
சொல்லுங்க சார் என்றேன். “சார், உங்க மேலஒரு வழக்கு இருக்கு. உங்கள பார்க்க அபார்ட்மென்ட் வாசல இருக்கேன், கொஞ்சம் கீழே வந்து போக முடியுமா சார்” என்றார்.
காவல்துறை நம்மை நண்பன் என்று சொன்னாலும், நமக்கு உள்ளே எழும் பீதியை பல சமயம் விவரிக்க முடியாது. நாம என்னய்யா தப்பு செய்தோம் என்று எண்ணிக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். அந்த ஒரு சில வினாடிகளில் மனதில் பல எண்ணங்கள் ஜெட் வேகத்தில் ஓட ஆரம்பித்தது.
என்னவா இருக்கும்? எதாவது என்றால் யாரை நாடுவது? நான் அப்படி ஒன்றும் தப்பு செய்யவில்லையே… கூடவே இதய துடிப்பும் எகிறிக்கொண்டிருன்தது.
பதட்டத்துடன் கீழே வந்தேன். 40களில் இருக்கும் அந்த நபர் சீருடையில் இல்லை ஆனால் காவல் துறையின் வழக்கமான ஹேர் ஸ்டைல், மீசை, பழுப்பு நிற காலணி. இருந்தாலும் இவர் காவலர் தானா? பார்த்த ஒரு சில வினாடிகளில், அவரை என் மனம் எடை போட்டுக்கொண்டிருந்தது.
அருகில் சென்றேன். அவர் என்னிடம் வந்து “சாரி சார், சாப்பிடுற நேரத்துல உங்கள தொந்தரவு பண்ணிவிட்டேனா?. நான் B7 காவல் நிலையத்தில் இருந்து வருகிறேன்” என்று பணிவுடன் கூறி, அவருடைய அடையாள அட்டையை என்னிடம் கொடுத்து தான் காவலாளி என்பதை உறுதி படுத்திக்க சொன்னார். (ஒருவேளை நான் இவர் காவலர் தானா என எண்ணியதை கண்டுபிடித்துவிட்டாரோ?). நான் பார்த்துவிட்டு, சொல்லுங்க சார் என் மேல் என்ன புகார் என வினவினேன்.
சார் நீங்க போக்குவரத்து விதிகளை மீறி இருக்குறீர்கள். அதற்கு நீங்க அபராதம் கட்டவேண்டும் என்றார்.
“நானா? எப்போ, என்ன பண்ணினேன்?”
என் வண்டி எண்களை சொல்லி, இது உங்க கார் தானே? நீங்க 17ம் தேதி RSபுரம் பக்கம் போனீங்களா? என்றார்.
நான் செல்போனில் 17ம் தேதி என்ன நாள் என்று பார்த்துவிட்டு, ஆமாம் போனேன் என்றேன். அங்க ஒரு சிக்னலில் நிறுத்தல் கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தியதற்க்குத் தான் சார் அபராதம்” என்றார் பொறுமையாக.
வழக்கம் போல நான் கோயம்பத்தூர் குசும்பில் “போங்க சார், என்ன வச்சு காமடி பண்ணாதீங்க, நம்ம ஊர்ல யாரு சார் கோட்டுக்கு முன்னாடியே வண்டிய நிறுத்தி இருக்காங்க? அப்படி பார்த்தா நீங்க எல்லாருக்கும் அபராதம் போடணும். உங்களுக்கு கேஸ் இல்லேனா இதுமாதிரி எதாவது சொல்லாதீங்க” என்றேன்.
அவர் கொஞ்சம் கூட கோபப்படாமல், “சார் தெரியலேனா தெரியலேனு சொல்லுங்க. எல்லாருக்கும் கொடுத்துகிட்டு தான் இருக்கோம். உங்களுக்கு இது முதல் முறையா இருக்கலாம். உங்களுக்கு நம்பிக்கை இல்லேனா, கமிஷனர் அலுவலகம் சென்று விவரம் கேளுங்க. நீங்க செய்த தவறை படத்தோடு தருவார்கள்” என்று பொறுமையாக சொன்னார்.
அவர் அப்படி அமைதியாக சொன்னது, நான் பேசிய விதத்தை தவறு என்று சொல்லாமல் சொல்லியது.
எவ்வளவு அபராதம் என்றேன். நூறு ரூபாய் என்றார். “என்ன சார், 100 ரூபாய்க்கா இவ்ளோ பண்ணுறீங்க? இன்றைய தேதிக்கு இதெல்லாம் யார் வேணாலும் கட்டலாமே சார்” என்றேன்.
“உண்மை தான் சார். தண்டனை உங்களுக்கு இல்லை, எங்களுக்குத்தான். நான் இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது 10 பேர் வீட்டுக்கு போகணும். பெட்ரோல் காசுக்கு கூட இது உதவாது. இதுல அடிக்கிற வெயில் வேற”
அப்புறம் ஏன் சார்?
“இது நாங்க பண்ணுறதே மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்கத்தான். அடுத்த முறை நீங்கசாலையில் செல்லும்போது கொஞ்சம் யோசிப்பீங்க. இதே மாதிரி எல்லோரும் நினைப்பது தொடர்ந்தால் கண்டிப்பாக மாற்றம் வரும். இது ஒரு ஆரம்பம் தான்” என்று நம்பிக்கையாக சொன்னார்.
அவர் சொன்னதில் உண்மை இருப்பதை என்னால் உணரமுடிந்தது. என்னுடைய அபராதத்தை செலுத்தினேன், உடனே அதற்க்கு ரசீதும் கொடுத்தார். இவரின் பொறுமையையும், காவல் துறையின் இந்த அமைதியான புரட்சியையும் வணங்குகிறேன்.
பின்குறிப்பு: என்ன ஒரே கவலை, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிக்னல் கோட்டுக்கு முன்பே வண்டி நிறுத்தி விடுகிறேன். ஆனால் பின்னாடி வருபவர்கள் எல்லாம் கத்தி, திட்டி தீர்த்து விடுகிறார்கள். சில சமயம் “அடேய், மடையா முன்னாடி போனா அபராதம்”னு சொல்லனும்னு ஆசை படுகிறேன். ஆனா அவங்க பாக்குறத பார்த்தால், என்னமோ நான் குற்றம் செஞ்ச மாதிரி பாக்குறாங்க. இந்த ரமணா படத்தில் வர மாதிரி குற்றம் செய்யாம இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுது. தமிழக காவல் துறைக்கு சொல்லணும்.