பெற்றோர்களின் கவனத்திற்கு!

திரையரங்குக்கு படம் பார்க்க செல்லும்பொழுது இப்பொழுதெல்லாம் அதிகம் பார்க்கும் காட்சி, கை குழந்தைகளுடனும், பத்து வயதுக்குற்பட்ட சிறார்களுடனும் பெற்றோர்கள் படம் பார்க்க வருவதுதான். அந்த ஆதங்கம் தான் இந்த தொகுப்பு.

இன்றைய சூழலில், கூட்டு குடும்பங்கள் குறைந்து, தனி குடும்பங்கள் மிக அதிகமாகிவிட்டன. பெரும்பாலான கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நபர்களாகவே இருக்கிறார்கள். இதனால் பொழுதுபோக்கு என்றாலே திரைப்படம் பார்ப்பது என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. அப்படி திரையரங்கு செல்ல வேண்டுமென்றால் குழந்தையை யாரிடம் விட்டு செல்வது என்பது மிகப்பெரிய கேள்வி. அதனால் கூடவே கூட்டி செல்லும் பழக்கம் இப்பொழுதெல்லாம் அதிகம் ஆகிவிட்டது.

படம் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் அதை கண்டுகொள்வதில்லை. கொடூரமான சண்டை காட்சிகள் நிறைந்த படங்களுக்கும் சரி, காதலும் காமும் கலந்த படங்களானாலும் சரி தமக்கு நல்ல படம் என்று தோன்றினால் எதைப்பற்றியும் சிந்திக்காமல் கிளம்பிவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, தூங்கிய குழந்தையை தோழில் சாய்த்துக்கொண்டு இரவு நேர 10:30, 11 மணி காட்சிக்கு எல்லாம் வருகிறார்கள். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா நண்பர்களே உங்களுக்கு.

ஏன் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்பதற்கு சில காரணங்கள்.

1. அதிக சப்தம் காதுகளுக்கு நல்லதல்ல

திரை அரங்கினுள் நாம் நினைப்பதை விட அதிக சப்தம் வைக்கப்படுகிறது. ஒரு மனிதனின் காதுகளுக்கு 85 டெசிபல்க்கு மேல் ஒலியின் அளவு இருந்தால் அது காதுகளுக்கு நல்லதல்ல என்று கூறுகிறார்கள். சாதாரண போக்குவரத்து நிறைந்த சாலை ஒலியின் அளவு 85 டெசிபல்[efn_note]https://www.healthlinkbc.ca/health-topics/tf4173 [/efn_note] என்று கணக்கிடுகிறார்கள். அதற்குமேல் இருக்கும் எந்த ஒலியும் நமக்கு ஆபத்தானதே.

ஆனால் இன்று இருக்கும் தொழில்நுட்ப காலத்தில் DTS, Dolpy ஒலி என்று திரைஅரங்கே அதிருகிறது. திரைஅரங்கில் இருக்கும் ஒலியின் அளவு 90 டெசிபல் அல்லது அதற்கும் மேல் என கணக்கிடுகிறார்கள். இது உங்களின் காதுகளை மட்டுமல்ல, பிஞ்சு குழந்தைகளின் காதையும் கண்டிப்பாக பதம் பார்த்துவிடும். பின்னாளில் காது மருத்துவரை பார்க்க தயாராகிக்கொள்ளுங்கள்.

2. காட்சிகள் குழந்தைகளுக்கு உகந்ததல்ல

திரையில் பார்க்கும் காட்சிகள் எவையும்  குழந்தைகளை மனதில் வைத்து எழுதவோ, எடுக்கவோ இல்லை. அதை அனைத்தும் பெரியவர்களுக்காக எடுக்கப்பட்டது. சிறு வயதில் காட்சியாக எதைப்பார்த்தாலும் அப்படியே மனதில் பதிந்துகொள்ளும் என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை. அப்படி இருக்கும்பொழுது மனசாட்சியே இல்லாமல் கொடூரமான சண்டைகளும், கொலைகளும், திருட்டுக்களை நியாயப்படுத்தும்  படங்களுக்கு எப்படி உங்களால் குழந்தைகளை அழைத்து வர முடிகிறது? ஒரு கார்ட்டூன் படத்தைப் பார்த்தே அது உண்மை என்று நம்பும் குழந்தைகளுக்கு மனிதர்கள் செய்யும் காரியங்கள் மனதில் மிக ஆழமாக பதிந்துகொள்ளும்.

