அவ்ளோ சுலபமா உங்கள விடமாட்டோம்

ஒரு நாள் ஏர்டெல்லில் இருந்து அழைப்பு வந்தது.

மறுமுனையில்: “சார் இப்போ நாங்க ஹை-ஸ்பீட் மோடம் மாத்தி கொடுத்துகிட்டு இருக்கோம். இந்த மோடம் மூலமா உங்க இண்டர்நெட் ஸ்பீட் 16Mbps முதல் 40 Mbps வரை இருக்கும். இதற்க்கு நீங்க ரூபாய் 1000 மட்டும் கட்டினால் போதும்” என்றார்கள். (நான் உடனே அவர்களுடைய வெப்சைட்டை எனது கணினியில் தட்டினேன்)
நான்: “உங்களுடைய வெப்சைட்ல மோடம் இலவசம் என்றல்லவா இருக்கிறது”
மறுமுனையில்: சார் அது புது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.
நான்:ப்போ இவ்ளோ நாளா வாடிக்கையாளர்களா உங்களுக்கு வருமானம் கொடுத்த நாங்க எல்லாம்? அதுவும் நான் கடந்த 10 வருடமா உங்களுடன் இருக்கும் எனக்கு என்ன பலன்?
மறுமுனையில்: மன்னிக்கவும் சார். தற்போதைக்கு இது தான் offer.
நான்: என்னது நான் பணம் கட்டி பொருள் வாங்குவதா offer? எனக்கு வேண்டாம். நன்றி என கூறி தொடர்பை துண்டித்து விட்டேன்.

ஒரு மாதம் கழித்து மீண்டும் இதே போன்று ஒரு அழைப்பு. ஆனால் இப்பொழுது ரூபாய் 1000க்கு பதிலாக ரூபாய் 500 என்றார்கள்.
நான்: இல்லமா. எனக்கு விருப்பமில்லை.
மறுமுனையில்: ஏன் சார்?
நான்: இலவசமா கொடுக்கிறதா இருந்தா சொல்லுங்கள். இல்லை என்றால் எனக்கு விருப்பமில்லை.
மறுமுனையில்: சார், வேண்டுமென்றால் மாதம் 100 ரூபாயாக 5 மாதம் கட்டுங்கள்.
நான்: மீண்டும் சொல்கிறேன், எனக்கு விருப்பமில்லை. தொந்தரவு செய்யாதீர்கள் என கூறி மீண்டும் துண்டித்து விட்டேன்.

மீண்டும் கொஞ்சம் நாள் கழித்து அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. இந்தமுறை வேறு வடிவில்.

