சிறியதேனும் செயலில் காட்டுவோம்

“100 இளைஞர்களை கொடுங்கள், நான் உலகத்தை மாற்றி காண்பிக்கிறேன்” என்ற பழமொழியை பலமுறை நாம் படித்தும், கேட்டும் உண்டு. சொன்னவர் நம் விவேகனந்தர் தான். அவர் இன்று வாழ்ந்திருந்தால் எவ்வளவு இளைஞர்கள் Youth1கேட்டிருப்பார் இந்த உலகத்தை மாற்ற? கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.

நம் தலைமுறை நிறைய மாறிவிட்டது. காந்தி பிறந்த தேசம் என்று பல முறை கூறி வளர்ந்த நாம், என்ன கற்று இருக்கிறோம்? நமது வரலாற்றில் இருந்து நாம் கற்றது ஒன்றுமே இல்லை. விடுதலைக்காக ஒன்று சேர்ந்து போராடிய தேசம் இது. உலகுக்கே அஹிம்சை முறை போராட்டத்தை சொல்லி கொடுத்த தேசம் நம் தேசம். ஒவ்வொரு தேவைக்கும் போராடிய மக்கள் நம் மக்கள். அடிப்படை தேவைகளை நிறைவேற்ற போராடிய காலம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடக் கூடியது இல்லை.

ஒவ்வொரு இளைஞனையும் கேளுங்கள்… சொல்லி முடிக்க முடியாத அளவுக்கு பிரச்சனயை சொல்லுவோம். அதற்கு என்ன செய்தாய் என்று கேட்டால், நான் என்ன பண்ண முடியும் என்று பதிலும் சொல்லுவோம். நமக்கு என்ன தான் பிரச்னை? ஏன் எதையுமே எதிர்த்து போராட மறுக்கிறோம்?

நம்மை பொறுத்த வரையில் போராட்டம் என்பது

  1. நீங்கள் இந்த SMSஐ உங்களின் நண்பர்களுக்கு அனுப்புவதன் மூலம், கருப்பு பணத்திற்கு எதிரான உங்களின் ஆதரவு உறுதி செய்யப்படும் என்று வந்தால், யோசிக்காமல் அதை நம் நண்பர்களுக்கு அனுப்புவது
  2. நாங்கள் கொடுக்கும் வலைப்பக்கம் சென்று உங்களின் ஆதரவை தெரிவியுங்கள் என்றால் மறுகணமே, எதையாவது கிளிக் செய்து சந்தோஷ பட வேண்டியது
  3. இந்த எண்ணுக்கு நீங்கள் அழைத்து உங்களின் கருத்தை தெரிவியுங்கள் என்றவுடன், மறுகணமே அலைபேசியை எடுப்பது
  4. நமக்கு தெரிந்த சமூக வலைகளில் (Social Networking sites) நம்முடைய எதிர்ப்பை எழுதுவது  (நான் இந்த ரகம்)
  5. நண்பர்களிடம் பொலம்புவது

என இப்படிதான் நம் எதிர்ப்பை காட்டிக் கொண்டு இருக்கிறோம். எண்ணங்களை சுதந்திரமாக வெளிபடுத்த தெரிந்த நாம், செயலில் இறங்க மறுக்கிறோம்.

அந்நியர்களிடம் இருந்து வாங்கிய நம் சுதந்திரத்தை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. நமக்குள் இருக்கும் திருட்டு கும்பலை ஒழிக்க நம்மால் போராட முடியவில்லை. தலைமுறை மாறும்போது போரட்ட குணத்தை நம்மிடம் விதைக்காமல் சென்றுவிட்டார்களோ? நிறைய பேசுகிறோம், படிக்கிறோம், விவாதிக்கிறோம், ஆலோசிக்கிறோம். ஆனால்…. போராட்டம் என்று வந்துவிட்டால் எங்களை விட்டு விடுங்கள் என்று சொல்லி தப்புகிறோம்.

நம்மால் ஒரு புரட்சி செய்ய முடியவில்லை. தலைவனை தேர்ந்தெடுக்க தெரியவில்லை, ஏன் கண்டுபிடிக்க கூட முடியவில்லை. ஊரில் என்ன நடந்தால் என்ன, நம் பொழப்பு நன்றாக போகுதா, பிரச்சினை இல்லாமல் செல்கிறதா… அது போதும் எனக்கு என்ற எண்ணம் நம்மில் ஊற ஆரம்பித்து விட்டது. உக்கார்ந்த இடத்தில இருந்துகொண்டே எதாவது சொன்னால் செய்கிறேன் என்ற நிலைமையில் இருக்கிறோம்.

