிக்கிறது. ஓர் இடத்தில் ஆர்தரின் போட்டோ சுவற்றில் ஒட்டி இருப்பதைப் பார்த்து அதை எடுக்கிறார்கள். அதை எடுத்தவுடன் கொஞ்ச தூரம் தள்ளி ஓர் பெரிய கட்டிடத்தில் குண்டு வெடித்து 50 பேர்க்கு மேலாக இறந்து விடுகிறார்கள்.
கோபமடைந்த FBI ஏஜென்ட் போர்டி, ஆர்தரிடம் கோபமாக வந்து இது தான் நீ சொன்னதா என கேட்கிறார். ஆர்தர் சிரித்துக்கொண்டே “நீங்க தானே நிரூபிக்க சொன்னீர்கள், இதோ நிரூபித்து விட்டேன். மேலும் எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது, அதான்” என சொல்கிறார். அவ்வளவு நேரம் ஆர்தரை கொடுமைப்படுத்தக்கூடாது என்று வாதாடிக்கொண்டு இருந்த ஏஜென்ட் போர்டி கத்தியை எடுத்து ஆர்தரின் நெஞ்சில் வைத்து கிழிக்க ஆரம்பிக்கிறார்.
கோபமடைந்த ஆர்தர் கூறும் சில வசனங்கள், நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியவை. “50 பேர் செத்ததுக்கு இப்படி கத்துறீங்களே, தினம் தினம் உங்க ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறதே அதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க. எங்களை காட்டு மிராண்டி என்று சொல்கிறீர்களே, நீங்க என்ன பண்ணுனீங்க ரெண்டு நாளா? மனித உரிமை பற்றி பேசின நீங்களே, இப்போ என்னை என்ன பண்ணிட்டு இருக்கீங்க தெரியலையா?” என அவர் வீரத்துடன் பேசும் போது மனசு பாரத்துடன் வலிக்கிறது.
கடைசியாக ஆர்தர் தன்னுடைய நிபந்தனைகளை ஜனாதிபதி முன் வைக்க ஒப்புக்கொள்கிறார். அவர் வைக்கும் இரண்டு நிபந்தனைகள்.
1. எல்லா முஸ்லிம் நாடுகளில் இருந்தும் அமெரிக்க தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும்.
2. முஸ்லிம் நாடுகளின் அண்டை நாடுகளுக்கு பண உதவி, ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும்.
ஆனால், CIA வும், FBIயும் இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அதனால் “H” ஐ அவரது வேலையை தொடர சொல்கிறார்கள். ஆனால் அவரோ தன்னால் முடியாது என்று மறுக்க ஆரம்பிக்கிறார். இரண்டு இரவு, பகல் தொடர்ந்து கொடுமை செய்து பார்த்தாச்சு… ஒண்ணுமே பதில் சொல்ல மறுக்கும் ஒருவனை இதற்குமேல் எப்படி கொடுமை செய்யமுடியும், அதனால் என்னை விட்டுவிடுங்கள் என்கிறார். குண்டு வெடிக்க சில மணி நேரங்களே இருக்கும் வேலையில் H பின் வாங்குவது எல்லாரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.
அவ்வளவு நேரம் மனித உரிமை பேசி, Hஐ காட்டு மிராண்டி தனமாக நடப்பவன் என்று வர்ணித்த எல்லோரும் கெஞ்ச ஆரம்பிக்கிறார்கள். என்ன வேணாலும் செய்து உண்மையை வரவைத்து விடுங்கள். உங்களுக்கு முழு பொறுப்பையும் தருகிறோம், நீங்கள் தான் பண்ண வேண்டும் என கூட்டமே கேட்க ஆரம்பிக்கிறது. அதற்கு அப்புறம் எப்படி “H” எந்த அளவுக்கு மனித உரிமையை மீறி, ஒரு காட்டு மிராண்டியாக நடந்து உண்மையை வரவழைத்தார் என்பதே மீதி கதை.
இந்த நீதி, சட்டம், மனித உரிமை எல்லாம் பேசுவதற்கும், கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. இது தான் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கிறது. நாமும் சில நேரங்களில் யோசிக்க மறுக்கிறோம். யார் யாரை கொல்வது, எதற்காக கொல்வது என்று பதில் தெரியாத ஒரு அர்த்தமற்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
நான் செய்தால் அது எம் மக்களுக்கு நல்லது, அதையே நீ செய்தால் மன்னிக்கமுடியாத குற்றம். இப்பொழுது யோசித்துப்பாருங்கள். யார் காட்டு மிராண்டி?