குழந்தைகளா இல்லை அம்பானியின் க்ளோனிங்கா?

இன்று எனது வேலையின் சம்பந்தமாக இரு பெற்றோர்களை (குடும்பங்களை) சந்திக்க வேண்டி இருந்தது. கல்வி துறை சம்பந்தமாக என் தொழில் இருப்பதால், தினமும் பல குடும்பங்களை சந்தித்து கொண்டிருக்கிறேன். அவர்களுடைய குழந்தைகளுக்கு அறிவியல் பூர்வமான தீர்வை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு நல்ல படிப்பை கொடுக்க எவ்வளவு கஷ்ட படுகிறார்கள் என்று பார்க்கும்போது, மனம் கனக்கிறது. ஏன், இந்த மோசமான நிலைமை? யார் இதற்கு பொறுப்பு?

இப்பொழுதெல்லாம் பெற்றோர்கள் பள்ளிக்கு செல்லவே பயந்து இருக்கிறார்கள். போனால், ஏன் அது சொல்லி தரவில்லை, இது சொல்லி தரவில்லை என்று ஆசிரியர், பெற்றோரை பார்த்து கேட்கிறார். ஏன், பள்ளி நிர்வாகமும் கூட அதைத்தான் கேட்கிறது. இதற்கு பயந்தே பல பெற்றோர்கள், பள்ளிக்கு போவதில்லை. இன்று பார்த்த பெற்றோரும் அப்படிதான். தன குழந்தையின் படிப்புக்காக ஊர் விட்டு ஊர் வந்து தங்கி இருக்கிறார்கள். தொழிலை மாற்றி அமைத்து இருக்கிறார்கள். DIGITAL CAMERAஆனாலும் படிப்பில் ஒன்றும் மாற்றம் இல்லை. அது ஏன் என்றும் அவர்களுக்கு புரியவில்லை. இது இவர்களுக்கு மட்டும் இல்லை, கோடான கோடி பெற்றோர்களுக்கும் தான்.

சில விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 20 வருடங்களுக்கு முன்பு எவ்வளவு நேரம் பள்ளிக்கூடம் இருந்ததோ அவ்வளவு நேரம் தான் இன்றும் இருக்கிறது. அதே 8 வகுப்புகள். அதே 7 மணி நேர பள்ளிக்கூடம். ஆனால் பாடங்கள் 20 வருடத்துக்கு முன்பு இருந்ததுக்கும் இப்பொழுது இருப்பதற்கும், மாற்றங்கள் சொல்லவே தேவை இல்லை. அதேபோல், 5 பாடங்கள் இருந்தது போய், 8 – 12 பாடங்கள், அதே 8 வகுப்புகளில். இது இல்லாமல், கணினி வகுப்பு, பாட்டு வகுப்பு, மாற்று மொழி வகுப்பு என பல்வேறு. இதெல்லாம் அதே 7 மணி நேரத்தில். முடிந்து வந்தவுடன் 2 மணி நேரம் டியூஷன் வேறு. அப்புறம் வீட்டு கணக்கு வேற எழுதணும். அதென்ன குழந்தையா இல்லை அம்பானியின் க்ளோனிங்கா? முதலில் குழந்தையை குழந்தை பருவத்தை அனுபவிக்க விடுங்கள்.

கல்வி என்பது “மீன் பிடிக்க கற்று தர வேண்டுமே தவிர, மீன் பிடித்து தர கூடாது”. ஆனால் நாம் கல்வி என்ற பெயரில், நம் குழந்தைகளை கொடுமை செய்துகொண்டு இருக்கிறோம். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் குற்றம் என்கிறது அரசு. கல்வி என்ற பெயரில், இப்படி குழந்தையை கொடுமை செய்வதை எந்த சட்டத்தில் சேர்ப்பது?

சரி, இப்படியே வைத்துகொள்வோம், இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப நாம் இவ்வளவு சொல்லி தரவேண்டிய கட்டாயம் என்று. அப்போ, இன்னும் 10 வருடம் கழித்து, அன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப குழந்தைகள் படிக்க தூங்காமல் படித்தால் தான் முடியும் என சொல்லுவீர்களா?. புரிகிறதா வித்தியாசம்? 1000 ரூபாய் கொடுத்து வாங்கும் அலைபேசியில் கூட என்ன தொழில்நுட்பம் என்று பார்க்கும் நாம், நம் வாழ்வாதரமான கல்வியில் மட்டும் ஏன் பார்ப்பதில்லை. கல்வியில் மட்டும் ஏன் இன்னும், முறையான வளர்ச்சி இல்லை? அதற்கு பதிலாக, குழந்தைகளை அல்லவா கண படுத்தி, காய படுத்திக்கொண்டிருகிறோம்.

இதை பற்றி மேலும் விரிவாக அவ்வபோது எழுதுகிறேன். இத்துறையில் இருப்பதால், சில உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும் என நம்புகிறேன்.