வங்கிகள் யாருக்காக?

“ஒரு துப்பாக்கி உங்களிடம் இருந்தால் வங்கியை கொள்ளை அடிக்கலாம். அதுவே உங்களிடம் ஒரு வங்கி இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்” – பில் மகேர் (https://en.wikipedia.org/wiki/Bill_Maher)

முதலில் படிக்கும்பொழுது சிரிப்பு வந்தது. ஆனால் அதன் அர்த்தம் புரிந்தபொழுது அதன் ஆழம் புரிந்தது. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு வங்கியில் உங்களுக்கு நல்ல சேவை வேண்டுமென்றால், நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும். ஏழையாக இருந்தால் உங்களுக்கு வங்கி பக்கமே வேலை இல்லை.

ஒரு சேமிப்பு கணக்கு உங்களுக்கு வேண்டுமா, குறைந்த மீதம் (Minimum Balance) ரூபாய் 10,000 அல்லது 5000 வைத்திருக்க வேண்டும். அதாவது உங்கள் கணக்கில் எப்பொழுதுமே 10000 ரூபாய் இருக்க வேண்டும், அதை நீங்கள் எடுக்க நினைக்க கூடாது. இல்லையேல் மாதத்தில் ஒரு நாள் 3 லட்சம் வைத்திருந்திருக்க வேண்டும். ஒரு வேலை உங்களுக்கு சிறு பண தேவை என்று ஒரு நாள் எடுத்து விட்டு மறுநாள் வங்கியில் செலுத்தி இருந்தாலும் உங்களுக்கு மிஞ்சுவது என்னவோ அபராதம் தான்.

வாங்க வாங்க என எல்லோரையும் வங்கி கணக்கு திறக்க வைத்துவிட்டு, எதற்க்கெடுத்தாலும் அபராதம் என்று நம்மை அறியாமலேயே நம் கணக்கில் இருந்து பணம் எடுத்து விடுகிறார்கள். அப்படி அவர்கள் அபராதமாக எடுக்கும் எந்த பணத்தின் விவரமும் உங்களுக்கு குறுஞ்செய்தியாக வரவே வராது. நீங்கள் விவரமாக இருந்தால், உங்கள் கணக்கு அறிக்கையை (Account Statement) பார்த்தால் மட்டுமே அபராத விவரங்கள் தெரியும்.

ஒரு கூலி தொழிலாளி அரசாங்கம் சொல்லுதேனு இவரும் ஒரு வங்கி கணக்கை திறந்துள்ளார். கணக்கில் 1500 ரூபாய் வைத்துள்ளார். பல மாதங்களாக பணம் எடுக்கவுமில்லை, பணம் போடவுமில்லை. பல மாதங்களுக்கு பிறகு ஒரு அவரச செலவுக்காக பணம் எடுக்க சென்றுள்ளார். ATMல் பணம் இல்லை என்று வந்ததற்கு, வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அவர்கள் ஒரு பெரிய லிஸ்டே கொடுத்து இருக்கிறார்கள். டெபிட் அட்டைக்கு வருட கட்டணம், SMSக்கு வருட கட்டணம், குறைந்த பட்சம் பணம் வைப்பு இல்லாததால் அதற்கு அபராதம் என சொல்லி, இருந்த பணம் போனது பத்தாமல் இன்னும் இவர் 150 ரூபாய் கட்டவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். போதுமடா சாமி என்று அன்றைக்கு முழுக்கு போட்டவர்தான், வங்கி பக்கமே செல்லவில்லை.

சமீபத்தில் கேட்ட ஒரு நகைச்சுவை இதற்க்கு நன்றாக பொருந்தும். “நானே காசில்லேனு இருக்கேன். இதுல இவனுக காசு இல்லேன்னு அபராதம் போடுறாணுக. காசு இருக்குறவன்கிட்ட வட்டின்னு மேலும் காசு கொடுக்குறாணுக. என்ன கொடுமைடா இது”

