“ஏன் பெட்ரமொஸ் லைட்டே தான் வேணுமா?”
“டேய் ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க?”
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா”
என்று அவர் பேசிய வசனங்களை நினைத்தாலே சிரிப்பு வரும். அவ்வளவு சிறந்த நகைச்சுவை நடிகர்.
உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்த இந்த மணி, ஒரு நாடகத்தில் ஊர் கவுண்டராக நடித்து பெயர் வாங்கினார். அதிலிருந்து அவருக்கு கவுண்டர் மணி என்று பெயர் வந்து, பின்னால் கவுண்டமணி என்றானது. வெள்ளித்திரையில் முதல் படம் அன்னக்கிளி என்றாலும், “பத்த வச்சுட்டியே பரட்ட” என்று அவர் திரையில் முதன் முதலில் பிரபலமானது பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்தில். அதற்குப்பிறகு அவர் கொடி கட்டிப்பறந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
என்னை மிகவும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் இவர்தான். இவர் நகைச்சுவை காட்சிகளை பலமுறை பார்த்து வியந்து இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் என்னுடைய தொலைக்காட்சி சேனல்களில் இவருடைய காமெடியை தேடுவேன். அப்படியென்ன சிறப்பு இவரிடம்? ஏன் இன்றும் அவருடைய நகைச்சுவை நமக்கு பிடிக்கிறது? ஒரு சின்ன அலசல்.
அவரைப் பற்றி பேசும்பொழுது கண்டிப்பாக நடிகர் செந்திலை விட்டுவிடமுடியாது. இருவரும் கூட்டணி சேர்ந்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கினார்கள். பல படங்கள் இவர்களின் நகைச்சுவைக்காகவே ஓடியது என்பதை மறுத்துவிட முடியாது. செந்தில் இவரிடம் கேள்வி கேட்பதும், அதற்க்கு கவுண்டமணி நையாண்டியாக பதில் சொல்லுவதும் எப்பொழுதுமே வேடிக்கை தான்.
இதில் கவனிக்கவேண்டிய ஒன்று…. இவர்களின் தொடர் கூட்டணியும் வெற்றியும் தான். இன்றெல்லாம் ஒரு படம் சேர்ந்து நடித்துவிட்டாலே, அடுத்த படத்தில் தனியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை பல நடிகர்களுக்கு வந்துவிடுகிறது. அதிலும் செந்தில் அவர்கள் எல்லா படத்திலும் அவர்க்கு அடிமையாகவோ, அடி வாங்குவராகவோ தொடர்ந்து நடித்தார். அது போட்டி பொறாமை இல்லாத வளர்ச்சி என்பதை இன்றைய நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக அது ஒரு நல்ல ஆரோக்கியமான வளர்ச்சிதான். இருவருமே வளர்ந்தார்கள். கவுண்டமணியின் வளர்ச்சியில் செந்திலுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அடுத்து அவர் நடித்த சில வெற்றி கதாப்பாத்திரங்களை பார்ப்போம்.
- சின்ன தம்பி படத்தில் வரும் மாலைக்கண் நோய் உள்ள ஒரு சமையல்காரர்: அதில் அவர் மனைவியுடன் இரவு படத்துக்கு போய்விட்டு வரும் காட்சி மறக்க முட்டியுமா உங்களால்?
- சின்ன கவுண்டரில் வரும் சலவை தொழிலாளி: செந்தில் இதில் சந்தேகம் கேட்டுகொண்டே வருவார். அதற்க்கு நல்ல பதில் கிடைக்கும் மணியிடம் இருந்து.
- சூரியனில் அரசியல்வாதி என்று சொல்லி உதார்விடுபவர்: அடே நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல. ஒ, அன்னிக்கு டெல்லி ல இருக்கேன், சரி உங்களுக்காக கேன்சல் பண்ணிடுறேன் என அவர் விடும் உதார்களுக்கு அளவே இல்லை. எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவைகளில் இந்த படமும் ஒன்று
- சின்ன வாத்தியாரில் கல்யாண தரகராக வந்து செவுட்டு மனைவியும் மாமனாரிடமும் மாட்டி தவிக்கும் அந்த காட்சிகள் No.1 ரகம். பல முறை என் வயிறு வலித்துள்ளது. “சேதுராமன்கிட்ட ரகசியமா?” …
- சேரன் பாண்டியனில் வரும் மெக்கானிக், கரகாட்டக்காரனில் வரும் தவில் வித்துவான், மை டியர் மார்தாண்டனில் சலவை தொழிலாளி
என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில் ஒன்றை நீங்கள் கவனித்தால் புரியும். அவர் தன் நடிப்பில், நாம் தினம் தினம் வாழ்கையில் பார்க்கும் சாதாரண மனிதர்களையே பிரதிபலித்தார். ஒரு சலவை தொழிலாளியாக, சமையல்காரராக, கல்யாண தரகராக, சைக்கிள் கடைக்காரராக என சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாரும் பார்த்த, பழகின ஒரு கதாப்பாத்திரத்தையே தேர்ந்தெடுத்தார். இதனால் ஒவ்வொரு சராசரி மனிதனையும் அவரால் கவர முடிந்தது என்றே சொல்லுவேன்.
அப்புறம் அவரைப்பற்றி சொல்ல வேண்டிய ஒன்று, கவுண்டரின் சவுண்டு. யாரையும் மதித்து பேச மாட்டார். எதிர்த்து, திமராகவே பேசுவார். அது தான் அவரின் திரை அடையாளம். டேய் பூசணிக்கா மண்டையா, ஆப்ரிக்கா கொரில்லா என்று இவருடைய அடைமொழிகள் ரொம்பவும் பேர் போனவை. சிலர் “இப்படி எல்லோரையும் பேசுகிறாரே” என்று இதைப்பற்றி வருத்தத்துடன் கூறியும் உள்ளனர். ஆனால் எனக்கு தெரிந்து இவை எல்லாம் திரைகளில் மட்டும் தான். தனிப்பட்ட வாழ்க்கையில் யாரையும் இவர் இப்படி பேசியதாக இதுவரை தெரியவில்லை. மேலும் யாரையும் இவர் பகைத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. அப்படி அவர் பேசுவது என்னை பொறுத்த வரையில் ரசிக்கவே முடிகிறது. எப்படி ஒரு கதாநாயகன் எல்லாரையும் அடிப்பது நிஜ வாழ்கையில் சாத்தியமில்லையோ, அப்படித்தான் கவுண்டர் பேசும் அடை மொழிகளும். நாம் நம் நிஜ வாழ்கையில் செய்யமுடியாத ஒன்றை மற்றொருவர் செய்யும்பொழுது கண்டிப்பாக ரசிக்கவே செய்கிறோம்.
இவரிடம் பிடித்த மற்றொன்று, இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்பொழுதுமே பொது மேடைக்கு கொண்டுவந்ததில்லை. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்ளமாட்டார். எந்த பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்கமாட்டார். இன்றுவரை அதை கடைப்பிடித்து வருகிறார். பாராட்டுக்குரிய ஒன்று.
இவருக்கு சரியான விருதுகளோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு நடிகர் ஓரிரு படங்களில் நடித்து கிடைக்கும் அங்கீகரம் கூட கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தால் அழியாத நகைச்சுவைகளை கொடுத்துள்ள இவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.