கச்சத்தீவும்… நம் மீனவனின் பாடும் – பாகம் 2

சரியாக 3 வருடத்திற்கு முன்பு நான் இந்திய மீனவர் பிரச்சனையின் மூல காரணத்தை எழுதியிருந்தேன். முடிவில்லா அப்பிரச்சனை இன்றைய தேதியில் மிகவும் அதிகரித்துள்ளது. அதை மேலும்அண்டை நாட்டு ராணுவம் நம் மக்களை தாக்குவது ஒரு தொடர் செயலாக இருக்கும்பொழுது, ஏன் நம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? சாவது மீனவன் தானே என்ற நினைப்போ? இல்லை, இவர்களுக்காக நாம் ஏன் அண்டை நாட்டுடன் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணமா? ஏன் இந்த பிரச்சனையை மட்டும் மத்திய அரசு கண்டுகொள்ளவே மறுக்கிறது. ஏன் தமிழக அரசு இதற்காக போராடவில்லை? ஏன் இதெல்லாம் செய்தியுடனே முடிந்து விடுகிறது? இப்படி பல கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. எதற்கும் பதில் இல்லை. யூகித்து எழுதும் விஷயமும் இல்லை இது.

அலச தோன்றிய பொழுதுதான் பகுதி 2 உருவானது. மீனவர்கள் ஏன் சுடப் படுகிறார்கள்? இதற்க்கு என்ன தான் முடிவு? ஏன் இந்திய அரசு TN Fishermenமௌனம் காக்கிறது?இலங்கை இனப் படுகொலை பிரச்சனை என்று தமிழக மக்களிடையே மீண்டும் புத்துயிர் பெற்றதோ, அன்றே இந்திய மீனவர்கள் இலங்கை கப்பற்படையால் தாக்க படும் சம்பவம் அதிகரிக்க தொடங்கியது. நம்மின் ஒவ்வொரு நாள் போராட்டத்திற்கும் சில உயிர்களை நாம் கடலில் பணயம் வைக்கிறோம்.தினம் தினம் கடலுக்குள் செல்லும் அப்பா வருவாரா என்று தரையில் ஏங்கி நிற்கும் குழந்தைக்கும், திரும்பி வரும் வரை வைத்த கண் வாங்காமல் கடலை பார்த்து காத்திருக்கும் மீனவன் குடும்பத்துக்கும் நம் அரசாங்கம் இதுவரை செவி சாய்க்கவில்லை. இனியும் எதுவும் செய்வது போல் தெரியவில்லை.  என்ன பதில் வைத்து இருக்கிறோம் மக்களுக்கு ?ஏன் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண மறுக்கிறோம்? தமிழக மீனவர்கள் தாக்க பட்டார்களே தவிர, இந்திய மீனவர்கள் இல்லை. அப்படித்தான் செய்திகள் பிரதிபளிகின்றன.  அதுவா நம் பார்க்க வேண்டிய  முதல் பிரச்சனை? இல்லை, இவர்களும் மனிதர்கள்தான் என்று உணர்த்துவதா? கண்டிப்பாக  இரு நாடுகளும் பேச்சு வார்த்தையை துவக்கினால் தான், முடிவு என்பது கிட்டும். அதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

முதலில்  அரசு சார்பாக, மீனவர்களின் குறையை கேட்கவும், அவர்களின் கோரிக்கையை அறியவும் நிபுணர் குழு அமைக்கலாம். அவர்களால் கண்டிப்பாக ஒரு சில முடிவுகளை முன்வைக்க முடியும்.

இரு நாட்டுக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தங்கள் தெளிவின்மையால், இரு நாட்டு அரசும் அதை முதலில் தெளிவு படுத்தவேண்டும். மேலும் இருநாடுகளும் சேர்ந்து ஒரு பொது ரோந்து படையை உருவாக்கி,  பிரச்சனைக்குரிய இடங்களை இவர்களிடம் ஒப்படைக்கலாம். இதனால் சுடுதல், கைது செய்வது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். எல்லை மீறும் மீனவர்களை அங்கேயே திருப்பி அனுப்பலாம்.

கடல் வழி மக்கள் நாடு கடப்பதையும், கடத்தல் தொழிலை ஒழிக்கவும் கடுமையான தண்டனையை விதிக்கலாம்.அது எல்லை மீறும் மீனவர்களுக்கு ஒரு பயத்தை கண்டிப்பாக உண்டாக்கும். மேலும், இன்றைய தேதியில், தொழில்நுட்பத்தை கொஞ்சம் நம்பலாம். அதாவது கடலுக்கு செல்லும் ஒவ்வொரு படகிலும் GPS போன்ற கருவிகள் பொருத்தி, கண்காணிக்கலாம். இது இரு நாடுகளுக்குமே உதவும். இதன் உதவியுடன், விதிகளை மீறும் படகை கைப்பற்றுவதுடன், மீனவரின் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.

இன்றெல்லாம் மீனவர்கள் சுடப்பட்ட செய்திகள் வந்தாலே, இது கேட்டு கேட்டு பழகிப்போன செய்தி தான் என்று மனது செய்தியை கேட்க கூட மறுக்கிறது. ஆனால், தன் வயிற்று பிழைப்பிற்கு தினம்தினம் உயிரை பணையம் வைக்கும் சாதாரண மனிதனின் நிலையில் இருந்து பார்க்கும்பொழுது, என்ன சொல்வதென்று புரியவில்லை.

இது எல்லாம் நம்மை போன்ற தினசரி செய்தி படிக்கும் பாமரனின் எண்ணங்கள். அரசு நினைத்தால், இதைவிட தெளிவான, உபயோகமான முடிவுகளை கண்டிப்பாக எடுக்க முடியும். தேவை கொஞ்சம் கடைக்கண் பார்வையும், கருணையும் தான்.