பல கோடி வர்த்தகம், கோடி கணக்கான ரசிகர்கள், எதுவும் லட்சங்களில் இல்லை….எல்லாம் கோடியில் தான்.. அப்போ அதன் வருமானம்?
யார் இந்த லலித் மோடி? தெரியுமா உங்களுக்கு, இவர் இந்திய பணக்காரர்களில், சக்தி வாயிந்த மனிதர்களில் ஒருவராக வளர்ந்துகொண்டு இருக்கிறார்… சமீபத்தில் நடந்த விளையாட்டு துறையில் சக்தி வாயிந்த மனிதர்களின் அட்டவணையில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
வருமான வரியாக மட்டும் ரூ.200 கோடியை கட்டிய இந்த இந்த IPL’ன் வருமானம் தான் எவ்வளவு? கணக்கு போட்டால் நம் தலை சுற்றிவிடும் என நினைக்கிறேன். வீரர்களை மட்டும் கோடி கோடியை கொட்டி ஏலத்தில் எடுக்கும் கம்பனிகள் அந்த பணத்தை எடுக்காமலா விட்டுவிடுவார்கள்?
எனக்கு தெரிந்த வருமான வழிகள்
1. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் (சோனி மட்டும் ரூ.8500 கோடி, 10 வருடத்திற்கு)
2. டீம் ஏலம் – தோராயமாக 730 மில்லியன் டாலர், வருடத்திருக்கு
3. விளம்பரங்கள் – இது கொஞ்சம் தலை சுற்றும் கணக்கு
4. ஸ்பான்சர் (DLF மட்டும் 50 மில்லியன் டாலர், 5 வருடத்திற்கு)
5. டிக்கெட். தோராயமாக 100 கோடி ஒரு தொடருக்கு. (எப்பொழுதுமே டிக்கெட் விற்று முடிந்து விடுகிறது, எல்லா போட்டிகளுக்கும்.)
6. இணையம் ஒளிபரப்பு
இன்னொரு முறை பேரு மூச்சு விட்டுகொள்ளுங்கள். மொத்தம் பல இடங்களில் இருந்து வரும் வருமானத்தை கூட்டினால் எதிர்பார்க்கப்படும் வருமானம் 41 பில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் கணக்கு வேண்டும் என்றால் இந்த வருமானத்தை 50ல் பெருக்கி கொள்ளுங்கள். கண்ணை கட்டுகிறதா?
எங்கே போகிறது இவளவு பணம்? யாருக்கு இதில் லாபம்? யர்ருக்கு இதில் நஷ்டம்? இது வீரர்களை வைத்து , ரசிகர்களை வைத்து விளையாடும் சூதாட்டம். பணம் முதலீடு செய்பவர்கள் பணத்தை அள்ளி செல்கிறார்கள். கொஞ்ச நஞ்சமல்ல. பல்லாயிரம் கோடிகள். நாம் கொடுக்கும் பணம் மட்டும் பல கோடிகள்.
DTH மூலமாக தொலைக்காட்சி பார்ப்பவர்கள், இந்த ஒளிபரப்பை பார்க்க மட்டும் தனியாக பணம் செலுத்த வேண்டும். அதில் மட்டும் கோடிகள். இந்த கோடிகளை சம்பாதிக்க நாம் நமது பொன்னான நேரத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சரி, நமக்கு பொழுதுபோக்கு… இந்த பொழுதுபோக்கில், இவ்வளவு கோடிகளா?
எத்தனை புது வீரர்கள் இந்தியாவில் உருவாகி இருக்கிறார்கள் இதனால்? அதை தானே சொல்லி ஆரம்பித்தார்கள்? கபில் தேவ் ICL ஆரம்பித்த பொழுது ஆதரிக்காத இந்த BCCI எதற்காக இதை ஆதரிக்கிறது? வெறும் பணம் மட்டுமே பேசுகிறதா? விடை தெரியாத கேள்விகள்.
அரசாங்கம் வருமான வரியை சுவைத்துக்கொண்டு தூங்க என்ன காரணம்? ஏன் இந்த வருமானத்தை மற்ற விளையாட்டை ஊக்குவிக்கவோ, மேம்படுத்தவோ பயன்படுத்த கூடாது? சமீபத்தில் ஹாக்கி வீரர்களுக்கு சம்பளத்திலேயே பிரச்சனை. அவமானம். தேசிய விளையாட்டின் நிலைமை இது தான். இதை நாம் பார்த்து பரிதாபம் தான் பட வேண்டி இருக்கு. இதன் விளைவு, உலக கோப்பையில் படு தோல்வி. வீரர்களை கண்டிப்பாக நான் குறை கூற மாட்டேன். அவர்களை, அந்த விளையாட்டை, அந்த துறையை இவ்வளவு கேவலமாக வளர்த்து வரும், விளையாட்டு துறையை தான் சாட முடியும்.
அது மட்டுமல்ல, அனைத்து விளையாட்டிலும் தான் இப்படி. ஒரு சிலரை தவிர மற்ற யாரும் மேலே வர முடிவதில்லை. பணம் வந்தால் அந்த துறை வளரும், இல்லை என்றால் பாதளம் போக வேண்டியது தான். பல முறை படித்தும், சாடியும் திருந்தாத இந்த அரசாங்கம், என் கேள்விக்கா பதில் அளிக்கபோகிறது?
இதை எல்லாம் பார்க்கும் பொழுது, IPLஐ பணம் வைத்து இருப்பவர்கள் அதை பலமடங்கு பெருக்கிக்கொள்ள ஒரு தளமாகவே என்னால் பார்க்க முடிகிறது.