மாண்புமிகு முதலமைச்சருக்கு ஒரு தமிழ் குடிமகன் எழுதும் கடிதம். எங்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் செவி கொடுப்பீர்களா என்று தெரியாது. இருந்தாலும், என் மனதில் தோன்றியவற்றை இங்கே தொகுத்துள்ளேன்.
ஒரு சாதாரண தமிழ் குடிமகனாக எங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. போன தேர்தலின் போது உங்களின் எதிர் கட்சி இலவசத்தை தேர்தல் அறிக்கையில் சேர்த்தபொழுது வெகுண்டு எழுந்த நீங்கள் வாய் நிறைய விமர்சனம் செய்தீர்கள். ஆனால் இந்த தேர்தலில் நீங்களும் போட்டிக்கு அவர் கடைக்கு எதிரிலேயே கடை விரித்தீர்கள். தமிழ் மக்கள் என்ன அவ்வளவு ஞாபக மறதிக்காரர்களா? இல்லை எங்களைப் பார்த்தால் ரொம்ப கேவலமாக தெரிகிறதா?
உங்களிடம் நிர்வாகத் திறமை சிறப்பாக உண்டு என்று பெரிய நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. குடும்பத்தோடு திருட உங்களுக்கு பெரிய குடும்பமும் இல்லை. உங்களை தாண்டி எந்த அமைச்சரும் தனித்து செயல்படவும் விட மாட்டீர்கள். ஆகவே தமிழகத்தில் முன்னேற்றம் நடக்குதோ இல்லையோ, கண்டிப்பாக பெரிய ஊழல்கள் நடக்காது. எங்களின் பணத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை கண்டிப்பாக எங்களுக்கு இருக்கிறது.
உங்களை நாங்கள் நிறைய புரிந்து வைத்து இருக்கிறோம். அவை எல்லாம் தப்பாக இருக்க கூடாதா என்று ஒரு நப்பாசை. எடுத்துக்காட்டாக..
- கண்டிப்பாக பலி வாங்கும் குணம் உள்ளவர் என்ற எங்களின் எண்ணம்
- நல்ல திட்டங்களோ, கெட்ட திட்டங்களோ… போன ஆட்சியில் ஆரம்பித்து இருந்தால் உடனே அதற்கு முட்டுக்கட்டை போடுவது. யாரோட தொழில் பாதித்தால் நமக்கு என்ன என்ற எண்ணம்
- நல்லதை எடுத்துக்கூட சொல்ல தெரியாத அமைச்சர்களை உங்களின் அரசில் வைத்துக்கொண்டு 5 ஆண்டுகளையும் வீணடிப்பது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த குணம் எல்லாம் மாறிவிடக் கூடாதா என்று என்னைப்போன்ற கோடிக்கணக்கான மக்களின் ஆசை.
எங்களின் எதிர்பர்ப்பெல்லாம் வேறு என்று எப்பொழுது புரிந்துகொள்வீர்கள்?
- எங்களுக்கு இலவசம் வேண்டாம். உழைத்து வாழ சரியான பாதை அமைத்துக்கொடுங்கள் என்று நாங்கள் கத்துவது உங்களின் காதுகளில் விழவில்லையா? தயவு செய்து எல்லா இலவசதையும் நிறுத்துங்கள். அப்படியே நீங்கள் இலவசம் கொடுக்க விரும்பினால், இல்லாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு மட்டும் கொடுங்கள். அதுவே உங்களுக்கு சவாலான வேலை. அரசு கொடுக்கும் இலவசங்களில் நிறைய இருப்பவர்களையே சென்றடைகிறது.
- விவசாய கடனை நீங்கள் ரத்து செய்ய வேண்டாம், விவசாயம் வளரவும், விவசாயி விளைவிக்கும் பொருளுக்கு விவசாயியே விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் கொடுங்கள். பிச்சை போட்டு அவர்களை கேவலப்படுத்த வேண்டாம்.
- நூறு நாள் வேலை திட்டத்தால் விவசாயம், தொழில் என எல்லாம் பாதித்து இருக்கிறது. அப்படிதான் அவர்கள் என்ன வேலை செய்து இருக்கிறார்கள்? சாலைக்கு மண் போடுவது, மரத்துக்கடியில் தூங்குவது என்று அரை குறை வேலையும், ஏய்ப்பும்தான் நடக்கிறது. அதற்கு விவசாயத்திற்காக வயலில் பாடு பட சொல்லுங்கள். நீங்கள் 50% ஊதியம் (ரூபாய் 50) கொடுங்கள், நாங்கள் மீதியை கொடுக்கிறோம். விவசாயமும் வளரும், உங்கள் கொள்கையும் நடக்கும்.
- மின்சாரப் பற்றாக்குறையை போக்க வழி செய்யுங்கள். கோடி கோடியாய் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியம் என்ற பெயரில் இலவச மின்சாரத்தையும், வரி இல்லா உற்பத்தியும் கொடுப்பதை நிறுத்துங்கள். எதற்கு அவர்களுக்கு சலுகை விலையில் இடமும் மற்ற வசதிகளும்? இங்கே வாழ்பவர்கள் என்ன மருத்துப்போனவர்களா? எங்களுக்கு 24 மணி நேர மின்சாரம் விவசாயத்துக்கு கொடுங்கள். நாங்கள் இலவச மின்சாரம் கேட்கவில்லை. இலவச மின்சாரம் என்ற பெயரில் நீங்கள் கொடுப்பது பிச்சையை விட கேவலம்.
- தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் புற்றீசல் போல் முளைத்க்கொண்டு இருக்கின்றன. இதில் பாதி அரசியல்வாதிகள் தான் நடத்துகிறார்கள். கல்வி என்பது கண்டிப்பாக கூடிய விரைவில் எட்டாக்கனியாகவே இருக்கும். அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு முன்மாதிரியான அரசு பள்ளிகளை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். இன்றும் நல்ல கல்விக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறது தமிழகம். சுமையை குறைத்து, கல்வி சுகத்தை கூட்டுங்கள்.
- ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் நம் மாநிலத்தில் முதலீடு செய்யவேண்டும் என்றால், குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கொடுங்கள். அவர்களின் காலில் விழுவதற்கு பதிலாக, நம்மை தேடி வரும் சூழலை அமையுங்கள்.
- இதுபோல நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு குடும்பத்துக்குள் அடைபட்டுக்கிடக்கும் தமிழ் சினிமா, சுகாதாரமற்ற சுற்றுலாத்துறை, எந்த பஸ்சில் ஏறினால் எவ்ளோ டிக்கெட் என்றே யூகிக்க முடியாத போக்குவரத்துதுறை, நடந்தே சலித்துப்போகும் அரசுத்துறை என நீங்கள் சரி செய்ய நிறைய உண்டு.
கண்டிப்பாக தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளிடம் எதிர்ப்பார்த்து ஏமாந்து இருப்பது உண்மைதான். ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை. பீகார் மற்றும் குஜராத்தை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளுங்கள். முன்னேறவே முடியாத மாநிலம் என்று எல்லோராலும் கருதப்பட்ட பீகார், ஒரு சிறந்த நிர்வாகத்தால் இன்று தலை நிமிர்ந்து நடக்கிறது. அதைதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் வழிநடத்த துணிந்தால், நாங்கள் பின்தொடரவும், உறுதுணையாகவும் இருக்க தயாராக உள்ளோம்.