பென்னாகரம் தேர்தலும் முடிந்தது… மின்சாரம் நிறுத்த அறிவிப்பும் வந்தது….

தலைப்பை பார்த்தவுடனே உங்களுக்கு புரிந்து இருக்கும்… நான் எதைப்  பற்றி எழுத போகிறேன் என்று.

அது ஏன், இவ்வளவு நாட்களாக காத்திருந்து இன்று வந்தது மின் தடை அதிகரிக்கும் அறிவிப்பு. அதுவும் 3 மணி நேரமாக அதிகரிப்பு. எங்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். புதுப்புது தொழிற்சாலைகளா நம்ம ஊரில் வருது, நிறைய பேருக்கு Power_Linesவேலை தரப்போகுது என்று எங்களால் சந்தோஷப்பட முடியவில்லை. அதற்கு பதிலாக, புது தொழிற்ச்சாலை வந்தால், அய்யோ, இன்னும் எவ்வளவு நேரம் மின்சாரம் தடை பட போகிறதோ என்றுதான் மனம் கணக்கு போடா துவங்கி உள்ளது.  ஒரு நண்பரின் Face Book’ல் பார்த்தேன்… “Earth Hour” என்று உலகம் கொண்டாடிய தினத்தில் அவர் எழுதி இருந்தார், “நாங்கள் உலகுக்காக ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தி உங்களுடன் கலந்து கொள்ளப்போவது இல்லை. ஏனென்றால், நாங்கள் தினமும் உலக மக்களுக்காக 2 மணி நேரம் மின்சாரம் உபயோகிக்காமல் இருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல விரும்பினால், தமிழ் நாடு அரசாங்கத்துக்கு சொல்லுங்கள். அவர்கள் தான் உலக நலனுக்காக கடமைப்பட்டு இருக்கிறார்கள்”.  இதைவிட நம் கொடுமையை சொல்ல வேறு நல்ல வார்த்தைகள் கிடையாது.

வரி இல்லாத பட்ஜெட்! மிக்க நன்றி. ஆனால், அதெல்லாம் எங்களுக்கு தேவை இல்லை. அடிப்படை வசதிகள் நிறைவேறுமா? இல்லை, இந்த மின்சார பற்றாக்குறையை நீக்க ஏன் எந்த திட்டமும் அறிவிக்கவில்லை? மேலை நாடுகளுடன் நம்மை ஒப்பிடும்போது, அங்கே இருக்கும் மக்களுக்கு எந்த விதமான அடிப்படை பிரச்சனைகள் இருக்கின்றன, அதை எப்படி தீர்க்கிறார்கள் என்றும் பார்க்கவேண்டும். அதை பார்க்க நாம் தவறி விடுகிறோம்.

வெளிநாட்டு தொழிற்சாலைகள் நம் ஊருக்குள் வருவது சந்தோசமே…. அவை நம்மக்கு உறுதி அளிக்கும் வேலைகளை தந்தாலும், தராவிட்டிலும். ஆனால், அவை வர வர, மின்சார உற்பத்திக்கும் நாம் வழி வகுக்க வேண்டாமா? ஆனால், பல வருடங்களாக அதை நாம் சிந்திக்கவே இல்லையே. யாராவது சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்று இருந்ததால் கவனித்து இருப்பீர்கள். பாரதிராஜா படத்தில் வரும் பொட்டல் காடாக இருந்த அந்த ஊர், இன்று ஒரு மாபெரும் தொழிற்சாலை நகரமாக உருவாகி இருக்கிறது. உலகத்தில் இருக்கும் அனைத்து பெரிய கம்பனிகளும் இங்கு இருக்கின்றன. ஹுண்டாய், நோக்கியா, டெல், சோனி, BMW, போர்டு, மோட்டோரோலா, செயின்ட் கோபைன், மிட்ஷிபுஷி, MRF, அப்போல்லோ டையர்ஸ், மோசெர்பேர் என இப்படி எத்தனையோ பல்நாட்டு கம்பனிகள் இங்கே காலூன்றி இருக்கின்றன. இப்பொழுது நிசான் கார் தொழிற்சாலை.  இது தவிர அனைத்து பல் நாட்டு மென்பொருள் கம்பனிகளும் வந்துள்ளன. பழைய மகாபலிபுரம் சாலையில் சென்றால், நீங்கள் சென்னையில் தான் இருக்குறீர்களா என உங்களுக்கு சந்தேகம் வரும் அளவுக்கு வானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்கள். இவை எல்லாமே வரவேற்க தகுந்ததுதான். நாம் பெருமை பட வேண்டிய விஷயம்தான்.

இத்தனை கம்பெனிகளுக்கும், எங்கே இருந்து சென்றது மின்சாரம். கடந்த 20 வருடங்களில் பெரிய மின்சாரம் தயாரிப்பு திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. தொடங்கிய கூடங்குளம் திட்டமும் இன்னும் மின்சாரம் தர ஆரம்பிக்க வில்லை. அப்படி இருக்கும்பொழுது, இதெல்லாம் நாம் அன்றாடம் உபயோகித்த மின்சாரத்தில் இருந்துதானே அவர்களுக்கு பகிர்ந்து தரவேண்டும்? அப்படி பகிர பகிர, புது புது மின் உற்பத்தி திட்டங்களை அறிவித்து இருக்கலாமே?

நம் தினசரி மின் உபயோகத்தை திருடும் இந்த கம்பனிகளுக்கு வரி இல்லை, வட்டி இல்லை, வேறெதுவுமே இல்லை. அதற்காக SIPCOT, SEZ என இடங்கள் கொடுத்து, அங்கே ஆரம்பிப்பவர்களுக்கு பல சலுகைகளையும் கொடுத்து, ஏன் வரியை தள்ளுபடி செய்கிறீர்கள்? இது நியாமா? இந்த பட்ஜெட்டில் புது மின்சார திட்டத்திற்கான அறிவிப்பு ஒன்றுமே இல்லை. நிதி ஒதுக்கீடும் இல்லை. அதற்குபதிலாக இலவச தொலைக்கட்சிக்கும்,  பல இலவசங்களுக்கும் பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருந்தது, .

இப்படியே சென்றால் தமிழகம் இருளில் மூழ்க வெகு நாட்கள் இல்லை!