இணையம் மூலமாக பணம் மற்றொருவருக்கு அனுப்பினால் (NEFT) முதலில் எந்த சேவை கட்டணமும் கிடையாது என்றார்கள். இதனால் வங்கிகளில் கூட்டம் குறையும் என்றார்கள். கொஞ்ச நாள் கழித்து இப்போ ஒரு பரிவர்த்தனைக்கு 2 ரூபாய் 50 பைசா பிடிக்கிறார்கள். இதுவே நான் காசோலையாக நான் கொடுத்தால் அந்த காசோலையின் மதிப்பு இரண்டு ரூபாய் தான். அதாவது ஒரு காசோலை இலையின் மதிப்பு. ஆக நான் என்னுடைய தொழிலில் எல்லோருக்கும் காசோலை கொடுத்தால் எனக்கு லாபமே. ஆனால் வேலை வங்கிக்குத்தான். இப்படி NEFT செய்யும் சேவைக்கட்டணம் மட்டும் தோரயமாக மாதம் 4000-5000 ரூபாய் வந்துவிடுகிறது என்னுடைய தொழில் வங்கி கணக்கில். வருடத்திற்க்கு கணக்கு பார்த்தால் தோரயமாக 50,000 ரூபாய். ஒரு சிறு தொழிலுக்கு இது எவ்வளவு பெரிய பாரம். இணைய பரிமாற்றத்துக்கு மாறுங்கள் என்கிறார்கள். மாறினால் மாற்றம் ஒன்றுமில்லை.

உங்களுக்கு வங்கியில் இருந்து கடன் வேண்டுமா? உங்கள் சொத்து பத்திரத்தை அவர்களிடம் பதிவு செய்து கொடுங்கள். அப்பொழுதுதான் கடன் கிடைக்கும். உங்களிடம் சொத்தே இல்லையா, தயவு செய்து அவர்களை தொந்தரவு செய்து அவர்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அவர்கள் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

மோடி சொன்னார், அருண் ஜெட்லி சொன்னார், சிறு தொழிழுக்கு எந்த உந்திரவாத பத்திரமும் தேவையில்லை, எல்லா வங்கிகளிலும் எழிய முறையில் கடன் கிடைக்கும் என்று எண்ணி வங்கிக்கு நடக்காதீர். ஒன்றும் நடக்காது. “போன மாசம் தானே 12,000 கோடி மத்திய அரசு வங்கிகளுக்கு கடனாக கொடுத்து, சிறு தொழிழுக்கு எந்த சொத்து பத்திரமும் கேட்காமல் கடன் கொடுங்கள் அப்பொழுதுதான் நாடு வளரும் என்றனர்” என்று நானும் கேட்டு பார்த்தேன். நாளைக்கு நீங்கள் கட்டவில்லை என்றால் மோடியா வந்து கட்டுவார். அத்தன பத்திரம் கொடுத்த மல்லையாவையே நாங்க ஒன்னும் செய்ய முடியல. இதுல உங்கள எங்க நாங்க தேடுறது. இப்படி  நான் கேக்கலீங்க. என்ன பார்த்து அந்த வங்கி ஊழியர் கேட்டார். ஆக நான் என்னுடய சொத்து பத்திரத்தை உங்களிடம் பதிவு செய்து கொடுத்தால் தான் எனக்கு கடன் கிடக்கும்? அதாவது நான் பணக்காரராக இருந்தால், பணக்காரன் என்று நிரூபித்தால் மட்டுமே என்னை மேலும் ஊக்குவிக்கும் இந்த வங்கிகள்.

நியமாக, நேர்மையாக தொழில் செய்யும் யாருக்கும் இங்கே வங்கிகளில் பெரியதாக வேலை இல்லை. யாரைக்கேட்டலும் உங்களுக்கு மேலாளர் தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்தால் தொழில் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.  அப்போ எனக்கு வங்கிகளில் இருந்து கடன் கிடைக்க என்னுடைய தொழில் திறமையும், என்னுடைய தொழில் நேர்மையும் இந்த வங்கிகளுக்கு தேவையில்லை? காக்கா பிடிக்க தெரிந்தால் போதுமோ?

பொதுத்துறை வங்கிகள் பலலட்சம் கோடியை லாபமாக வருடவருடம் ஈட்டுகிறது. பொதுத்துறை என்றாலே, லாப நோக்கம் இல்லாமல் அல்லவா இருக்க வேண்டும். அதற்காக நட்டத்தில் இயங்க தேவையில்லை. ஆனால் இவ்வளவு லாபம் தேவையில்லையே. நடுத்தர மக்களிடம் எல்லாரும் சுரண்ட ஆரம்பித்தால் இன்னும் சுரண்ட என்ன இருக்க போகிறது.