நம் நாடு பின்னே சென்றுகொண்டு இருப்பதை நாம் கண்கூட பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தினம் தினம் ஊழல், திருட்டு, கொள்ளை என அதிகரித்துக்கொண்டே போகிறது. லட்சங்களில் நடந்துகொண்டு இருந்த ஊழல்கள் இன்று லட்சம் கோடிகளில் சாதரணமாக நடந்து கொண்டு இருக்கிறது. நம் கண் முன்னே நடக்கும் இந்த அவலங்களுக்கு, அரசாங்கம் காரணங்களை சொல்லி அழகாக மூடி மறைத்துக்கொண்டே செல்கிறது. எல்லாமே நமக்கு தெரிகிறது. உங்களுக்கு புரியவில்லையா, நாம் நம்மை இழந்து கொண்டு இருக்கிறோம் என்று? நம் வருங்கால சங்கதிகளுக்கு கொடுக்கப் போவது என்ன?

சரி என்ன தான் செய்யலாம்? என்னதான் நம்மால் செய்ய முடியும்? எண்ணங்களை சுதந்திரமாக வெளிபடுத்த தெரிந்த நாம், செயலில் இறங்க தயங்குகிறோம்.

  1. நாம் அனைவரும் இது ஒரு கூட்டு முயற்சி என்று முதலில் நம்ப வேண்டும். யாரும் இங்கே தனித்து போராட முடியாது. ஒவ்வொருவரின் ஆதரவும் முக்கியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
  2. சிறு சிறு பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். உங்களுக்கு அநியாயம் நேர்ந்தாலோ, அருகில் இருப்பவருக்கு நேர்ந்தாலோ உடனே வாய் விட்டு கேளுங்கள். அருகில் இருப்பவர் அநியாயத்துக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறாரா அவருக்கு ஆதரவு தெரிவியுங்கள். நான் பலமுறை கண்டதுண்டு… யாராவது நியாயத்தை கேட்டு சண்டை போட்டுக்கொண்டு  இருப்பார்கள்… நாம் நம் வேலையே மட்டும் பார்த்துக்கொண்டு சென்று விடுவோம். எடுத்துக்காட்டாக, மருந்துக் கடையில் காலவதியான மருந்தை தந்தற்காக யாராவது விவாதம் செய்துகொண்டு இருந்தால், நாம் நம் மருந்து கிடைத்தவுடன் திரும்பி பார்க்காமல் சென்றுவிடுவோம். நாமும் நின்று நியாயத்தை கேட்போம். கொஞ்சம் மாறுங்கள். அப்பொழுதுதான், உங்களுக்கு மற்றவர்கள் உதவுவார்கள்.
  3. நேரம் ஒதுக்கி, சிறு சிறு போரட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். எப்பொழுதுமே நமக்கு வேலை இருக்கத்தான் செய்யும். கணினியை விட்டு எழ நமக்கு நேரம் கிடைக்காது. இருந்தாலும், சிறு துளி பெரு வெள்ளம். ஒவ்வொருவரின் வருகையும், நமது தேவையை அழுத்திச் சொல்லும். தயவு செய்து மானம் போய்விடும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். இந்தியாவை நாம் மீட்டெடுக்கும் வேலையில் இறங்கவேண்டும்.
  4. உங்களின் எண்ணங்கள் எப்பொழுதும் இதையே எண்ணட்டும். நண்பர்கள் ஒன்று சேர்ந்து பேசும்பொழுது, சினிமாவையும் கிரிக்கெட்டையும் கொஞ்சம் தவிர்த்து, பொது பிரச்சனைகளையும் பேசுங்கள்.

சிறிதே எண்ணிப்பாருங்கள். ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு மாற்றம் நடந்தால் கண்டிப்பாக நாட்டில் ஒரு புரட்சியே நடக்கும். இது கண்டிப்பாக ஒரு கூட்டு முயற்சியே. அதை நாம் தான் தொடங்க வேண்டும். நாம் தான் நம் தலைவனை உருவாக்க வேண்டும்.  நம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் சக்தியை ஒன்று கூட்ட யாரும் பிறந்து வரமாட்டார்கள். நானும் நீங்களும் தான் முதல் அடியை எடுத்து வைக்கவேண்டும்.

குறை சொல்வதை விட்டுவிட்டு செயலில் இறங்குவோம். நாம் எப்படியோ, நாடும் அப்படிதான் இருக்கும். நாடு இப்படி இருக்கிறது என்றால், அது நம் குற்றம் தான். அடுத்தவரை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு நம் தவறுகளை சரி செய்ய ஆரம்பிப்போம். ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் மக்கள் புரட்சியை பார்த்து கற்றுக்கொள்வோம். நாம் ஒன்றும் அவர்களுக்கு சளைத்தவர்களில்லை.

மீண்டும் ஒரு சுதந்திர இந்தியாவை காண்போம்.