BBCயின் இந்த மூடுவிழா யாரால்?

கேபிள் தொலைகாட்சி முறையை டிஜிட்டலாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றி, கெடுவும் கொடுத்து, பல முறை அந்த கெடுவை  நீடித்தும் கொடுத்தாகிவிட்டது. இன்னும் ஒன்றும் நடந்தபாடில்லை.CBeebies logo
இந்த டிஜிட்டலாக்கத்தால், நுகர்வோர் தேவையான சேனல்களை மட்டும் பணம் செலுத்தி பார்க்க முடியும். இதனால் மாதாந்திர கேபிள் செலவு மிக குறையும். தேவையில்லாத எந்த சேனலுக்கும் பணம் செலுத்த தேவையில்லை. அதுமட்டுமில்லால், சேனல்களின் ஒளிபரப்பு தரம் மிகவும் உயரும். மேலும், சேனல் உரிமையாளர்களுக்கு தேவையற்ற ஒளிபரப்பு செலவுகள் மிக குறையும். அதனால், அவர்கள் விளம்பரங்களை குறைக்க வாய்ப்புண்டு.
இந்த சட்டத்தால் தனக்கென சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள சேனல்கள், கேபிள் இயக்குபவர்களால் அலைவரிசை காரணம் காட்டி தனிமைப்படுத்த முடியாது. நிறைய முக்கியமான சேனல்கள் இப்படி காரணங்களால் ஓரங்கட்டப்படுகின்றன. கேபிள் இயக்குபவர் மனசு வைத்தால் தான் அந்த சேனல் உங்களுக்கு. இல்லை என்றால் என்றுமே கிடையாது.
 
அப்படி தனித்துவம் வாய்ந்த சேனல்களில் BBCயின் Cbeebies சேனலும், BBC Entertainment சேனலும் மிக முக்கியமானவை. Cbeebies எனக்கு மிகவும் பிடித்த ஒரு குழந்தைகளுக்கான சேனல். விளம்பரம் இல்லை, சினிமா இல்லை, வெட்டி பேச்சு இல்லை, அநாகரிகமான எந்த ஒளிபரப்பும் இல்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழ்ந்து ஆராய்ந்து ஒளிபரப்புகிறார்கள். அதில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் கூட குழந்தைகளை பாதிக்காதவாறு பயன்படுத்துவார்கள்.  என்னுடைய 2 வயது மகன் கடந்த  1 வருடத்தில் இதை பார்த்து தெரிந்துகொண்ட விஷயங்கள் பல. எந்த லாப நோக்கும் இல்லாமல் நடந்த இந்த சேனல் கற்றுகொடுத்த பல விஷயங்கள் நம்மூர் சேனல்கள் எத்தனை வருடங்களானாலும் சாதிக்க முடியாது. 
ஆனால் இப்பொழுது இந்தியாவின் நிறைவேற்றபடாத கேபிள் சட்டத்தால் இந்த சேனலையும், BBC Entertainment சேனலையும் BBC இந்தியாவில் நிறுத்திவிட்டது. BBCயின் அதிகாரி இதைப்பற்றி கூறுகையில் “உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் Carriage கட்டணம் என்று ஒன்றை நாங்கள் கட்டுகிறோம். விளம்பரம் இல்லாமல் இலவச சேனல்களை இந்தியாவில் கொடுக்க இன்னும் சரியான சூழ்நிலை அமையவில்லை. நாங்கள் நிறைய இழக்க தயாராயில்லை. கடினமான ஒரு முடிவு தான், ஆனால் நாங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்” என்றார்.
நமது  சட்டங்கள் இன்னும் பெரிய ஓட்டைகளை கொண்டுள்ளன என்பதற்கு இதுவே சான்று. உலகுக்கே தொழில்நுட்பம் கொடுக்கும் நாம், நமக்கும் நம் நாட்டின் வளர்ச்சிக்கும் கொடுக்க தயாரில்லை. ஏனெனில் தொழில்நுட்பம் சிலரது பல கோடி லாபத்தை பதம் பார்த்துவிடும்  என்பதற்காக அந்த பெரியவர்கள் செய்யும் நாடகங்கள் தான் இவையெல்லாம். 
கண்டிப்பாக பல இந்திய குழந்தைகள் இந்த சேனலுக்காக ஏங்கி கிடக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.