என்னது கவுண்டமணி காலமாகிவிட்டாரா?

ஒரு தமிழ் பிரபல பத்திரிக்கையின் ஆன்லைன் பதிப்பில், இது போன்ற ஒரு செய்தி. “கவுண்டமணி மாரடைப்பால் மரணம்”. இது காலை 11.30 மணி அளவில் வந்தது. அதே பத்திரிக்கையில் மதியம் 12.45 அளவில், இது ஒரு வதந்தி என மீண்டும் ஒரு செய்தி. கவுண்டமணி காமெடி நடிகன் தான். ஆனால் அவர் வாழ்கையை வைத்தே ஒரு காமெடி பண்ணுவதா? இது தான் goundamani1நம் பத்திரிக்கைகளின் லட்சணம்.

பத்திரிக்கைகள் எவ்வளவு உன்னதமான காரியங்களை செய்ய வேண்டும். எத்தனை நாடுகளில், பத்திரிக்கைகள் நாட்டின் தலை எழுத்தையே மாற்றி இருக்கின்றன? எழுத்தின் ஆழம் எவ்வளவு அற்புதமான ஒன்று. அமெரிக்காவின் தலை எழுத்தையே மாற்றிய வாட்டர்கேட் ஊழல், ஒரு பத்திரிகையாளனின் எழுத்தின் மூலமல்லவா உலகிற்கு தெரிந்தது. அப்படிப்பட்ட, இந்த பத்திரிக்கை உலகம், ஏன் நம் ஊரில் மட்டும் இப்படி நடந்து கொள்கின்றன? அவசர செய்திகள்., என்னென்றால் நாம் முந்தி கொள்ளவேண்டும். நீங்கள் முந்திக்கொள்ள, எதை வேணும் என்றாலும், எப்படி வேண்டும் என்றாலும் எழுதுவீர்களா? ஒரு பிரபல, ஊரறிந்த நடிகனுக்கே இந்த நிலைமை என்றால், எங்களை பற்றி எது எழுதினாலும், மக்கள் நம்பி தானே ஆகவேண்டும்.

உங்களை கவர்ச்சி படம் போட வேண்டாம் என்று வற்புறுத்தவில்லை, கொலை, கொள்ளை சம்பவங்களை கொட்டை எழுத்தில் போட வேண்டாம் என்று சொல்லவில்லை, விளம்பரத்தால் பக்கத்தை நிரப்பவேண்டம் என்று சொல்லவில்லை. ஆனால், பொய் செய்திகளை போட வேண்டாம் என்று தான் சொல்கிறோம். நாங்கள் நீங்கள் சொல்வதை தான் நம்பிக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் சொல்லும் செய்தியை தான் எங்களுடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

உங்களுடைய உன்னதமான பணியை உணர்ந்து செய்வீர்களாக.