நேற்று மலை 7 மணி அளவில் எனது பைக்கில் கோவை அவினாசி ரோட்டில் சென்றுகொண்டிருந்தேன். PSG கல்லுரி அருகே சென்று கொண்டிருக்கையில், திடீர் என்று ஒரு ஸ்கூட்டி வாகனம் ஒன்று என் வண்டியின் மேல் வலது பக்கமாக இருந்து லேசாக மோதியது. உடனே நான் “ஏய்ய்ய்ய்……” என்று சத்தம் போட்டேன். எதுவும் ஆகவில்லை. இருந்தாலும் சின்ன ஒரு பயத்தில் போடும் சத்தம் அது. எதுவும் ஆகவில்லை என்ற உடனே, நான் கண்டுகொள்ள வில்லை. வண்டியை திரும்பி எடுக்கலாம் என்ற பொழுது, அந்த வண்டியில் இருந்து திரும்பி சத்தம் வந்தது…. “டேய்ய்ய்ய்ய்…..” என்று. நான் வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தேன். இரண்டு இளைஞர்கள், 20 வயதுக்குள் இருப்பார்கள், அனேகமாக கல்லூரி முதலாம் ஆண்டில் இருப்பார்கள். இரண்டு பேர் கையுலுமே சிகரெட். பக்கத்தில் வந்து “என்ன சத்தம் போடுற, வண்டியை ஓரம் கட்டுடா”… என்றார்கள். சரி, இவங்க கிட்ட பேசினா தேவை இல்லாத வாய் பேச்சும், தகராறும் என்று நினைத்து நான் வண்டியை எடுத்து கிளம்பிவிட்டேன்.
நான் பயந்து போறேன் என்று நினைத்தார்களோ என்னவோ…கொஞ்ச தூரம் தான் சென்று இருப்பேன்…. திடீர் என்று என்னை வேகமாக கடந்து, பின்னாடி இருந்த அந்த இளைஞன் கையை உயர்த்தி “டேய் தொலச்சுபுடுவேன், ஒழுங்கா போய் சேரு” என்று சத்தமாக கத்தினார். இன்னும் அவர் கையில் சிகரெட்.
இது கண்டிப்பாக இளவயதில் பணத்தினால் வந்த திமிரு என்று என்னால் கூறமுடியவில்லை. நமது சமுதாயம் கற்றுக்கொடுத்ததை தான் அவர்கள் பிரதிபலித்தார்கள். அது சினிமா வாயிலாகவோ, அல்லது அவர்களை சுற்றி நடந்த சம்பவங்களின் மூலமாகவோ கற்ற விசயங்களாக இருக்கும். நிச்சயமாக நாமும் அதற்கு உறுதுணையாக இருக்கிறோம். நாம் செய்வதைப் பார்த்து தான் மற்றவர்கள், குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் கற்று கொள்ளுகிறார்கள். நாம் சமுதாயம் தான் அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் கற்றுக்கொடுக்கிறது. நம்முடைய இளைஞர் சமுதாயத்தை இப்படித்தான் தயார் படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.