யார் மாறினாலும், மாறாத விஷயம்

காலை, மதியம், மாலை, இரவு எந்த நேரமானாலும் டி.வி.யில் நம்ம  மியூசிக் சேனல்களை பார்த்தால், எப்பொழுதும் ஒரே பேச்சு தான் இருக்கும். என்றாவது தொடர்ந்து அரை மணி நேரம் கவனித்து உள்ளீர்களா? இல்லை என்றால் நேரம் tvகிடைக்கும்போது பாருங்கள். என்றுமே மாறாத ஒரு விஷயம் என்றால் இவர்கள் பேச்சு தான்.

(பேச்சு நடையில் எழுதியுள்ளேன், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்).

“வணக்கம். உங்க பேரு சொல்லுங்க”
– சுந்தர்.
“எப்படி இருக்கீங்க சுந்தர்”
– நல்லா இருக்கேன் மேடம். நீங்க அழகா இருக்கீங்க.
“தேங்க்ஸ் சுந்தர். என்ன பண்ணுறீங்க?”
– நான் தேனாம்பேட்டையில் ஒரு ஹோட்டலில் வேலை பாக்குறேன் மேடம்.
“உங்க வேலை எல்லாம் எப்படி போகுது”
– நல்லா போகுது மேடம்.
“உங்கள மாதிரி வாழ்க்கையில மற்றவங்க முன்னேற என்ன பண்ணனும்னு நீங்க நினைக்குறீங்க?”
– கஷ்ட படணும் மேடம்.
“அருமையா சொன்னீங்க.  இப்போ அவருக்கான ஒரு சூப்பர் பாட்டு ஒன்னு வந்துகிட்டே இருக்கு, பாத்து என்ஜாய் பண்ணுங்க”

மொக்க பாடல் ஒன்று வரும். அது முடிந்த பிறகு… நம்ம போன காலருக்காக ஒரு அற்புதமான பாடல் ஒன்றை பார்த்தோம். நம்ம ஷோல அடுத்த காலர் யாருனு பாப்போம் …

“ஹலோ”… அதே கேள்விகள், அதே விதமான பதில்கள். இடை இடையே “உங்க டிவி வால்யுமை கொரைங்க (என்ன தமிழோ?), உங்களோட வாழ்த்துக்கள் யாருக்கு சொல்லணும்?” என சில புதிய அற்புதமான கேள்விகள் வரும். ஒரு நாள் முழுதும் இவர்கள் கேட்கும் கேள்வியை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி விடலாம்.

இன்னொரு ஷோவில்

கேள்வி: “உங்க மனைவிகிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம்”
பதில்: “அவங்க மாடர்ன் டிரஸ் போட்டா ரொம்ப அழகா இருப்பாங்க.”
“இல்லேங்க, அவங்ககிட்ட உங்களுக்கு பிடிச்ச அவங்களோட கேரக்டர் ”
“அவங்க நல்லா சமைப்பாங்க”

அழகா பதில் சொன்னார். அவருக்காகவும், அவரது மனைவிக்காகவும் ஒரு அழகான பாடல் வருது… பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

நம்ப மாட்டீங்க, வந்த பாடல் என்ன தெரியுமா?. மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் வரும் “சிவ ராத்திரி” பாடல்.

அட அதை விடுங்க. அதெப்படி காலைல 7 மணினாலும் சரி, இரவு 11 மணினாலும் சரி… ஒரு நாள், ஒரு நிமிஷம் கூட போன் வராம ஷோ நடந்ததே இல்ல. நம்ம மக்கள் போன் பண்ண வரிசையில காத்துகிட்டு இருக்காங்களா இல்லை இவர்களே போன் பண்ண ஆள் வச்சு இருக்காங்களா? ரெண்டுல எதாவது ஒன்று கண்டிப்பாக உண்மை.

யார் வேணாலும் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றாகிவிட்டது. 10 நிமிடம் நேயர்களிடம் தொடர்ந்து பேச சொன்னால் சத்தியமாக அவர்களால் பேச முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு பேச ஒன்றுமே தெரியாது என்பதுதான். எல்லாத்துக்குமே, சிரிச்சே மழுப்புவார்கள். இவ்வளவு மக்கள்தொகை உள்ள நம்ம நாட்டில் நல்ல ஆட்களே கிடைக்கவில்லையா?

இல்லை, யார் அறிவுடன் வேலைக்கு வந்தாலும், மூளையை எடுத்து மூலையில் வைக்க சொல்லி விடுவார்களா? பொழுதுபோக்கு தேவைதான். அதற்காக 24 மணி நேரமும் இப்படியே பண்ணினால், கண்டிப்பாக மக்களை கே**ப் பசங்கள் என்றுதான் நினைப்பார்கள் போல.

இது பரவாயில்லை, காசுக்காக இவர்கள் போடும் அந்த(ரங்க) வேலைகளை கவனித்துள்ளீர்களா? நிகழ்ச்சியின் போது கீழே சின்ன கட்டத்தில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMSம் போடப்படும்.நம் பொதுஜனம் அனுப்பும் SMS அவ்வளவு அருமையாக இருக்கும்.

உதாரணத்துக்கு சில

  1. Hi Meenu darling, miss u
  2. i love my nithi. this song for her
  3. guna can v meet today evening

டிவிக்காரன் காசுக்காக 5 இலக்க எண்ணை வாங்கி, அதில் உங்களை SMSஐ அனுப்ப வைக்கிறான். அந்த நம்பருக்கு அனுப்பும் ஒவ்வொரு SMSக்கும் உங்கள் கணக்கில் இருந்து 5 ரூபாய் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதில் ஒரு பகுதி, தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் செல்கிறது.

நம்மள வச்சு எப்படி எப்படி எல்லாம் சம்பாதிக்குறாங்க. உண்மையிலுமே திறமையானவர்கள் தான். இன்றைக்குத்தான் வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி இலவசத்தில் கத்திக்கொண்டிருக்கிறதே. இவர்களின் வலையில் மாட்டி இந்த கேவலத்தில் வைத்திருக்கும் கொஞ்ச காசையும் இழப்பவர்கள் கீழ்தட்டு மக்கள் தான்.

வானொலியில் இதைவிட அருமையாக இருக்கும். சில நிகழ்ச்சிகளில்

“டண்டனக்கா வணக்கம்”
– வணக்கம்
“ஹலோ  டண்டனக்கா வணக்கம்னு சொன்னா தான் நிகழ்ச்சிக்குள்ளே போக முடியும்”
(உள்ள போய் என்ன சாமி பண்ண போறீங்க?)
– “டண்டனக்கா வணக்கம்”
“சூப்பர். கேம்(Game) என்னனு தெரியுமா உங்களுக்கு”
– தெரியாது.
“நான் 3 பாட்டு சொல்லுவேன். அதுல திரிஷா எந்த பாட்டுல சேலை கட்டிட்டு வருவாங்க னு நீங்க டக்குனு சொல்லணும்”
– OK சார்.

போங்க  பாஸ், இவங்க எப்பவுமே இப்படித் தான்.

நான் ஒன்னும் மிகைப்படுத்தி எழுதவில்லை. ஏறக்குறைய எல்லா நிகழ்ச்சிகளுமே இப்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களை குறை சொல்வதா இல்லை நம் பொது ஜனத்தை சொல்வதா என்பதில் குழப்பம் தான். எது எப்படியோ, இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான் நம்மையும், நம் சமுதாயத்தின் வளர்ச்சியையும் (கேவலமாக) பிரதிபலிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.