மோடி மட்டும்தான் பலிகடாவா?

எங்கு பார்த்தாலும் லலித் மோடி பேச்சுத்தான். அவரைப் பற்றி செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றன. IPL இறுதி போட்டியில், போட்டியை பார்த்ததை விட, மோடியை பார்த்தது தான் அதிகம். வினாடிக்கு Lalit-Modi-001ஒருமுறை திரையில் தெரிந்தார். அவரைச் சுற்றியே நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு துரோகி போலவும், அவர் மட்டும் தான் தவறு செய்தது போலவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. பாவம் மனிதர், இறுதி போட்டியை கண்டிப்பாக ரசித்து இருக்க மாட்டார்.

ஆம், அவர் ஒரு சர்வாதிகாரியை போலவும், அவரே அனைத்து முடிவுகளும் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வாரம் இந்தியா டுடேயில் கூட அப்படி தான் எழுதி இருந்தார்கள். அவர் வளர்ந்த விதம் பற்றி கூட விவாதித்து இருந்தார்கள். ஆனால் வளர்த்து விட்டவர்கள் பற்றி அதிகம் இல்லை. ஆனால் ஏன் இவர் மட்டும் தான் குற்றவாளியா? குற்றவாளி கூண்டில் நிற்பவர் இவர் மட்டும் தானா?

என் மனதில் தோன்றும் சில கேள்விகள்….

  1. 3 வருடம் எங்கே போய் இருந்தார்கள் இந்த BCCI? இவர்களுக்கு தெரியாமலா? தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது ஏன்?
  2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரர்களையே தெரியவில்லையா? நல்ல காமெடி விஷயம்…
  3. இந்த ஏலம், வருமானம், கோடிகள் எல்லாம் முதல் வருடத்திலேயே தெரிந்து விட்டதே? கொச்சின் அணியின் மூலமாதான் தெரிய வந்ததா?
  4. IPL நிர்வாகத்தில் இருந்த மற்ற முன்னால் வீரர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் இவ்வளவு நாள்? இன்னும் அவர்களைப் பற்றி BCCIயோ அல்லது அரசாங்கமோ விசாரிக்காதது ஏன்?
  5. கிரிக்கெட்ஐ அலசி எடுக்கும் கவாஸ்கரும், ரவி சாஸ்திரியும் IPLன் பதவியில் இருந்து கொண்டு ஏன் இதைப் பற்றி இவ்வளவு நாள் கண்டுகொள்ளவில்லை? பணமா?
  6. பல கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது அணிகள், ஆனால் எப்படி ஒரு முறையான தொகுப்புகள் கூட இல்லாமல்? பணம் போட்டவர்களைப் பற்றி விபரம் இல்லாமல்?
  7. அணிகளை வாங்கி இருக்கும் அனைவரும் ஒரு பெரும் தொழிலதிபர்கள் தான். இப்படி தான் அவர்கள் தொழில் செய்வார்களா? அம்பானியையும் சேர்த்து தான். உருப்படியான கணக்கு வழக்கு இல்லாமல் எப்படி மூன்று வருடங்கள்?
  8. ஏன் அம்பானியோ, விஜய் மல்லையாவோ இன்னும் சரியான தகவல்களை சமர்பிக்கவில்லை? அரசு ஏன் இதுவரை இதை கேட்கவில்லை? பயமா?
  9. வசுந்திரா ராஜே தான் மோடி வளர முதன் முதலில் இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்படியென்றால், மோடி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவாரனதும் ஒரு விவகாரமான விசயமாச்சே? வசுந்தர ராஜேவும் பதவி விலகனுமா?
  10. சசி தரூர் மட்டும் தான் பகடை காயா?

இப்படி பதில் கிடைக்காத கேள்விகள் பல. ஆனால், இதில் ஒருவர் பெயர் மட்டும் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. அவர் செய்தது சரி என்று நான் வாதிடவில்லை. அவர் இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ஏன் அவரை மட்டும் இவர்கள் குற்றம் சொல்லுகிறார்கள். மோடியின் விளையாட்டில் பணம் சம்பாதித்தவர்கள் தானே இவர்கள் எல்லாம்.

சரியான முறையில் விசாரிக்கப்பட வேண்டும். அனைவரையும் விசாரிக்க வேண்டும். யார் குற்றவாளிகளாக இருந்தாலும் சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும். மோடியை மட்டும் குற்றவாளியாக பார்ப்பது தவறு. ஒரு சாராக பார்க்காமல், பொது கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.

“இவை எல்லாம் கடந்து போகும்”