கோவில் செல்லவே தயக்கமா இருக்கு… யார் பொறுப்பு?

நான் கடவுளை வெறுப்பவனும் அல்ல, விரும்புவனும் அல்ல. நான் என் போக்கில் செல்பவன். இருந்தாலும், என்temple குடும்பத்தாரின் தேவைகளுக்கு ஏற்ப, அவர்களுடன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்கையில், கோவில்களில் இப்பொழுது சில விஷயங்களில் பெரிய மாற்றம் தெரிகிறது. அதுவும், இந்த சில வருடங்களில் தான் இந்த மாற்றம்.

வேண்டுதல் இருந்தால் மட்டும் கோவிலுக்கு மக்கள் செல்வதில்லை. மன ஆறுதலுக்கு கூட செல்பவர்கள் நிறைய உண்டு. நானும் அப்படி தான். ஏனென்றால், அங்கே வருபவர்கள் எல்லாம் ஓர் நல்லெண்ணத்துடன் தான் வருகிறார்கள். யாரும் ஒரு கெட்ட எண்ணத்துடன் கோவிலுக்கு வருவதில்லை. எண்ணங்களுக்கு ஓர் அலைவரிசை உண்டு என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனால், கோவிலுக்கு வருபவர்கள் எண்ண அலைகள் சுத்தமாக இருப்பதால், அங்கு ஒரு நிம்மதியான ஓர் சூழல் ஏற்படுகிறது. இது உண்மையும் கூட… இதுவே உங்களால் ஒரு சிறைச்சாலைக்கு சென்று இதே நிம்மதியை பெற முடியாது.

இப்பொழுதெல்லாம் கடவுளை தரிசிக்க பணம் மிக முக்கியமாகிவிட்டது. வசதிக்கு ஏற்ப கடவுளை தரிசிக்கலாம். சின்ன கோவிலாக இருந்தால் ரூபாய் 2ல் இருந்து ரூபாய் 20 வரை. பெரிய கோவிலாக இருந்தால் ரூபாய் 250, 500 வரை நபருக்கு. கடவுள் முன் எல்லாரும் சமம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். மேலும், கடவுளை வணங்கிய பின், அர்ச்சகரை பார்க்கவும் பணம் வேண்டும். நிறைய கோவில்களில், அர்ச்சகர்கள் உள்ளிருந்து வரும்பொழுதே, “காணிக்கை போடுங்கோ” என்று சொல்லிக்கொண்டு தான் வருகிறார்கள். ஒரு முறை சொன்னால் கூட பரவாயில்லை, “அம்பாளுக்கு காணிக்கை போடுங்கோ” என்று சொல்லிக்கொண்டே வருகிறார்கள். நீங்கள் காணிக்கை போடவில்லை என்றால், கையில் விழும் விபூதி, ரொம்ப சூடாக இருக்கும்  அவருடைய கோபத்தினால்.  இது இன்றைய தினங்களில், நிறைய கோவில்களில் காணலாம். இது ஒரு எடுத்துக்காட்டு தான்.

இன்னொன்றையும் கூற விரும்புகிறேன். நான் பார்த்த ஓர் இழிவான செயல். நீண்ட வரிசை தரிசனத்திற்காக சென்றுகொண்டிருந்தது. என் முன் வடஇந்திய பெண்மணி ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவர் தரிசனத்திருக்கு சென்றபொழுது, அங்கே இருந்த ஒரு அர்ச்சகர், இந்த வடஇந்திய பெண்மணியை மட்டும் சிறிது அதிக நேரம் தரிசிக்க வழி செய்துகொடுத்து, கடவுளை பற்றி ஆங்கிலத்தில் சொல்லி புரியவைத்தார். அந்த பெண்மணியும், தரிசித்துவிட்டு, விபூதியை வாங்கிவிட்டு, தட்டில் காணிக்கை போடாமல் சென்றார். அருகில் இருந்த இன்னொரு அர்ச்சகர் சொன்ன வார்த்தை, இங்கே கூற நா கூசுகிறது. அதில் சில மட்டும் இங்கே எழுதுகிறேன். அவர் சொன்னார்… “இந்த முண்டத்தை எல்லாம் ஏன்டா கூட்டிட்டு வர… இவளெல்லாம் பத்து பைசா போட மாட்டா. இடத்த காலி பண்ணு”. இதை, அந்த பெண்மணி காதில் படவே கூறுகிறார். என் காதிலும் விழுகிறது. நல்ல வேலை, அவர்களுக்கு தமிழ் தெரியாமல் போனது. சீ…இவ்வளவு அசிங்கமா?

