நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல படம் பார்க்க முடிந்தது. வசந்தபாலனுக்கும் அவரது அணியினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளார்.
18ம் நூற்றாண்டை நம் கண்முன்னே நிறுத்தினாரோ இல்லையோ, அக்காலத்தின் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் ஆராய்ந்து நம்மை உணர வைக்கிறார். ஒரு அரசன் எப்படி, மக்கள் எப்படி, களவு காண்பது, காவல் காப்பது என ஒவ்வொன்றும் கனக்கச்சிதம். வரலாற்றை நாம் சிறிதளவேனும் தெரிந்து கொள்ளாமல் படத்தைப் பார்த்தால் நான் சொல்வது மிகையாகத் தான் தோன்றும். ஏனெனில், நாம் படித்த வரலாறு எல்லாம் அரசன் என்பவன் வீரன், மாவீரன், நல்லவன் என்பது மட்டும் தான். வரலாற்றில் மறுபக்கத்தில் அவர்களைப்பற்றி நம் புத்தகங்கள் எப்பொழுதுமே சொல்லியதில்லை. அதைத்தான் அரவான் சில இடங்களில் நறுக்கென சுட்டிக்காட்டியுள்ளது. மனிதனை பலி கொடுப்பது அன்று தோன்றிய ஒரு தண்டனை என்று நினைத்தால், நாம் என்ன மாறிவிட்டோம் என்று எண்ணி கேவலப்படத் தோன்றாமல் இல்லை.
பசுபதி, ஆதி…படத்தின் ஆணி வேர்கள். இன்றைய இளைய சூப்பர் ஸ்டார்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. அழகான முகம் கிடையாது, பஞ்ச் வசனங்கள் கிடையாது, வெளிநாட்டில் பாட்டு கிடையாது. பதிலுக்கு உடம்பில் கரியை பூசிக்கொண்டும், கரை பற்களோடும் நடிக்க எத்தனை பேர் தயாராக உள்ளனர்? ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அருமையாக கதையில் பொருந்தி இருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களின் பங்கை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இந்தப் படம் நம் ஊரில் வெற்றி பெருமா என்று தெரியவில்லை. தியேட்டரை விட்டு வெளியே வரும் பொழுது பல பேர் சலித்துக்கொண்டு தான் வந்தார்கள். ஒரு நாவலை படம் செய்வது மிகுந்த கடினமான செயல். அதை இவ்வளவு நேர்த்தியாக யாரும் செய்திருக்க முடியாது. ரசித்துப்பார்த்தல் கண்டிப்பாக இது ஒரு சிற்பியின் மாபெரும் ஓவியம் தான். வெயில், அங்காடித் தெரு, இப்பொழுது அரவான். ஒவ்வொன்றும் ஒரு மைல் கல்.