சிதைந்த கனவுகள், சிந்திய கண்ணீர்கள்

“சார் அவன் பேரு மார்க்”, கூட்டத்தில் இருந்து சத்தம் வந்தது.Arun Prasanthஅது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை பயிற்சிக்காக வெளியில் அழைத்துச் சென்றிருந்த தருணம்.  ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கையில், அருண் பிரசாந்த் எழுந்தபொழுது வந்த சத்தம் தான் அது.

தன்னை அழகாக அறிமுகம் செய்தார் மார்க், அதாங்க நம்ம அருண் பிரசாந்த். “சார் என் பெயர் அருண் பிரசாந்த். மெக்கானிக்கல் இன்ஜினியரிங், 2ம் வருடம் படிக்கிறேன். சொந்த ஊரு சத்தியமங்கலம் பக்கம். நல்லா football விளையாடுவேன் சார். அப்புறம் நல்லா வரைவேன் சார். அவ்ளோதான் சார் என்னப்பத்தி. சார் அப்புறம், என்ன எல்லாரும் மார்க் னு கூப்பிடுவாங்க. நீங்களும் என்ன அப்படியே கூப்பிடுங்க சார்.”

அந்த அலட்டல் இல்லாத அழகான அறிமுகத்தில் தான் மார்க் அறிமுகம் ஆனார்.

சரி  உக்காருங்க மார்க், உங்க நண்பர்கள் உங்கள பத்தி என்ன நினைக்குறாங்கனு கேக்கலாம்.

“சார் மார்க் செம ஜாலி டைப் சார். யாருக்கு என்ன உதவினாலும் சகிக்காம செய்வான் சார். நண்பர்கள்னா அவனுக்கு உயிர். அப்புறம், அவன் செம கஞ்சன் சார்… 10 பைசா செலவு பண்ணமாட்டான்” என கூட்டத்தில் இருந்து நண்பர்கள் கூறியதை கேட்டு மார்க்-க்கு சிறு புன்னகை, மனசுக்குள் சந்தோசம்.

இரண்டு  நாள் பயிற்சி வகுப்பில் துறுதுறு என்றிருந்த சிலரில் மார்க்-கும் ஒருவர். அன்று இரவு, உணவின்போது நானும் மார்க்-கும் தனியே பேச நேர்ந்தது.

“ஏன் மார்க்-னு பேர் வச்சாங்க அருண்?”

“சார், முதல் வருசத்துல ஒரு நாள் சிவில் வகுப்புக்கு போனேன். அப்போ அங்க பசங்க தண்ணி குடிக்கும் டம்ளரை தூக்கி போட்டு விளையாடிகிட்டு இருந்தாங்க. நான் திடீர்னு போனதுல, அது என் நெத்தில பட்டு மார்க் (காயம்) ஆகிடுச்சு. அதுல இருந்து எல்லாரும் என்ன மார்க்-னு செல்லமா கூப்பிடுவாங்க… எனக்கும் பிடிச்சுப்போச்சு”

நல்லா இருக்கு மார்க்.. என நானும் சிரித்தேன். உங்க குடும்பம் எல்லாம்?

“சார் நான் ஒரே பையன். அப்பா சத்யமங்களத்துல கேஸ் டெலிவரி (Gas Delivery) பண்ற வேலையில் இருக்கார். அம்மா, வீட்டுல தான் சார்”.

வாழ்கையில  என்ன சாதிக்கணும்னு ஆசை மார்க்?

“நானும் என் நண்பன் ராஜராஜனும் சேர்ந்து தனியா கம்பெனி ஆரம்பிக்கணும்னு ரொம்ப ஆசை சார். அதுக்காக இப்பவே நிறைய பேசுவோம். அருண் அப்பா, அம்மா இவங்கனு ஊரே எங்க அப்பா, அம்மாவை பார்த்து சொல்லணும் சார். அது தான் நான் என்னோட பெத்தவங்களுக்கு செய்யும் நன்றியாக இருக்கும் சார்”.

கண்டிப்பாக நடக்கும் மார்க். என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்.

அந்த  இரண்டு நாள் பயிற்சி வகுப்பில், மார்க் கூட்டத்தில் தனித்தே தெரிந்தார்.

நான்கு  மாதங்களுக்கு பிறகு 

“சார் நான் வெங்கடேஷ் பேசுறேன்”.

சொல்லுங்க வெங்கடேஷ். எப்படி இருக்கீங்க.

“சார் மார்க் நம்மள விட்டு போய்ட்டான் சார். ஒரு பைக் ஆக்சிடென்டுல…” பேச முடியவில்லை.

எப்ப நடந்துச்சு?

“கொஞ்ச நேரத்துக்கு முன்தான் சார்”

அதுக்கு  மேல் வெங்கடேஷினால் பேச முடியவில்லை. என்னாலும் தான்.

நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் சென்ற மார்க் பெரிய வாகனத்தை கடக்க முயன்ற mark friendsபொழுது கட்டுப்பாட்டை இழந்து, கொஞ்ச நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. அவரின் கனவு, அப்பா அம்மாவை பெருமைப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் இன்று மார்க்-குடன் புதைக்கப்பட்டுள்ளது. இன்று அவனது பெற்றோர்கள் கவலையிலும், தனிமையிலும் காலத்தை கழிக்கின்றனர்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எனக்கு தெரிந்தவர்களில் இதுவரை சுமார் 10 பேர் சாலை விபத்தில் உயிரிட்டுள்ளனர். எல்லாருமே 17 – 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் ஒருவர் தன் பிறந்தநாள் அன்றே இறந்துள்ளார். என்ன தான் சட்டங்கள் இருந்தும், நல்ல விஷயங்கள் தெரிந்தும் அதை பின்பற்றாதவர்களை நாம் என்ன செய்ய முடியும். இதில் எல்லாருமே வண்டியில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியாதவர்கள். அலட்சியம் எத்தனையோ உயிர்களை எடுத்துவிட்டது… இன்னும் எடுத்துக்கொண்டேதான் இருக்கும்.

இதில் மிகப்பெரிய வேதனை என்னவென்றால்,இதை எழுதும்பொழுது, மார்க்-கை பற்றிஒரு விஷயம் சரி பார்ப்பதற்காக அவருடைய கல்லூரி நண்பர் ஒருவரை அழைத்து இருந்தேன். அவர் ரொம்ப தாழ்ந்த குரலில் பேசினார். என்ன என்று விசாரித்ததில், அவர் இரண்டு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது விபத்தில் மாட்டியுள்ளார். கேட்டதில், இவரும் ஹெல்மெட் போடவில்லை. தன் நண்பனை பலி கொடுத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இவர் செய்யும் இந்த தெரிந்த தவறை எப்படி எடுத்துக்கொள்வது.

திருடனாய் பார்த்து திருந்தாவிடில் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல, மக்களா பார்த்து திருந்தாவிடில், சட்டம் இருந்தும் எதையும் தடுக்க முடியாது.

மார்க்கின் நினைவுகள் என்றும் என் மனதிலும் அவருடைய நண்பர்கள் மனதிலும் காலத்திற்கும் அழியாது.

இந்த  படைப்பு, என் அருமை அருண் பிரசாந்த்-கு கனத்த மனதுடன் சமர்ப்பணம்.