நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மிக பிரபலமான ஒரு சில்லறை வணிக கடைக்கு செ

ன்றேன். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடச் சென்றேன். மக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். நானும் எனது முறை வரும் வரை காத்திருந்து எனது பொருள்களை பில் போட கொடுத்தேன்.எல்லாவற்றையும் ரசீது போட்டுவிட்டு மொத்த தொகையை சொன்னார், நானும் பணம் கொடுத்துவிட்டு, ரசீது வாங்கி ஒரு முறை பார்த்தேன். திடீர் என சந்தேகம். வாங்கி வைத்திருந்த ஒரு சில பொருளின் விலை ரசீதில் அதிகமாக இருந்ததாக ஓர் எண்ணம். சந்தேகமாக இருந்த ஒரு பொருளை சரி பார்க்கலாம் என எண்ணி, வாங்கிய பொருளில் வெண்ணையை எடுத்துப் பார்த்தேன். உரிய விலை ரூ.85. ரசீதில் போடப்பட்ட விலை ரூ.89. கடைக்காரரிடம் கேட்டவுடன், கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டார். செல்போனை எடுத்து யாருக்கோ அழைத்தார். என்னிடம் எதுவும் பேசவில்லை. எனக்கு எதுவும் சரி வர மாதிரி தெரியவில்லை.எல்லா பொருளையும் சரி பாருங்க என்றேன். அவரோ, இல்ல சார், இது எதோ சிஸ்டம்ல பிரச்னை. விலையை மாத்தாம விட்டுட்டாங்க. மத்தது எல்லாம் சரியா இருக்கும் என்றார். நானோ, பரவாயில்லை…. ஒருமுறை எனக்காக பாருங்க என்றேன். இல்ல சார், நிறைய பேர் காத்திருக்காங்க. நேரம் ஆச்சு சார். எல்லாம் சரியாய் தான் இருக்கும் என்றார்.
நான் விடுவதாக இல்லை.பின்னர், சரி என எல்லா பொருளையும் சரி பார்க்க ஆரம்பித்தார். வாங்கிய 20 பொருளில் மூன்றின் விலை அதிகமாக போடப்பட்டிருந்தது. ஐஸ்கிரீமின் உரிய விலை ரூ.120, ரசீதில் போடப்பட்டிருந்தது ரூ.169. புளியின் உரிய விலை ரூ.35. இவர்கள் போட்ட விலை ரூ.40.
என்ன கொடுமை இது. இப்படித்தான் நடக்குதா கதை? எத்தனை பேர் இப்படி சரி பார்பார்கள் என தெரியவில்லை. எல்லா பொருட்களின் விலைகளும் தலைமை இடத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கிருந்து எல்லா கிளை கடைகளுக்கும் செல்கிறது. அப்படி இருக்கும்பொழுது, எப்படி இவ்வாறு தவறுகள் நடக்கின்றன? 20 பொருளில் 3 பொருள் விலை தவறாக இருந்தால் 2000 பொருட்களில் எத்தனை தவறாக இருக்கும்? எத்தனை பேர் எவ்வளவு அதிகமாக கொடுக்கிறார்கள்?
இதெல்லாம் தெரியாமல் நடக்கிற ஒரு தவறு மாதிரி தெரியவில்லை. ஊருக்கு தெரியாமல், உங்களுக்கும் தெரியாமல் உள்ளுக்குள் பெரிய மோசடியே நடப்பது போல் தெரிகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதிக்கலாமா இல்லையா என வாதம் ஒருபுறம் இருக்கட்டும். பெருச்சாளி எந்த ஊரா இருந்தா நமக்கு என்ன? அதோட வேலை ஒன்னுதான். நம்மை ஏமாற்றவும், அம்மணமாக்கவும் வெளியாள் தேவையில்லை என்பதை மட்டும் தெரிந்துகொள்வோம்.