ஐந்தாவது வரை தமிழ் வழி பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு ஆறாம் வகுப்புக்கு ஆங்கிலவழி கல்விமுறையில் நடக்கும் சைனிக் பள்ளியில் சேர்ந்த ஆரம்ப காலம் அது.
நல்லவேலை அந்த வேதனை காலத்தில் நான் தனியாகவெல்லாம் மாட்டிக்கொள்ளவில்லை. கூட ஒரு கூட்டமே இருந்தது. கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு தான்.
பரீட்சை வினாத்தாள்களில் “Answer Briefly” என்று ஒரு கேள்வி வந்துவிட்டால் போதுமே, ஒரு ஆர்வக்கோளாறில் குறைந்தது ஒரு பக்கத்துக்கு குறையாமல் பதில் எழுதிவிடுவோம். மதிப்பெண் போடாமல் ஆசிரியர் அடுத்த பக்கத்துக்கு போகக்கூடாது என்கிற ஒரு எண்ணமோ அல்லது ஆங்கில வழி கல்வி படித்துவந்த மாணவர்களுக்கு நாம் ஒன்றும் சளைத்தவர்களில்லை என்று ஒரு எண்ணமோ என்று தெரியவில்லை.
தாள்களை திருத்தும்பொழுது எங்களது ஆர்வத்தை பார்த்த ஆங்கில பாடத்தின் ஆசான் சண்முகசுந்தரம் (நாங்கள் பாசமாக RS என்று அழைப்போம்) அய்யா அவர்களுக்கு, இந்த பசங்களோட ஆர்வத்தை குறைக்கலாமென்று கொஞ்சம் விருப்பம் போல. விடைத்தாள் கொடுக்க வந்தவர், எங்களை பார்த்து கேட்டார்
அய்யா: இடுப்பில் இருந்து கால் வரையில் உடை உடுத்தினால் அந்த உடையை என்ன சொல்வீர்கள்?
நாங்கள்: Pant Sirrrrrr
அய்யா: அதைவிட சிறியதாக முட்டி வரை உடுத்தினால் என்ன சொல்வீர்கள்?
நாங்கள்: Shorts Sirrrrrr
அய்யா: அதைவிட சிறியதாக உடுத்தினால் என்ன சொல்வீர்கள்?
நாங்கள்: Brief Sirrrrrr
அய்யா: புரிந்ததா? சிறியதை விட சிறியது தான் Brief.
நாங்கள்: Ok Sirrrrrr
அதற்குப்பிறகு கொஞ்ச நாட்கள் எங்களுடைய briefஐ பார்த்தால் எங்கள் எண்ணம் எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள்.
அவருடைய இந்த சிறிய ஒரு சிரிப்பு கலந்த எடுத்துரைப்பு, எங்களுடைய மனதில் ஆழப்பதிந்தது. இது ஒரு எடுத்துக்காட்டு தான். இதுபோன்ற அருமையான ஆசான்கள் எங்களுக்கு கிடைத்தது மிகப்பெரிய வரமாகவே கருதுகிறேன்.
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.