மலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.
6 வருடங்களுக்கு முன்பு தோட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமானதால் என்ன பயிரிடலாம் என ஆலோசனை கேட்க சென்னை சைதாபேட்டையில் உள்ள வன அதிகாரி அலுவலகத்திற்கு என் உறவினர் குமாரவேல் ஐயாவை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தான் எனக்கு இம்மரத்தை பற்றியும் இதன் எதிர்காலம் பற்றியும் கூறினார். அவர்,நீ போய் இதையே பயிரிடு, அப்பாவிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லி அனுப்பினார். பின்னர் இம்மரத்தை விவசாயிகளிடம் பிரபலமடைய வைத்த பெருமை குமாரவேல் ஐயாவையே சேரும். அவர் என்னுடைய உறவினர் என்பதால், முதன் முதலில் மலை வேம்பை பயிரிட்ட மிக சொற்ப விவசாயிகளில் நாங்களும் ஒருவராக இருக்க முடிந்தது.
ஆரம்ப கட்டங்களில் விதையில் இருந்து செடி உருவாக்கும் முறை மிகவும் கடினமான வேலை. ஏனென்றால் மலைவேம்பின் கொட்டை மிக மிக கடினமான வெளிப்புறத்தை கொண்டது. சுத்தியால் உடைத்தால் தான் உடையும். ஆனால் அப்படி உடைக்கும் பொழுது உள்ளே இருக்கும் பருப்பு தூளாகி விடும். பின்னர் குமாரவேல் ஐயா அவர்கள் குளோனிங் மற்றும் திசு வளர்ப்பு முறையில் கன்றுகள் உற்பத்தி செய்ய முயன்று வெற்றியும் கண்டார். மலை வேம்பு மரம், நாட்டு வேம்பு போல் இல்லாமல் நேராக மிக உயரமாக வளரக்கூடியவை. இதன் வளர்ச்சி மூங்கில், தேக்கு போன்ற மரங்களை ஒப்பிடும்போது மிக வேகமாக இருக்கிறது. ஒட்டு முறையில் உருவாக்கப்படும் இம்மரங்கள் ஆரம்ப கட்டங்களில் செடியை காப்பாற்றும் அளவுக்கு தண்ணீர் இருந்தால் போதுமானது. பின் அதிக நீர் இல்லாமல், வறட்சியை தாங்கும் தன்மை படைத்தவை. அதனால்தான் விவசாயிகளிடையே வேகமாக பரவியது என்று கூட சொல்லலாம்.
மூன்று அடி சதுரம், மூன்றடி ஆழத்தில் குழி எடுத்து… மண்புழு உரம் (2 கிலோ), வேம் (50 கிராம்), அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவற்றில் தலா 20 கிராம் இவற்றை மண்ணோடு கலந்து இரண்டு அடி ஆழத்துக்குக் குழியை நிரப்பி, மையத்தில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்யும் முறையில் பல கருத்துக்கள் உள்ளன. நாங்கள் நடவு செய்யும் பொழுது ஒவ்வொரு செடிக்கும் 10 அடி இடைவெளி விட்டோம். அப்படி வைக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு சராசரியாக 350 மரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் பின்னர் மக்கள் அதிக மரம் நடவு செய்ய ஆசைப்பட்டு இடைவெளியை குறைத்து குறைத்து 5 அடி வரை கூட குறைத்தனர். ஆனால் எங்களுடைய அனுபத்தில் 10 அடி இருந்தால் தான் நல்லது என்பேன். ஏனென்றால், மரம் உயர்ந்து வளரும் பொழுது, மேல் சென்று படர்கிறது. அப்படி விரிந்து படரும் பொழுது, நல்ல இடைவெளி கண்டிப்பாக தேவைப்படுகிறது. குறைந்த இடைவெளியில் வளரும் வேகத்திற்கும் அதிக இடைவெளியில் வளருவதர்க்கும் நல்ல வித்தியாசம் காண முடிந்தது.
ஆரம்ப கட்டங்களில் சொட்டு நீர் மூலமாகவோ, நீர் பாய்ச்சலின் மூலமாகவோ செடியை பராமரிப்பது நல்லது. நம் மக்களிடையே உள்ள கெட்ட பழக்கங்களில் ஒன்று, இது போன்ற மரங்கள் நடவு செய்தால், பராமரிப்பு தேவை இல்லை என்று எண்ணி கண்டுகொள்ளாமலே விட்டுவிடுவது. அதனால் மரங்கள் பராமரிப்பின்றி வளரும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பராமரிப்பு தேவை இல்லாமலும் இம்மரம் வளரும், சரிதான். ஆனால், சிறு பராமரிப்பு இருக்கும் பட்சத்தில் மரங்கள் நன்றாகவும், செழிப்பாகவும் வளரும். அது விரைவில் அறுவடை செய்யவும், நல்ல மகசூல் பார்க்கவும் உதவும். ஒரு விவசாயி மஞ்சள் சாகுபடிக்கும், நெல் சாகுபடிக்கும் செய்யும் பராமரிப்பை ஒப்பிடும்போது, இது ஒன்றுமே இல்லை எனலாம். ஆனால், எதுவுமே செய்ய தேவை இல்லை என்று அர்த்தம் இல்லை.
