ஊருக்குத்தான் உபதேசம்

விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டிற்கு வந்திருந்தாள். எதோ எழுத்து வேலை இருப்பதாக சொல்லி, 5 வெள்ளைத்தாள்Coins வாங்கி வரச்சொன்னாள். நானும் கடைக்கு சென்று 5 வெள்ளைத்தாள் கேட்டேன். ஒரு மதிக்கத்தக்க பெரியவர் உள்ளே சென்று எடுத்து வந்தார். எவ்வளவு என்று கேட்டேன். 3 ரூபாய் என்றார். 10 ரூபாயை எடுத்து கொடுத்தேன். சில்லறை எடுத்துக்கொண்டிருந்தார்.

நான், ஐயா ஒரு தாள் விலை எவ்வளவு என்றேன். ஒரு சில வினாடிகள் யோசித்தவர் 50 பைசா என்றார். அப்போ, 5 தாள் விலை எப்படி 3 ரூபாய் ஆகும் என்றேன். உடனே அவர், 50 பைசா சில்லறை இல்லை, வேணும்னா மிட்டாய் எடுத்துகோங்க என்றார். மிட்டாய் எடுப்பதேல்லாம் இருக்கட்டும், அதை நீங்க முதலிலே சொல்லி இருக்க வேண்டும். சில்லறை இல்லேனா அதை சொல்லாமல் நீங்களே வைத்து கொள்வீர்களா என்றேன். கொஞ்சம் சூடான அந்த பெரியவர், ஒரு மிட்டாயை எடுத்து கொடுத்தார், சில்லறையுடன். நானோ, மிட்டாய் வேண்டாம், இன்னொரு வெள்ளை தாள் கொடுத்துவிடுங்கள் என்றேன். அவரோ காதில் விழும்படி “இந்த 50 பைசா எல்லாம் எங்க கிட்ட கரெக்டா கேளுங்க, கோடி கோடியா நாட்டுல கொள்ளை அடிக்குற எல்லாரையும் போய் கேக்காதீங்க” என முனகினார்.  நான் எதுவும் பேசாமல்இன்னொரு வெள்ளைத்தாளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

இது கடையில் மட்டுமில்லை, பேருந்தில் போனாலும் நடக்கிறது. ஒரு ரூபாய், 2 ரூபாய் சில்லறை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். டிக்கெட் கொடுத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் போவார்கள். மீறி கூப்பிட்டு கேட்டால்,  அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். நம் பக்கமே திரும்ப மாட்டார்கள். நிறைய முறை நான் சண்டை போட்டு வாங்கியதுண்டு. பிச்சை எடுப்பதற்கும் இவர்கள் செய்யும் செயலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. சில்லறை இல்லை என்று  சொல்லும் நடத்துனரை, அவர் பொய்யே சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடிகிறது. எதுவும் சொல்லாமல் செல்லும்பொழுது உண்மையாகவே அவரிடம் சில்லறை இல்லையென்றாலும் அவர் திருடுவதாகவே தோன்றுகிறது.

நாம ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அடிக்க பார்க்கிறோம். கொஞ்சம் மேலே இருப்பவன் ஆயிரத்தில் ஏமாற்ற பார்க்கிறான். இன்னும் கொஞ்சம் மேலே போனா லட்சம், இன்னும் மேலே போனா கோடி. வசதிக்கும் தகுதிக்கும் ஏற்றது போல் ஒவ்வொருவரும் ஏமாற்ற பார்க்கிறோம். ஆனால் குறை கூறுவது மட்டும் கண்ணில் தெரியும் பெரும் கொள்ளையர்களை. நமக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் அதிகமாக திருட மாட்டோம் என்பதிற்கு என்ன உத்திரவாதம்? நாம் திருந்தாமல் நாடு திருந்தும் என்றால் எப்படி நடக்கும்.