கோவையின் அடையாளங்கள்

பால்ய சினேகிதனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டிற்க்கு வருவதற்கு வழி கேட்பதற்காக அந்த அழைப்பு. இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று வினவினேன். அதற்கு அவனோ ராஜலக்‌ஷ்மி மில்ஸ் அருகில் இருக்கிறேன் என்றான். ஒரு நிமிடம் யோசித்தேன், இப்படி விலாசம் சொல்லும் மக்கள் இப்பொழுது கோவையில் மிகவும் குறைவு. எனக்கோ முகத்தில் ஒரு சிறு புன்னகை.

1980களிலும்  90களிலும் கோவையில் வாழ்ந்தவர்களே இப்படி மில் பெயரை விலாசமாக கூறுவார்கள். அத்தனை பஞ்சாலைகள் கோவையில் ஒவ்வொரு சாலையிலும் இருந்தன. அவினாசி சாலையும் திருச்சி சாலையும் முலுக்க முலுக்க  பஞ்சாலைகளாகவே நிறைந்து இருந்தது.

வசந்தா மில்ஸ், பங்கஜா மில்ஸ், ராதாகிருஷ்ணா மில்ஸ், லக்‌ஷ்மி மில்ஸ், வரதராஜா மில்ஸ், கார்த்திகேயா மில்ஸ், ராஜலக்‌ஷ்மி மில்ஸ் என பல பேருந்து நிருத்தங்கள் பஞ்சாலைகளின் பெயர்களையே கொண்டிருந்தது. இன்றைய தலைமுறைக்கு இவை ஒரு பெயரே தவிர அதன் அர்த்தமும், சரித்திரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று பல தொழில்கள் கோவையில் இருக்கலாம். ஆனால் கோவையை ஒரு மாபெரும் தொழில் நகரமாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் மூல காரணமாக இருந்த இந்த தொழிற்ச்சாலைகள் இன்று இடிபட்டு கிடப்பதையும், அடுக்குமாடி கட்டிடங்களாகவும் பார்க்கும்பொழுது மனது கொஞ்சம் அதிகமாகவே வலிக்கிறது.