புரியாத புதிர்

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் எனக்கு புரியாத புதிர் ஒன்று வெகு நாளாக உள்ளது. நம்ம ஊர் நான்கு IMG_0465வழிச்சாலையில் சென்று இருப்பீர்கள். அதில் உள்ள பாலங்களை கவனித்து உள்ளீர்களா? அதை எப்படி வடிவமைத்தார்கள் என்று பார்த்ததுண்டா?

நெடுஞ்சாலையில் உள்ள பாலங்கள் எல்லாம், முதலில் சுற்றுப்புற சுவர் அமைக்கப்படுகின்றன. பின் அந்த சுற்றுப்புற சுவற்றின் நடுவில் உள்ள காலி இடத்தை மண் கொட்டி நிரப்புகிறார்கள். அதைப் பார்த்து சில சமயம் நான் வியந்து உள்ளேன். எங்கே இருந்து இவ்வளவு மண் எடுக்கப்படுகிறது? ஒரு இடம் மேடாக வேண்டும் என்றால் ஒரு இடம் கண்டிப்பாக பள்ளம் ஆகியே தீரவேண்டும். அப்போ எங்கே பள்ளம் ஆகிறது?

சுமாராக ஒரு சிறு பாலத்திற்கு எவ்வளவு லாரி மண் கொட்டுவார்கள் என சொல்ல முடியுமா? 20? 30? 100? இல்லை. குறைந்தது 2000 – 3000 லோடு மண்  கொட்டியாக வேண்டும். எங்கே இருந்து வருகிறது இவ்வளவு மண்? ஒரு சிறிய பாலத்திற்கே இவ்வளவு என்றால், நாம் வழி நெடுக பார்க்கும் அத்தனை பாலங்களுக்கு?

எல்லாம் நம்ம ஊரு தரிசு நிலத்து மண் சாமி…. நம்ம பூமியை நாசம் செய்துகொண்டு நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம். காசுக்காக மண்ணை விற்று பிழைக்கும் விவசாய குடும்பங்கள் ஒரு பக்கம். மண் எடுத்த பூமியை ஒரு நாள் சென்று பாருங்கள். எந்த ஜென்மத்திற்கும் அங்கு எதுவும் செய்ய முடியாது, எல்லாம் அகல பாதாள குழிகள். ஆயிர கணக்கான ஏக்கர் நிலம் இப்படி வீணடிக்கப்படுகிறது.

இதில் இன்னொரு கூத்து தெரியுமா சாமி? மண் தரிசு பூமியில் எடுப்பதற்கு பதில் குளம், குட்டையில் எடுத்தால்IMG_0467 அதை தூர் வாருவதாவது மிச்சமாகும் என்று இப்பொழுது சில இடங்களில் அப்படித்தான் எடுக்கிறார்கள். ஆனால், அங்க என்ன கூத்து என்றால், அரசாங்கத்துக்கு சொந்தமான குட்டையிலும், குளத்திலும் மண் அல்ல அந்த பொறுப்பை அரசு சில தனியாரிடம் ஒப்படைத்து உள்ளது. அவர்களோ ஒரு லோடுக்கு ரூ 700 – 800 வரை வசூலித்து, கொஞ்சம் அரசாங்கத்துக்கும் கொடுத்து விட்டு பொழுது கழிக்கின்றனர். என்ன கொடுமை இது? பொது இடத்தில் இருந்து மண் எடுக்க எதுக்கையா காசு? இந்த தேவை இல்லாத செலவை எல்லாம் சாலை போடும் நிறுவனத்தின் மேல் ஏத்தி, அது கடைசியில் நம்ம தலையிலேயே சுங்க வரி என வந்து விழுகிறது. 10 ரூபாய், 20 ரூபாய் சுங்கம் கட்டிய நாம் இப்பொழுது 60, 70 ரூபாய் கட்டிக்கொண்டு இருக்கிறோம்.

ஏன் இது தான் வழியா? நகரங்களில் அமைக்கும் பாலங்கள் மாதிரி தூண்கள் போட்டு பாலங்கள் அமைக்க முடியாதா? ஏன் நாம் நம் பூமியை அழித்துத் தான் இப்படி பாலம் கட்ட வேண்டுமா? ஒரு பக்கம் வளர்ந்து இன்னொரு பக்கம் நம்மை நாம் இழந்து கொண்டிருக்கிறோமா? நம் வருங்கால சங்கதிக்கு எதையும் சேர்த்து வைக்காவிடிலும் பரவாயில்லை, இருப்பதையாவது அழிக்காமல் இருக்கலாமே.

பூமியை எப்படி நாசமாக்குகிறோம் என்று ஒரு நாள் பாலம் போடும் இடத்தில் நின்று பாருங்கள். மனசு பாரமாகிறது. நாம் எல்லாம் படித்த முட்டாளோ என எண்ணாமல் இருக்க முடியவில்லை. தொழில் நுட்ப அறிவாளிகளே எனக்கு புரிய வையுங்கள்.