இப்பொழுதெல்லாம் சண்டைக்காட்சிகள் மிகவும் கொடூரமான முறையில் எடுக்கப்படுகிறது. உயிருக்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை. கத்தியால் குத்குவது, அரிவாளால் வெட்டுவது, கழுத்தை அறுப்பது என்பதெல்லாம் இன்று எல்லா படங்களிலும் இன்று சாதரணமாகிவிட்டது. நாயகன் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எது  வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போல் படங்கள் எடுக்கப்படுகிறது. இதெல்லாம் குழந்தைகள் பார்க்கும் வயதல்ல.

3. வசனங்கள் கேட்ககூடிய சொற்களாக இல்லை

படம் பேரே சொல்ல முடியாத நிலைமையில் வரும் இந்த காலத்தில் வசனங்கள் கேட்ககூடியதாகவா இருக்கப்போகிறது. சிறுவயதில் எதைக் கேட்டாலும் திருப்பி பேசும் வயது. சில வருடங்களுக்கு முன்பு நடிகர் வடிவேல் வசனங்கள் மிகவும் பிரபலம். குழந்தைகள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் வடிவேல் வசனங்களை சொல்லி கலாய்ப்பதை நாமே பார்த்துள்ளோம். அதெல்லாம் நாம் சொல்லி அவர்கள் கற்றுகொள்ளவில்லை. நாம் திரையிலோ, தொலைக்காட்சியிலோ பார்க்கும்போது அவர்களும் பார்த்து பின் பேசுகிறார்கள். இன்றெல்லாம் குழந்தைப்பேச்சு போய் வயதுக்கு மீறிய பேச்சு என்பது பெருமையாகவே பார்க்கப்படுகிறது. இன்று வசனங்கள் போய், பாடல் வரிகளே கேட்க முடியாத நிலைமை.

4. நேரம் ஒரு கொடுமை 

மூன்று மணி நேரம் குழந்தைகளை ஓரிடத்தில் உட்காரவைப்பது என்பது நாம் அவர்களுக்கு இழைக்கும் எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? வீட்டில் 10 நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் அமராமல் ஓடிகொண்டிருக்கும் அவர்களுக்கு இப்படி ஒரு வேதனையா? அது மட்டுமில்லாமல் பேசக்கூடாது, சத்தம் போடக்கூடாது என்றெல்லாம் கட்டளையிட்டால்  நல்லவா இருக்கிறது. அதையும் மீறி சத்தம் போட்டால் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும். அப்படி ஆகிவிட்டால், பின்னர் குழந்தையை சும்மா இருக்க சொல்லி திட்டுவது அல்லது அடிப்பது என்றெல்லாம் செய்கிறோம்.

நமக்கு சரியாகப்படும் எல்லா காட்சிகளும், வசனங்களும் குழந்தைகளுக்கும் சரியாக இருக்கும் என்பதில்லை. சில படங்கள் குழந்தைகள் பற்றிய படங்களாக இருக்கும். ஆனால் அது குழந்தைகளுக்கான படமாக இருக்காது. அதற்கான வித்தியாசத்தை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதை புரிந்துகொள்ள நமக்கு ஒன்றும் ஞானம் தேவையில்லை. கொஞ்சம் அக்கறை இருந்தாலே போதும்.

நமக்கு குழந்தைகளை விட படம் அவ்வளவு முக்கியமா?  குழந்தைகளை வைத்துக்கொண்டு படத்திற்கு வரும் அளவுக்கு அப்படி என்ன தேவை? நம் குழந்தைகளின் ஆரோகியத்தையும், நல்லுணர்வுகளையும் இழந்து அப்படி என்ன பெரிய விஷயத்தை படத்தில் பெறப்போகிறீர்கள்? குழந்தைகளுக்காக உங்கள் சந்தோஷத்தை கொஞ்சம் தள்ளி வைப்பதில் ஒன்றும் குற்றமில்லை.