
பேட்மேன் அவருடைய பைக்கில் அறிமுகமாகும் அந்த சீனில் தியேட்டரே விசில் சத்தத்தில் மூழ்கியது. நீங்கள் ரசித்தே ஆகவேண்டும் என்று எடுத்துள்ளார்கள்.நோலனின் Inception படம் பார்த்திருந்தால் இவரின் தொழில்நுட்ப நுணுக்கத்தை நன்று அறிந்திருப்பீர்கள். அதை ஏமாற்றாமல் இப்படத்திலும் அருமையாக உபயோகப்படுத்தியுள்ளார். குறிப்பாக பேட்மேனின் பைக்கும், பறக்கும் வாகனமும் அசத்தல். பைக் வரும்போது எல்லாம் ஒரே விசில் சத்தம் தான். நோலன் படங்களில் எல்லாம் உளவியல் (Psychology) கலந்த ஒரு மெல்லிய திரைக்கதை இருக்கும். இதிலும் தவறவில்லை. வெற்றி என்பது உடலில் வலிமையில் மட்டும் இல்லை, மன வலிமை மிக முக்கியம் என்பதை அழகாக காட்டியுள்ளார்கள்.
கதை என்ன என்று சொல்ல பெருசா ஒன்னும் இல்லை. சூப்பர் ஹீரோவுக்கு எப்பொழுதுமே நாட்டு மக்களை கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்றும் வேலை தான். அதே தான் இதிலும். ஆனால், வெற்றிக்கு காரணம், அதை படமாகிய விதமும், பார்வையாளர்களை மற்றதை யோசிக்க வைக்காமல் திரையை மட்டுமே பார்க்கவைப்பதில் இவர்கள் கவனம் செலுத்தியதுதான்.
நடிகர்களின் தேர்வு அருமை. கிறிஸ்டியன் பேல் வயதானாலும் இன்னும் பேட்மேன் கதாப்பாத்திரத்துக்கு அருமையாக பொருந்துகிறார். படத்தில் நம்மை கவர்வது முகத்தையே கடைசிவரை காட்டாத வில்லன் டாம் ஹார்டி தான். மனுஷன் படத்துக்காக 15 கிலோ எடை கூடி இருக்கிறர். அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தியட்டரையே மிரட்டுகிறார். என்ன, எல்லா இடத்துக்கும் அவர் தரிசனம் தருவதுதான் எப்படி என்று தெரிவதில்லை.
ஏப்பா, இந்த மார்கன் பிரீமேன்-க்கு வயசே ஆகாதா? எப்ப பார்த்தாலும் இப்படியே இருக்கிறார். அநேகமாக அடுத்த பகுதியில் கிறிஸ்டியன் பேல் பேட்மேனாக இருக்க மாட்டார் எனவே தோன்றுகிறது. சில வசனங்களும், முடிவும் அப்படியே யூகிக்க வைக்கிறது.
பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை பேட்மேன் சத்தியமாக வரவில்லை. அதுவே மிகப் பெரிய ஆறுதல். ஏறக்குறைய 3 மணி நேரம் ஓடும் இந்த படத்தில் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் கொண்டு சென்றுள்ளார்கள். வெளியே வரும்பொழுது நம்மை சீட்டுடன் கட்டிப்போட்டது போல உணர்வு ஏற்படுகிறது.
மொத்தத்தில் இது ஒரு அருமையான பொழுதுபோக்கு படம். சூப்பர் ஹீரோ படங்கள் சிறியவர்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும் தான் என நிரூபித்துள்ளார்கள். கண்டிப்பாக நம்மை ஏமாற்றவில்லை.