இப்படி பணம் பணம் என்று நச்சரித்து வாங்கும் காசெல்லாம் முறைப்படி அரசாங்கத்துக்கு சென்றால், நிதி துறையை விட அறநிலையத்துறை மிகுந்த வருமானத்தை கொண்டு இருக்கும்.  அப்படி செல்லும் இந்த பணம், கோவில்களை மேம்படுத்த உபயோகிக்கிறார்களா? தமிழ் நாட்டில் கோவில்கள் பராமரிக்கும் முறை, என்னை பொறுத்த வரையில் ஒரு திருப்தியான செயலாக இல்லை. அதில் என்னுடைய கடைசி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சமீபத்தில் நான் என் குடும்பத்துடன் தமிழ்நாட்டிலுள்ள ஒரு பிரபலமான கோவிலுக்கு சென்றுவந்தேன். நான், என் பெற்றோர்கள், தங்கை மற்றும் அவர் குடும்பத்தாருடன் சென்றிருந்தேன். அந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில். அங்கே சென்றால், அங்கு உள்ள பெரிய தெப்பக்குளத்தில் குளித்து விட்டுத்தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். குளத்தை பார்த்தவுடனே, எனக்கு அதில் குளிக்க மனமில்லை. ஆனால், பெரியோர்கள் என்னை விடுவதாக இல்லை. நான் ஏன் ஒத்துக்கொள்ளவில்லையென நீங்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

குளம் என்றாலே, தேங்கிய நீர்தான். ஆனால், அந்த நீரை எப்படி எல்லாம் அசுத்தம் பண்ண முடியுமோ அப்படி எல்லாம் பண்ணுகிறார்கள். ஒரு பக்கம், மக்கள் சோப்பு, ஷாம்பூ போட்டு குளிக்கிறார்கள், மறுபக்கம் துணியை துவைக்கிறார்கள்.  சிலர் பல் துலக்குவதைக்  கூட இங்கே தான் செய்கிறார்கள். இந்த நீர் வருட கணக்கில் இப்படியே தான் இருக்கிறது. இதிலே எப்படித் தான் குளிப்பது? குளித்தால் கண்டிப்பாக புதிதாக ஒரு நோய் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. என் பெற்றோர் அதை தான் கேட்டார்கள் “இத்தனை பேர் குளிக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் வராத நோயா உனக்கு வரப் போகிறது?”. அரசாங்கமும், அறநிலையத்துறையும் இதனால் தான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களா?

இது அறநிலையத்துறையை மட்டும் சார்ந்ததல்ல, சுற்றுலாத்துறையும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறது. நம் ஊரில், புராதன கோவில்களில் தான் சுற்றுலா பயணிகளை பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு பயணிகள் இந்திய கோவில்களை ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள். இந்தியாவின் பழமையை எடுத்துச்சொல்லும் விஷயங்களில், கோவில்கள் மிக முக்கியமான பங்கு ஆற்றுகின்றன. நம் சிற்ப கலையும், நம் கட்டிட திறமையும் நிரூபிக்கும் இடம் இந்த பழம்பெரும் கோவில்கள் தான். அறநிலையத்துறை செய்வதற்கு நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு, என்ன செய்துகொண்டிருகிறார்கள்?

வருமானத்தில், அன்னதானம் போடுவதை விட்டுவிட்டு, அசுத்தத்தை  சுத்த படுத்தலாமே. அன்னதானம் என்பது ஒரு சிறப்பான செயல்தான். அது சிறப்பாக நடந்தாலும் சந்தோசமே. ஆனாலும் அதை விட முக்கியமானது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது.

சுத்தமாக வைத்து இருந்தால், பணம் கேட்பதை மக்கள் ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். மக்களும் கண்ட இடத்தை அசுத்தம் செய்ய தயங்குவார்கள்.