
பள்ளி படிக்கும் நாட்களில் திருவிழாக்களுக்காக காலண்டரைப் பார்த்து காத்திருந்த தருணங்கள் நினைத்தாலே மனதுக்கு இதமாக இருக்கிறது. குறிப்பாக ஊர் ஊருக்கு நடக்கும் மாரியம்மன் திருவிழாக்கள் 15 நாட்களுக்கு மேல் நடக்கும். இந்த விழாக்கள் கம்பம் நடுதல், மஞ்சள் நீராடல், விளையாட்டு போட்டிகள், பூ மிதித்தல், வித விதமான ராட்டினங்கள், சினிமா படங்கள் என பல குதூகலத்தை கொண்டவை. குழந்தைகள் மட்டுமில்லாமல், வயது வித்தியாசம் பாராது கிராமமே திருவிழா கோலத்தில் இருக்கும். இந்த திருவிழாக்கள் எப்பொழுதுமே பள்ளி விடுமுறை காலங்களில் தான் வரும் என்பதால் கொண்டாட்டத்திற்கு அளவில்லை என்றே சொல்லலாம். வீட்டில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும், யாரும் முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் முறுக்கு சுடுவதும், பலகாரங்கள் பல செய்வதும், சொந்தக்காரர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பதுமாக கிராமமே களைகட்டும். அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு கிராமத்தில் கிடைத்ததற்காக என் பெற்றோருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காலை உணவை முடித்தவுடன் கோவிலுக்கு ஒரே ஓட்டம் ஓடிய நாட்களை மறக்க முடியாது. தினம் தினம் யாரவது சிலர் கோவிலில் பொங்கல் வைதுக்கொண்டிருப்பர். ஒவ்வொரு நாளும் கோவிலில் வித விதமான போட்டிகள் நடக்கும். குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என தனித்தனியே நடப்பதை வேடிக்கை பார்க்க முதலில் நிற்பேன். கண்ணைக் கட்டிக்கொண்டு பானை உடைக்கும் போட்டியும், வழுக்கு மரம் ஏறும் போட்டியும் எப்பொழுதுமே கூட்டத்தையும் விறுவிறுப்பையும் கூட்டுபவை. மாலை நேரங்களில் சாமி சிலையை தூக்கிக்கொண்டு ஊர்வலம் போவது பண்டிகை காலங்களில் வழக்கம். அப்பொழுது வீட்டிலுள்ள பெண்கள் எல்லாம் மா(வு)விளக்கு எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். பச்சரிசியை இடித்து செய்யும் இந்த மாவை எங்கள் வீட்டில் பல முறை பாதிக்கு மேல் நானே சாப்பிட்டு இருப்பேன். அவ்வளவு பிடிக்கும் எனக்கு.
அப்பாவின் சட்டை பையை தேட வைக்கும் தெருவோர புதுக்கடைகள் கோவிலின் அருகில் வரிசையாக அணிவகுத்து நிற்கும். பெண்கள் கூட்டம் விதவிதமான கண்ணாடி வளையல்கள், சிறு சிறு அலங்கார பொருள்கள் வாங்குவதிலும், குழந்தைகள் கூட்டம் பலூனும், விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதிலும் அலைமோதும். குழந்தைகளின் அன்றைய சொர்க்க பூமி இந்த கடைகள் தான். தாத்தா, பாட்டி, ஊருக்கு வரும் பெரியவர்கள், சொந்தகாரர்கள் என எல்லோருமே குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள் வாங்க காசு கொடுப்பார்கள். காசு வாங்கிய உடனே கடையை தேட வேண்டியதுதான். எந்த சொகுசு காரும், RayBan கண்ணாடியும் 10 ரூபாய்க்கு மேல் இருக்காது. காசு கொடுத்த உடனே டெலிவரி தான். அந்த சூப்பர் கலர் கண்ணாடிய போட்டுகிட்டு நாங்க போட்ட ஆட்டம் இருக்கே…. ஐயய்யோ…
மாலை உணவு எப்பொழுதுமே அவசரத்தில் தான் இருக்கும். மாலையில் தப்பட்டமும் கிராம நடனமும் இருக்கும். பெருசும் சிறுசும் வரிசையில் நின்று கொட்டு முழக்கத்திற்கு அழகாக நடனம் ஆடுவர்.அந்த கொட்டு சத்தமும் இவர்கள் ஆடும் அந்த அழகான ஆட்டமும், பார்க்க பார்க்க பார்ப்பவரையே ஆட தூண்டும். கூட்டத்தில் நானும் பலமுறை நடனம் என்ற பெயரில் குறுக்கே ஓடியதுண்டு.
அது முடிந்தவுடன் பெரிய திரையில் திரைப்படம் போடுவார்கள். அப்பொழுதெல்லாம் யாராவது ஓடிப்போய் இடம் பிடிக்கணும். இல்லேனா, கூட்டத்துல படம் தெரியாது. அதனால சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஓடணும். தொலைக்காட்சியும், கேபிள் சேனல்களும் பெரியதாக இல்லாத அன்றைய காலங்களில் இதுபோன்ற திரைக்காட்சிகள்தான் அனைவரையும் சுண்டி இழுக்கும்.பெரிய திரையை கட்டி, கூடத்திற்கு நடுவே அந்த மாய பெட்டியை வைத்து படம் காண்பிப்பார்கள். “யாருப்பா, அந்த பெருச தள்ளி போக சொல்லுங்கப்பா, ஒண்ணுமே தெரியமாட்டேன்குது” என்ற சத்தம் அடிக்கடி கூட்டத்தில் முணுமுணுக்கும். இங்கே தரையில் அமர்ந்து பார்த்த பல படங்கள் என்னால் மறக்க முடியாது. “எங்க வீட்டு பிள்ளை”, “ஆடி வெள்ளி”, “ரகசிய போலீஸ்”, “நம் நாடு” என நிறைய. எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் தான் அதிகம் இருக்கும். அப்பொழுது தான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்பது நம்பிக்கை. வழக்கமாக தினம் இரண்டு படங்கள் திரையிடுவார்கள். சிறுசுகள் யாரும் இரண்டாவது படத்தில் நன்றி தெரியும் வரை இடத்தைவிட்டு விலகமாட்டார்கள். நானும் அப்படித்தான்.
இப்படியாக நான் குழந்தையில் திருவிழாக்களில் ரசித்த பல விஷயங்கள் இன்றைய நாகரீக நகர்புற குழந்தைகளுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. விவசாயின் மகனாக எனக்கு கிடைத்த இந்த அளவிட முடியாத சந்தோசங்களை என்னுடைய மகனுக்கு நான் கொடுக்க முடியுமா என்ற கேள்வி என் மனதில் இல்லாமல் இல்லை. ஒன்று நாம் பிழைப்பிற்காக நகரத்தை தேடி வந்த பரதேசிகள் ஆகி விட்டோம். மற்றொன்று பணத்தை தேட ஆரம்பித்து சந்தோஷத்தை தொலைக்க ஆரம்பித்து பல வருடம் ஆகிவிட்டது.