விவசாயிகளால் என்ன செய்யமுடியும்?

நமது உறவுகள் ஆடையின்றி, மானத்தை இழந்து அங்கே தலைநகரில் நடு ரோட்டில் TN-farmers-at-Jantar-Mantarபோராடிக்கொண்டிருக்கிறது. மான தமிழச்சி தன் உயிரின் மேலாக கருதும் தன் மானத்தையே விட்டு அங்கே பிச்சை கேட்கிறாள். தமிழ்நாடு அரசாங்கமும் தன் உட்கட்சி பிரச்சனையை விட்டு வருடமாகியும் வெளியே வரமுடியவில்லை. இதில் மற்ற பிரச்சனைகளை எங்கே பார்ப்பது.  கண்டுகொள்ள ஆளில்லை, எடுத்து சொல்ல தேசிய பத்திரிக்கைகள் தயாராக இல்லை. ஏன் தமிழ் நாளிதள்களே பெரியதாக கண்டுகொள்ளவில்லை. இதுவும் ஒரு செய்தி, அவ்ளோதான்.

அடேய் அங்கே இருப்பது இத்தனை நாளா நமக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி சோறு போட்ட தொழிலாளி மட்டுமில்லை,  நம்ம அப்பனும், அம்மாளும், அண்ணனும், மாமனும், மச்சானும் தான். அவனுக்காகவா அங்கே மானத்தை விற்றுக்கொண்டிறுக்கிறான்? என்னையும் உன்னையும் படிக்கவைக்க, வாழ்க்கை அமைய, சோறுபோட்ட  அந்த பூமி இன்னைக்கு எதை விதைத்தாலும் ஏமாற்றுகிறதே என்றும் வாழ வழியின்றி சில உறவுகள் தன் உயிரை மாய்த்துக்கொண்டதற்க்கும் ஒரு வழி கேட்டு தானே கை ஏந்தி நிற்கிறான். வானத்தை நம்பி இருந்த போதெல்லாம் எப்படியோ சமாளிக்கலாம் என்று இருந்தவன் இப்போ மழையும் பொய்த்ததாலே தானே உன்னிடம் நிற்கிரான்.

20 வருடத்திற்கு முன்பு ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 257 மட்டுமே. அதே ஒரு கிராம் தங்கத்தின் இன்றைக்கு விலை 2700 ரூபாய். அரிசியோ இல்லை வேற எதாவது விவசாய பொருளோ இப்படியா விலை ஏறியிருக்கிறது? அன்றைக்கு விவசாயி மகனை படிக்க வைத்து, வீட்டையும் கட்டி, மகன் மகளுக்கு நகை எடுத்து திருமண செலவையும் செய்ய முடிந்தது. இன்றைக்கு பள்ளிகூடத்துக்கு அனுப்பவே காட்டையும் பொண்டாட்டி தாலியும் விக்கிறான். மற்றத்துக்கு மிஞ்சி இருப்பது மானமும் உயிரும் மட்டுமே.

கார்ப்பரேட் காரனை குளு குளு அறையில் அழைத்து அவனுக்கு தேவையான பிரச்சனைகளை கேட்கிறாயே அரசே, நீ என்ன பெட்ரோலையும், காரையும், சிம் கார்டையுமா உண்டு வாழ்கிறாய்? நீ சாப்பிடுவதும் இந்த விவசாயின் வேர்வையில் வந்த அரிசியையும் கோதுமையும் தானே? அவன விட இவன் என்ன விதத்தில் ஏளனம்?  இவனை அழித்து பின்னாளில் எதை சாப்பிட போகிறாய்? இப்படியே போனால் நம் நாடு சோமாலியா போல் ஆக வெகுநாளில்லை. நம் சொந்தங்கள் நம் முன்னே அழியும் காலம் வெகு விரைவில் வரும்.

இளைஞர் சமுதாயமே நம்மால் முடிந்ததை செய்யும் நேரமிது. நம்மில் நிறைய பேர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். உங்களால் முடிந்தவரை போராட்டதுக்கு உதவுங்கள். உங்கள் ஊரில் இருந்து இன்னும் சிலர் டெல்லி செல்ல பண உதவி செய்ய முடிந்தால் தயவு செய்து யோசிக்காதீர்கள். இது சம்பந்தமான செய்திகளை உங்கள் முகநூலில் அதிகம் பகிருங்கள். சிறு சிறு உதவியும் இப்பொழுது மிக முக்கியம்.

விவசாயிதானே என்ன பண்ணமுடியும் என்ற ஏளனமோ? அவன் கலப்பையில் கை வைக்கவில்லை என்றால் நீ சோற்றில் கை வைக்க முடியாது. மறவாதீர்.

#SaveFarmers #StandWithFarmers #TNFarmers