குழந்தையை தொழில் முனைவோராகாக்க

Father Son on Dusk

பொதுவாகவே நம்மளுடைய கல்விமுறை என்பது தொழிலாளர்களை உருவாக்கவே தவிர முதலாளிகளை உருவாக்க அல்ல. அதனால் நாம் படிக்கும் பட்டம் பலமுறை நல்ல தொழில் முனைவோரை  உருவாக்குவதில்லை. அனுபவமும், காலமுமும் தான் ஒருவரை சிறந்த தொழிலதிபர் ஆக்குகிறது.

நம்முடைய படிப்பு தான் அப்படி என்றால், நம்முடைய வீட்டு சூழ்நிலையும், சுற்றுப்புறமும் கூட இதற்கு சாதகமாக இல்லை.

  • தொழில் என்றால் பாதி மக்களுக்கு பிடிக்காது. அவர்கள் கூறும் காரணம் எல்லாம் – நிரந்தர வருமானம் கிடையாது, இதில் ஜெயித்தவர்கள் மிக குறைவு, நமக்கு தெரிந்தவர்களில் பாதி பேருக்கு மேல் தொழிலை விட்டுவிட்டார்கள் என்ற சித்தாந்தங்கள் தான் அதிகம்.
  • தொழிலில் நிரந்தர வருமானம் கிடையாது, வேலைக்கு போறோமா, மாசமானா ஒரு சம்பளத்தை வாங்கினோமா என்பது தான் எல்லோரும் சொல்வது.
  • தொழில் செய்யும் பையனுக்கு பெண் கொடுக்க யாரும் முன் வருவதில்லை. அப்பா தொழிலை மகன் பார்க்கும் கதையை விட்டுவிடுங்கள்.
  • எத்தனை முறை நாமோ, நம்மை சுற்றி இருக்கும் மக்களோ தொழில் செய்யும் மக்களை பாராட்டி இருக்கிறோம்? அவங்க பையன் இவ்ளோ சம்பளம் வாங்குறான், இவங்க பையன் USல செட்டில் ஆகிட்டானாம் என்றல்லவா நம்முடைய பேச்சு இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமான தமிழ் சினிமாவில் கூட தொழில் சம்பந்தமான படங்கள் தயாரிக்க படுவதேயில்லை.
  • வீட்டில் தொலைக்காட்சி செய்தி பார்க்கும்போது கூட, வணிக செய்திகளை பார்க்க தவிர்க்கிறோம். மொத்த 30 நிமிட செய்தியில் வணிக செய்தி வருவதே 2 அல்லது 3 நிமிடம் தான். அதற்க்கு அவ்வளவு தான் மதிப்பு.

இப்படி சூழ்நிலை இருக்கும்பொழுது ஒரு குழந்தை எப்படி தொழில் கற்றுக்கொள்ளும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? கொஞ்சம் சிரமம் தான்.

உங்கள் குழந்தைக்கு என்ன வயது என்று தெரியவில்லை. அதனால் நான் பொதுவாக என்ன செய்யலாம் என்று சொல்கிறேன்.

  • முதலில் வீட்டில் தொழில் சம்பந்தமான பேச்சுக்கள் இருக்கட்டும். இதை பொதுவாக உங்களுடைய இரவு சாப்பாட்டின் பொது இருக்கட்டும். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள். அப்பொழுது தொழில் சம்பந்தமாக பேசுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், வயதுக்கு ஏற்ப. நீங்கள் அன்று சந்தித்த ஒரு சம்பவமாக கூட இருக்கலாம். தொழில் சார்ந்து பேசுங்கள். குறை சொல்லி பேசாதீர்.
  • அவர்களுக்கு ஒரு வங்கி கணக்கு ஆரம்பித்து அதை அவர்களையே பராமரிக்க சொல்லுங்கள். சிறு சிறு சேமிப்பையும் அவர்களையே வங்கியில் போட சொல்லுங்கள்.
  • அவர்களுக்கு வேண்டிய பொருளை வாங்க அவர்களையே சேமிக்க சொல்லுங்கள். எதுவுமே உடனே வாங்கி கொடுக்காதீர்கள்.
  • அவர்களுக்கு தேவையான பொருளை வாங்க அவர்களுடைய பணத்தையே உபயோகிக்க சொல்லுங்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியும்.
  • பொருள் வாந்கும்பொழுது அவர்களிடமே கொஞ்சம் குறைவாக பணத்தை கொடுத்து, பேரம் பேசி வாங்க சொல்லுங்கள். இதனால் அவர்கள் negotiation திறமையை வளர்ப்பார்கள்.
  • அரசு எடுக்கும் முடிவுகள் எப்படி தொழில் நிறுவனங்களுக்கு உதவுகிறது அல்லது பாதிக்கிறது என்பதை விவாதியுங்கள்.
  • அரசின் நிதி அறிக்கையை சுருக்கமாக கலந்துரையாடுங்கள்.
  • தொழில் செய்பவர்களை அறிமுக படுத்திவையுங்கள். அவர்களுடன் அடிக்கடி சந்திக்கும் தருணத்தை ஏற்படுத்துங்கள். சந்திக்கும்பொழுது தொழில் சம்பந்தமான பேச்சுக்கள் இருக்கட்டும்.
  • பள்ளி பருவம் முடியும் காலத்தில், ஒரு தொழில் செய்யும் ஒரு வழிகாட்டியை (Mentor) தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தி வையுங்கள். விடுமுறை காலங்களில், அவரிடம்  வேலைக்கு போக சொல்லுங்கள்.
  • பங்கு சந்தைப் பற்றி நீங்களும் படியுங்கள், அவர்களுக்கும் சொல்லி கொடுங்கள். ஏன் ஏற்ற இறக்கம் வருகிறது, எப்படி ஒரு நிர்வாகம் மாறும் பொழுது பங்கின் விலை மாறுகிறது என்றெல்லாம் சொல்லிக்கொடுங்கள்.
  • தொழில் சம்பந்தமான புத்தககங்களை படியுங்கள், படிக்க சொல்லுங்கள். நிறைய தொழிலதிபர்களின் சுயசரிதைகளை படிக்கும்பொழுது நிறைய கற்றுக்கொள்ளலாம். Escorts நந்தா-வினுடையது ஒரு நல்ல சுயசரிதை.
  • “Rich Dad, Poor Dad” புத்தகம் கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டிய ஒன்று. இப்புத்தகம் தமிழில் கூட கிடைக்கிறது . உங்கள் குழந்தை அல்ல. இப்புத்தகம் ஒரு குழந்தையை தொழில் செய்யும் ஒரு பணக்கார அப்பா வளர்த்தால் எப்படி வளர்ப்பார், அல்லது ஒரு வேலையில் இருக்கும் சராசரி அப்பா வளர்த்தால் எப்படி வளர்ப்பார் என்று அழகாக எடுத்துரைத்திருக்கும்.

இதுபோன்று குழந்தையை சுற்றி இருக்கும், நடக்கும் விஷயங்களும் தொழிலை மேம்படுத்தி காண்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் கண்டிப்பாக உதவும்.

நீங்கள் செய்வதைத்தான் குழந்தைகள் கவனித்து செய்கின்றன. அதனால் உங்கள் கற்றலை வீட்டிலேயே ஆரம்பியுங்கள்.