குட்டிக்கதை: பொறுப்பில்லாத டாக்டர்

முக்கியமான அறுவை சிகிச்சை என்று அவசரமாக அழைக்கப்பட்டதால் டாக்டர் வேகமாக மருத்துவமனைக்குள் வந்து உடையை மாற்றிக்கொண்டு ஆபரேஷன் அறைக்கு சென்று கொண்டிருந்தார்.sad doctor

ஆபரேஷன் அறைக்கு வெளியே அடிபட்ட சிறுவனின் தந்தை நின்று அழுவதை கவனித்தார். டாக்டரை பார்த்தவுடன், சிறுவனின் தந்தை சத்தம் போட ஆரம்பித்தார். “ஏன் இவ்வளவு நேரம். என் மகனின் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு பொறுப்பே இல்லையா?”

“நான் மருத்துவமனையில் இல்லை. கேள்விப்பட்ட உடனே என்னால்   முடிந்தவரை வேகமாக வந்துள்ளேன். கொஞ்சம் அமைதியாக இருந்தால், நான் என் வேலையை செய்வதற்கு உதவியாக இருக்கும்” என்றார் டாக்டர்.

“நான் அமைதியாக இருப்பதா? இதுவே உங்கள் மகன் இப்படி இருந்தால் நீங்கள் அமைதியாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார் தந்தை கோபத்துடன்.

“நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம். யாருடைய வாழ்வையும் நீட்டிக்கவோ, குறைக்கவோ கடவுளை தவிர யாருக்கும் அதிகாரமில்லை. உங்களது மகனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

“அறிவுரை கூறுவது ரொம்பவும் சுலபம்” என தந்தை முனுமுனுத்தார்.

ஆபரேஷன் சில மணிநேரம் நீடித்தது. பின் வெளியே வந்த டாக்டர் “கடவுளுக்கு நன்றி. உங்கள் மகன் காப்பாற்றப்பட்டுவிட்டார்” என சொல்லிவிட்டு, குழந்தையின் தந்தையை பேச விடாமல் தொடர்ந்தார். “உங்களுக்கு எதாவது கேள்விகள் இருந்தால் நர்ஸிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.

“ஏன் இவ்வளவு திமிர் பிடித்தவராக உள்ளார்? கொஞ்ச நேரம் இருந்தால் என் மகனின் நிலைமையை பற்றி தெரிந்து கொண்டிருப்பேன் அல்லவா?” என நர்ஸிடம் கடிந்து கொண்டார்.

நர்ஸ் கண்ணீருடன் சொன்னார் “அவருடைய மகன் நேற்று ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். உங்கள் மகனுக்கு ஆபரேஷன் செய்ய அவரை அழைத்தபொழுது மகனை அடக்கம் செய்யும் இடத்தில் இருந்தார். கூப்பிட்ட உடன் ஓடி வந்துவிட்டார். இப்பொழுது, மகனை அடக்கம் செய்ய சென்று கொண்டிருக்கிறார்”

—————


பின் குறிப்பு: இந்த  கதையை நான் எழுதவில்லை. வலையில் படித்தேன். பிடித்ததால், தமிழாக்கம் செய்துள்ளேன்.