மறுமுனையில்: சார் நீங்க இப்போ 999 பிளானில் 100GB உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். அது கூட இந்தியா முழுக்க இலவச அழைப்புக்கு 50 ரூபாய் அதிகமாக கட்டி கொண்டு இருக்குறீர்கள். இப்போ 100 ரூபாய் அதிகமாக, ரூபாய் 1099 பிளானில் உங்களுக்கு நாங்க இலவசமா புது அதிவேக மோடம் மாத்தி கொடுக்கிறோம். கூடவே 100GB க்கு பதிலாக  200 GB கிடைக்கும். மேலும் இலவசமாக 10 GB யும், இந்தியா முழுக்க அழைப்பும்  இலவசம்.
நான்: (இது இன்னும் பயங்கரமா இறுக்கே என நினைத்துக்கொண்டு) எனக்கு விருப்பமில்லை.
மறுமுனையில்: காரணம் தெரிந்துகொள்ளலாமா சார்?
நான்: முதலில் நான் இலவச அழைப்புக்கு 50 ரூபாய் அதிகமாக  நான் கட்டுவதில்லை. அந்த வசதியுடன் சேர்த்தே 999 ரூபாய் கட்டுகிறேன். இரண்டாவது, உங்கள் வெப்சைட்டில் ரூபாய் 999க்கே 200GBயும், இலவச அழைப்புகளும் கொடுப்பதாக உள்ளது. அதனால் நான் ஏன் அதிகமாக 100 ரூபாய் கட்ட வேண்டும்?
மறுமுனையில்: இல்ல சார் நீங்க இலவச அழைப்புகளுக்கு 50 ரூபாய் கட்டிகொண்டிருக்கிறீர்கள். மேலும் நூறு ரூபாய்க்கு அதிகமாக 10GB தருகிறோம்.
நான்: பில் கட்டுவன் நான், எனக்கும் தெரியும் நான் எவ்வளவு கட்டுகிறேன் என்று. மேலும் எனக்கு அந்த 10GBயில் எனக்கு ஆர்வம் இல்லை. அதனால் 999க்கு நீங்கள் இலவச ஹைஸ்பீட் மோடமும், 200GBயும் கொடுப்பதாக இருந்தால் எடுத்துக்கொள்கிறேன்.
மறுமுனையில்: ஓகே சார். உங்களுக்கு ஒரு வாரத்தில் மாற்றி கொடுக்கப்படும்.
நான்: நன்றி. இதனுடைய ரிக்வெஸ்ட் எண் கொடுக்க முடியுமா?
மறுமுனையில்: உங்களுடைய மொபைல் நம்பருக்கு SMS வந்திடும் சார்.
நான்: பரவாயில்லை. நீங்கள் இப்பொழுது தாருங்கள் என கூறி வாங்கி கொண்டேன். (இதன் முக்கியத்துவம் எனக்குத்தானே தெரியும்)

ஏர்டெல் தோரயமாக 20 லட்சம் வீட்டு இணைய இணைப்பு வைத்துள்ளது. ஒரு இணைப்புக்கு 500 ரூபாய் வசூலித்தால் அதன் வருமானத்தை நீங்களே கணக்கு செய்துகொள்ளுங்கள். அல்லது மாதம் நூறு ரூபாய் அதிகமாக வசூலித்தால் அவர்களுடைய மாத வருமானத்தையும், வருட வருமானத்தையும் கணக்கு செய்து பாருங்கள். இது உபரி வருமானம் மட்டுமே.

இது மட்டுமல்ல. ஜியோ அறிமுகப்படுத்தியதற்கு பின்பு ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு நிறைய மாற்றம் கொண்டுவந்தது. பழைய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் உபயோகப்படுத்தும் பிளானிலோ அல்லது அதைவிட மாத வாடகையை குறைத்தோ அதிக பலன்கள்களை கொடுத்தது. ஆனால் அதில் வேடிக்கை என்னவென்றால் நீங்கள் எத்தனை வருட வாடிக்கையாளர்களாக இருந்தாலும் நீங்கள் அவர்களை அழைத்து புது பலன்களை கேட்காவிட்டால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது, அது எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி. எடுத்துக்காட்டாக, நான் மாதம் 549 பிளானில் இருந்தேன். பிறகு அதே பிளானை 499க்கு மாற்றினார்கள். மேலும் புது பிளானில் அதிக பலன்கள் கொடுத்தனர்.  பலமாதம் நான் இதை கவனிக்கவில்லை. எனக்கு பல மாதங்களாக பழைய பிளானிலேயே பில் அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். நான் கூப்பிட்டு கேட்டவுடன் தான் பிளானை மாற்றினார்கள். ஏன் இப்படி ஒரு ஏமாற்று வேலை?

வாடிக்கையாளாரே கடவுள் என்பதெல்லாம் போதிக்க நன்றாக இருக்கிறது. பலகோடி வாடிக்கையாளர்களை கொண்ட பொது நிறுவனங்கள் ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை? இத்தனை கோடி மக்கள் தங்களை கவனிக்கிறார்கள் என்று ஒரு எண்ணம் ஏன் இல்லை? தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நினைப்போ? மாற்று நேர்மையான நிறுவனமும் இல்லாததே இதைவிட கொடுமை.