நாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்

நேற்று மாலை நானும் மனைவியும் அருவி படம் பார்க்கலாம் என்று பக்கத்தில் உள்ள திரையரங்குக்கு சென்றோம். இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்க வரிசையில் நின்று திரையில் ஓடும் விலைப்பட்டியலை பார்த்துக்கொண்டிருந்தேன்.  முன்னிருப்பவர் பொருள் வாங்கிகொண்டு நகர்ந்தார்.

நான் ஒரு பாப்கார்ன் சின்னது கொடுங்கள் என்றேன். அவரோ, இல்லை சார் மீடியம் மற்றும் லார்ஜ் மட்டுமே உள்ளது என்றார். ஏன்பா உன் பின்னாடி அவ்ளோ பாப்கார்ன் இருக்கே நீ என்ன புதுசா இல்லைனு சொல்லுற என்றேன். இல்ல சார், அந்த அளவு டப்பா இல்லை என்றார். அப்புறம் பெரும் கூச்சலுக்கும் சண்டைக்கும் பிறகே அங்கே இருந்து நான் நகர்ந்தேன். இது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் அங்கு பாப்கார்ன் வாங்கும்போதும் பிரச்சனை தான். பொதுவாக பாப்கார்ன் மூன்று அளவில் இருக்கும். சிறியது, கொஞ்சம் பெரியது, பெரியது என்று. எனக்கு தெரிந்தவரை எந்த திரையரங்கிலுமே சிறிய அளவிலான பாப்கார்ன் நீங்கள் வாங்குவது கடினமே.

நீங்கள் பாப்கார்ன் என்று கேட்டாலே எதுவும் உங்களை கேட்காமல் பெரிய அளவை பில் பண்ணிவிடுவார்கள். நீங்கள் கொஞ்சம் விவரமாக இருந்து சின்ன அளவு போதும் என்றால் சார் வெறும் 10 ரூபாய் தான் வித்தியாசம் என்று கூறி பெரிய அளவை பில் செய்திடுவார்கள். இன்னும் நீங்கள் விவரமாக இருந்து, தம்பி எனக்கு சிறுசே போதும் என்றால் சரிங்க சார் என்று சொல்லி நடு அளவு பாப்கார்னை பில் செய்துவிடுவார்கள். நீங்கள் தப்பிக்கவே முடியாது.

அதற்குமேலும் என்னை மாதிரி வம்பு செய்பவர்களாக இருப்பின், பிரச்னை அங்கே தான் ஆரம்பிக்கும். ஏனென்றால் சிறு அளவை பில் செய்யவே மாட்டார்கள். ஒன்று சிறு அளவு பெட்டகம் இருக்காது. இல்லையேல், பில்லிங் இயந்திரத்தில் அதை பில் செய்ய இயலாது. இதுபோல் எதாவது கதை வரும்.

திரையரங்கில் விற்கும் பொருள் எப்பொழுதுமே மூன்று மடங்கு அதிக விலை இருக்கும். அதற்கும் ஒரு கதை வைத்து இருப்பார்கள். குடிக்க தண்ணீர் வைத்து இருக்க மாட்டார்கள். 10 ரூபாய் MRP உள்ள சின்ன பாட்டில் கேட்டல் 40-50 ரூபாய் விலை சொல்வார்கள். கேட்க யாருமே இல்லை.

இதில் இத்தனை விலை வைத்துகொண்டு இதுபோல் எமாற்றம் செய்வது இன்னும் வேதனை. அதற்குமேல் வேதனை இதை யாரும் கேட்காமல் இருப்பது. தினமும் பலபேர் இதை தட்டிக்கேட்டால் இது போல் ஏமாற்று வேலை செய்ய கண்டிப்பாக பயப்படுவார்கள். என்னை மாதிரி சண்டை போடவேண்டாம், நீங்களும் கேட்டு பாருங்களேன்.