மரம் 100 சென்டிமீட்டர் சுற்றளவையும், கிளை இல்லாமல் குறைந்தது 5 மீட்டர் உயரத்தையும் நெருங்கினால் அறுவடை செய்யலாம். இன்றைய தினத்தில் இப்படி இருக்கும் ஒரு மரம் ரூ.6000 முதல் ரூ. 8000 வரை மதிப்பிடப்படுகிறது. இம்மரம் 5 அல்லது 6 வருடங்களில் இருந்தே அறுவடை செய்யலாம் என கூறப்படுகிறது. ஆனால் என் அனுபவத்தில் தொடர்ந்து நீர் பாய்ச்சல் இருந்தால் தான் இக்குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயார் ஆகிறது. இல்லையேல், 8 – 10 வருடங்கள் கூட காத்திருக்க நேரிடும். இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு ஏக்கருக்கு 350 மரங்களுக்கு, ரூ 25 லட்சம் மகசூல் பார்க்கலாம். ஒரு வேலை மரம் தேவையான அளவு வளரும் முன்பே விற்க வேண்டும் என்றால், மொத்த மரமும் விறகுக்கு டன் கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்படி எடுக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 1 – 2 லட்சம் கூட தேராது. அதனால் மரம் வளரும் காலம் வரை கண்டிப்பாக காத்திருக்கும் நிலைமை ஏற்படும்.
பிளைவுட், தீக்குச்சி, காகிதம், கனரக வாகனங்கள் கட்டமைக்கவும் இம்மரம் பயன்படுகிறது. இம்மரம் எடை குறைவாகவும், கடினம் அதிகமாகவும் இருக்கும். இதனால் பல இடங்களில் இம்மரத்திற்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளது. பிளைவுட்கம்பெனிகள் அறுவடைக்கு தயார் என்றால் அவர்களே வந்து மரங்களை வெட்டி எடுத்து செல்கிறார்கள். இம்மரங்களை கனரக வாகனங்களின் உபயோகிக்கும் பொழுது, வண்டியின் எடை வழக்கமானதை விட மிக குறைந்து காணப்படுகிறது. இதனால் நெடு தூரம் செல்லும் வாகனங்களில் ஆயிரக்கணக்கில் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படுகிறது.
பலர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி “மரத்தை வெட்டி எடுத்த பிறகு நிலம் வீணாகி விடாதா?” என்பதுதான். மரங்கள் வெட்டிய பின்பு மிச்சம் இருக்கும் வேர் பகுதிய எடுத்துக்கொள்ள நிறைய விறகு கடைகள் உள்ளன. அவர்களே இயந்திரங்கள் வைத்து எடுத்துக்கொண்டு, டன்னுக்கு ஏற்றவாறு பணமும் தருகிறார்கள். அந்த வருமானத்தை வைத்து தோண்டிய வேர் குழியை மூட உபயோக படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பூமியை சரி செய்ய எதுவும் கையில் இருந்து செலவு செய்ய தேவையில்லை.
மலைவேம்பு நாற்று தேவை எனில் அருகில் அரசு வனத்துறை அலுவலகங்களை நாடலாம். அல்லது நிறைய தனியார் நர்சரிகளிலும் கிடைகிறது. ஒரு நாற்று ரூ 30 வரை கூட விற்கப்படுகிறது. சில சமயம் நாட்டு வேம்பு செடியும் இத்துடன் கலந்து விடுகிறது. வளரும் பொழுதுதான் நாட்டு வேம்பை கண்டறிய முடியும். அதனால் தெரிந்த இடங்களில், நம்பிக்கையானவர் மூலம் வாங்குவது நன்று. திருநெல்வேலியில் ஜெய்சங்கர் என்பவர் உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் கொடுக்கிறார்.சத்தியமங்கலம் கடம்பூர் பகுதிகளிலும் கிடைகிறது.
மேலும் இதைப்பற்றி தகவல் தேவைப்பட்டால் என்னை மின்னஞ்சலில் அணுகவும்.