டென்ஷன் ஆகாதீங்க பாஸ்

timesofindiaஒரு நாள் காலை 10:00 மணி

“சார் Times of India ல இருந்து கூப்பிடுறோம். இந்த வருடத்துக்கான சந்தாவை எப்போ சார் கட்டுறீங்க?”

– இல்லேங்க, நான் இந்த வருடம் புதுப்பிக்கவில்லை.

“ஏன் சார், எதாவது பிரச்சனையா?”

– அதெல்லாம் இல்லீங்க. அலுவலகத்திலும் வாங்குவதால், வீட்டுக்கு வேண்டாம். ரொம்ப நன்றி.

“சரிங்க சார்”.

அதே நாள் காலை 11:30 மணி
“சார் Times of India ல இருந்து கூப்பிடுறோம். இந்த வருடத்துக்கான சந்தாவை எப்போ சார் கட்டுறீங்க?”

– காலையில் தான் கூப்பிடாங்க, வேண்டாம்னு சொல்லிட்டேன்.

“ஏன் சார், என்ன ஆச்சு. வெறும் 299 ரூபாய் தான் சார்”

– இல்லீங்க. தொந்தரவு செய்யவேண்டாம். நன்றி.

“சரிங்க சார்”.

அதே நாள் மதியம் 1:45 மணி

“சார் Times of Indiaல இருந்து கூப்பிடுறோம். இந்த வருடத்துக்கான சந்தாவை எப்போ வந்து வாங்கிக்கலாம் சார்?”

-இதோட நீங்க மூணாவது தடவை. நீங்க தானே முதலில் கூப்பிட்டது?

“சாரி சார், நான் இல்ல. வேற யாரவது கூப்பிட்டு இருப்பாங்க. என்ன சார் சொன்னீங்க?

– தயவு செய்து என்னோட பெயரை உங்க லிஸ்ட்ல இருந்து எடுத்துடுங்க. எனக்கு  இனிமே போன் செய்யாதீங்க ப்ளீஸ்.

“ஏன் சார் இப்படி சொல்லுறீங்க? ”

தயவு செய்து சொன்னதை கேளுங்க. ப்ளீஸ்.

சரிங்க சார். சாரி.

அடுத்த நாள் காலை 10:15 மணி 

“சார் Times of Indiaல இருந்து கூப்பிடுறோம். …………”

– ஏன்யா என்ன இப்படி தொந்தரவு செய்யுறீங்க. இன்னைக்கும் உங்களுக்கு நான் தான் கிடைச்சனா? உங்களுக்கு என்ன 299 ரூபாய் தானே வேணும்…. வந்து வாங்கி தொலைங்க.

“ஹலோ ஏன் இப்படி பேசுறீங்க… கொஞ்சம் மரியாதையா பேசுங்க” (மிரட்டும் தோணியில்)

– ஆமா, வேணும்னா உங்களை கொஞ்சட்டா? பல முறை சொல்லிட்டேன் எனக்கு வேண்டாம்னு. அப்பவும் கேக்கல. என் பேரை உங்க லிஸ்ட்ல இருந்து நீக்குங்கனு வேற கேட்டேன். இன்னும் எத்தனை தடவை சொல்லணும்?

(கொஞ்சம் சத்தமாக) “ஆமா நீங்க இப்படி கத்தினா யார் தான் உங்க பெயரை லிஸ்ட்ல இருந்து எடுப்பாங்க… பொறுமையா சொல்லி பழகுங்க”

– தயவு செய்து போனை வச்சுட்டு வந்து பணத்தை வாங்கிட்டு போங்க சாமி.

“தேவையே இல்ல எங்களுக்கு”

– அப்புறம் ஏன் இவ்ளோ தொந்தரவு செய்யுறீங்க?

“……….”
(அவர் போனை வச்ச சத்தத்தில் என் காதில் புகை வந்தது)

மதியம் 3:30 மணி 

“சார் Times of Indiaல இருந்து கூப்பிடுறோம். …………”
– ……………..
“சார் லைன்ல இருக்கீங்களா, ஹலோ… ஹலோ”
– ……………..
“சார் எப்போ பணம் கட்டுறீங்க”
– ………………