யார் கட்டுவது….????

73000 கோடிகள் தமிழ்நாட்டின் கடன்! ஒவ்வொரு தமிழனுக்கும் ரூ.10000. (தினமலர் செய்திகள்) debt

இது தினமலரின் முதல் பக்க செய்தி (மார்ச் 14, 2010). விரிவாக படித்து பார்த்தேன். ஒவ்வொரு ஆட்சியின் ஆரம்பத்தின் போதும், முடிவின் போதும் எவ்வளவு இருந்தது என்று பட்டியல் இட்டு இருந்தார்கள். இதுதான் கஜானா காலி என்று சொல்லுவதா என்று மனம் கவலைப்பட துவங்கியது. யார் ஆட்சியில் அதிகம் கடன் ஆகியது என்று கணக்கு பார்க்க மனம் ஏங்கவில்லை.

ஆனால், ஏன் இந்த நிலைமை என்று தான் கேட்க துவங்கியது?

அரசாங்கம் செய்த நல்ல காரியங்களை பட்டியலிட்டு பார்க்கலாமா? அப்படி என்றால், இதெல்லாம் செய்ய, கடன் தான் வாங்க வேண்டுமா? ஏன், இவை எல்லாம் அவர்கள் கடமை தானே…அந்த கடமையை செய்ய கடன் வாங்கியா செய்தார்கள்?

அப்படி அன்றாட பிரச்சனைகளுக்கு என்ன செய்தார்கள்?

1. மின்சார தட்டுப்பாட்டை நீக்க எதாவது செலவு செய்தார்களா? (இதை பற்றி தனி கட்டுரையே எழுதலாம்)
2. விலைவாசியை குறைக்க எதாவது நடவடிக்கை எடுத்தார்களா?
3. கல்வி துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவதற்காக செலவு செய்தார்களா?

பட்டியலிட்டு பிரித்து பார்த்தால் என் மனதுக்கு தோன்றிய தேவை இல்லாத பெரிய செலவுகள் இதோ சில. இன்று இருக்கும் பொருளாதார நிலைமைக்கு, தேவை இல்லாத செலவுகள்…

1. புது சட்டமன்ற கட்டிடம், மாபெரும் செலவுடன்
2. கூவம் அழகு படுத்துதல் (பல்லாயிரம் கோடிகள்)
3. இலவச சமையல் எரிவாயு மற்றும் அடுப்பு
4. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி (தண்ணீர் ஒரு லிட்டர் – ரூ.12, பொது அரசாங்க கழிப்பிடம் – ரூ.2, என்ன கொடுமை இது!)
5. இலவச காப்பீடு திட்டம்
6. செம்மொழி மாநாடு (எதற்காக இதற்கு 300 கோடி செலவு?)
7. இடை தேர்தல்கள் வேறு இடையில் செலவு செய்ய

ஒருவேளை இலவசம் இலவசம் என்று சொல்லி, மறைமுகமாக நம் தலையில் தலைக்கு ரூ.10,000/- என சுமத்தி விட்டார்களா?

சில பாராட்டுக்குரிய செயல்கள் (அனால் கடன் வாங்கியதற்கு அல்ல)

1. சென்னையில் நிலத்தடி மின்சார ரயில். வருங்காலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும்
2. மாநில நூலகத்திற்கு புது கட்டிடம்
3. 108 அவசர உதவி (இதன் விளம்பரத்திற்கு செலவு செய்த காசை, விபத்துகள் ஆகாமல் இருக்க குடிமக்களுக்கு போக்குவரத்து முன்னுணர்வை ஏற்படுத்த செலவு செய்து இருக்கலாம்)
4. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையை அழகு படுத்தியது
5. சாலைகளை மேம்படுத்தியது

ஆனால் நன் முன்பே கூறியது போல இதெல்லாம் அவர்களின் கடமைகளில் ஒன்றே!

அப்போ கடனை யார்தான் கட்டுவது?