
இன்னைக்கு என்னமோ திடீர்னு ஒரு விபரீத ஆசை. எப்ப பார்த்தாலும் இப்படித் தான் சொல்லுறாங்க, ஆனால் ஒரு நாள் கூட இதை உபயோகிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என எண்ணிக்கொடிருந்தேன். சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டது.
மனசு ஒரு குரங்கு என்பதில் தப்பில்லை. அப்படியே மனம் தாவத் தொடங்கியது. நடுவானில் இருக்கும் பொழுது இந்த கம்பியை இழுத்தால் என்ன ஆகும், வெளியே காற்று பயங்கர வேகமாக இருக்குமா? ஹாலிவுட் படத்தில் வர மாதிரி நடு வானில் சாகசம் எல்லாம் பண்ண முடியுமா? என வித விதமாக தோன்றியது.
அப்பொழுது விமானி தனது அழகான கரகர குரலில் ஆங்கிலத்தில் எதோ சொல்ல தொடங்கினார். கவனிக்க ஆரம்பித்தேன். “நாம் இப்பொழுது திருப்பதி நகரத்தின் மேல் பறந்து கொண்டிருக்கிறோம். உங்களது இடதுபுறத்தில் திருப்பதி நகரமும், விமான நிலையமும் இருக்கிறது. மேகமூடமில்லாமல் இருந்தால், நீங்கள் திருப்பதி கோவிலையும் உங்கள் இடதுபுறத்தில் காணலாம்” என கூறி அவர் முடிக்கக்கூட இல்லை. எனது வரிசைக்கு வலதுபுற வரிசையில் இருந்து ஒரு வாலிபர், தாவி வந்தார்… ஆஹா, இவர் தான் இன்னைக்கு இந்த கம்பிய இழுக்க போறாரோ….? எட்டி பார்த்துவிட்டு, “சார் தேவஸ்தானம் தெரியுதா”னு கேட்டார். நான், இல்லேங்க, ஒரே மேக மூட்டமாக உள்ளது என்றேன். அவர் உடனே, ஜன்னலை தொட்டு தொட்டு (2 முறை) கன்னத்தில் போட்டுக்கொண்டார். வெங்கடாசலபதியை கும்பிடுறாராம். முதல இவரு கால தொட்டு நான் கும்பிடனும்.
“ஏன் சார் ஜன்னலை தொட்டு தொட்டு கும்பிடுறீங்க, தோ, இந்த கம்பிய பிடிச்சு இழுங்க.. நேரா தேவஸ்தானமே போய், பெரிய கும்பிடு போட்டுட்டு வரலாம்” என சொல்லலாம் போல தோணியது… யார் திட்டு வாங்குவது, எதாவது டென்ஷன் ஆகி, “நீங்க போய் கும்பிட்டுட்டு வாங்க”னு, கம்பிய பிடிச்சு இழுத்து என்ன தள்ளிட்டார்னா?
ஒவ்வொருத்தருக்கும் ஒரு பீலிங்க்ஸ் (feelings)…