வெகுமதி கொடு

இன்று நாம் நம்மை அறியாமலேயே ஒரு புது பழக்கத்தை நம் வாழ்கையில் பின்பற்ற தொடங்கி இருக்கிறோம். டிப்ஸ் என்னும் சிறு லஞ்சம் தான் அது.Rupees

சம்பளம் கொடுத்து வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு நாம் ஆரம்பத்தில் சிறிய இனாமாகவும் அவர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்க நம்மால் முடிந்த சிறு உதவியும் செய்ய ஆரம்பித்த விதமே இந்த டிப்ஸ் எனும் வெகுமதி. இன்று எல்லாருக்கும் நாம் கட்டாயமாக கொடுக்க வேண்டியதாகி போய்விட்டது. நாம் வாங்கும் பொருளுக்கு ஒரு விலையும் கொடுத்து, அதற்கு மேலே சின்ன வெகுமதியும் கொடுக்க வேண்டிய கட்டாயம்.

இன்று டிப்ஸ் கொடுக்காமல் எந்த ஒரு வேலையும் நாம் வாங்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அப்படி நீங்கள்  கொடுக்கவில்லை என்றால் அடுத்த முறை அவர்களிடம் இருந்து உங்களுக்கு சரியான முறையில் அவர்களின் சேவையை பெற முடியாது.  நான் எல்லாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஆனால் பெரும்பாலானோர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் ஒவ்வொரு இடத்திலும் நாம் நம்மை அறியாமல் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சில எடுத்துக்காட்டுகள் இங்கே…

  1. தொலைபேசியை இணைப்பு மற்றும் பழுது பார்க்கும் நபருக்கு. அதுவும் இவர்களுக்கு புது இணைப்பின் போது  குறைந்தது 100 ரூபாய் தர வேண்டும்.
  2. வீட்டுக்கு சமையல் எரிவாயு கொண்டு வந்து தரும் நபருக்கு நீங்கள் குறைந்தது 20 ரூபாய் வெகுமதி தரவில்லை என்றால் அடுத்த முறை நீங்கள் எத்தனை முறை கேட்டாலும், தாமதமாகத்தான் வந்து சேரும்.  கேட்டால் டெலிவரி செலவு என்பார்கள்.
  3. வீட்டில் மின்சாரம் பிரச்னை என்றால் வந்து சரி செய்யும் மின்சார ஊழியருக்கு நீங்கள் சிறு வெகுமதி கொடுக்கவில்லை என்றால் மேலே சொன்ன கதி தான் அடுத்த முறை நீங்கள் அவரின் உதவியை நாடும்போது.
  4. அடிக்கடி செல்லும் உணவு விடுதியில். நீங்கள் ஒவ்வொரு முறையும் வெகுமதி தருபவர் ஆனால், உங்களுக்கு அங்கு கிடைக்கும் மரியாதையே தனி.
  5. நீங்கள் வெளியூர் சென்றால் தாங்கும் விடுதில் நீங்கள் சேவைக்காக பணியாளர்களை அழைக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் வெகுமதி தரவில்லை என்றால், அடுத்த முறை அவர்கள் முகத்தில் புன்சிரிப்பை பார்க்க முடியாது.

இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம். இங்கே நான் சொன்னது எல்லாம் மிக குறைந்த எடுத்துக்காட்டுதான். இதில் எல்லாவற்றிலும் நமக்கு புரிவது என்னவென்றால், ஒருவர் நமக்கு சிரித்த முகத்துடன் சேவை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்களை நாம் தனியாக கவனிக்க வேண்டும்.

மேலும் நாம், நமது வேலை சுலபமாக முடியவும், நமக்கு சிறந்த சேவை கிடைக்கவும் இதைப் பற்றி நாம் கவலைப்படுவதாக இல்லை. நீங்கள் மாதம் முழுவதும் கொடுக்கும் வெகுமதியை கணக்குப் பார்த்தால் தான் தெரியும்.

இது நாம் பிரியப்பட்டு கொடுப்பதாகவே எடுத்துக்கொள்வோம்… கண்டிப்பாக அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் தான். நாம் கொடுக்கும் இந்த சிறு வெகுமதியால், நாம் ஒன்றும் குறைந்து விடபோவதில்லை. கோடிகளில் ஊழல் நடக்கும் நம் நாட்டில் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள யாரும் இல்லை.

ஆனால் என் வேதனை எல்லாம், ஏன் வெகுமதியை பொறுத்து சேவை செய்யப்படுகிறது? ஒருவர் டிப்ஸ் தரவில்லை என்றாலோ, அல்லது அவர் கொடுக்கமாட்டார் என்று ஒரு எண்ணம் உருவானாலோ, ஏன் அவர்களுக்கு சரியான முறையில் சேவை செய்யப்படுவதில்லை? சில இடங்களில், கேட்டு வாங்குவோரும் உண்டு.

ஊழியர்களிடம் இந்த எண்ணம் மாற உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும்.