ஏன் நம் கல்வி முறையில் மாற்றம் தேவை?

நம்மில் பலரும் சொல்லும் ஒரு கருத்து, கல்வி முறையில் மாற்றம் தேவை. எதற்கு தேவை? எப்படி மாற்றம் தேவை? புது திட்டம் எப்படி இருக்கவேண்டும்? மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும்? இதைப் பற்றி என் கருத்துக்கள் சில.. என்னுடைய முன் கட்டுரையான “குழந்தைகளா இல்லை அம்பானியின் க்ளோனிங்கா?” என்னும் தலைப்பின் தீர்வாகவோ studyஇல்லை அதன் தொடர்ச்சியாகவோ இந்த கட்டுரையை எடுத்துக்கொள்ளலாம்.

கடந்த 25 வருடங்களில் நம் கல்வித்துறை ஒன்றும் பெரிய மாற்றத்தை பார்க்கவில்லை. 25 வருடங்களுக்கு முன் எப்படி நாம் கல்வி கற்றுக் கொண்டிருந்தோமோ, அப்படி தான் இன்றும் நடக்கிறது. பாடங்கள் தான் ஏறிக்கொண்டே இருகின்றனவே தவிர, படிக்கும் முறையோ மாறவில்லை. மேலும், பாடங்கள் அதிகமானது போல், கல்வி சொல்லிகொடுக்கும் நேரமோ அதிகமாகவில்லை. அதே 8 வகுப்புகள் (Periods) தான். 25 வருடங்களுக்கு முன் இந்த 8 வகுப்புகளில் 5 பாடங்கள் தான் படித்தோம். ஆனால், அதே 8 வகுப்புகளில் இப்பொழுது 12 அல்லது 14 பாடங்கள் படிக்க வேண்டி உள்ளது. ஏன்? உலகம் வேகமாக வளர வளர அதை குழந்தைகளுக்கு புகுத்த வேண்டும் என்ற என்னமா? சரி, அப்போ இன்னும் 10 வருடம் போனால், இதே 8 வகுப்புகளில், 25 பாடங்கள் நடத்துவீர்களா? யோசிக்கும்போதே பயமாக இல்லை?

சற்று பின்னோக்கி சென்றால், நமக்கு நன்றாக புரியும். பள்ளியில் நமக்கு எவ்வளவு நேரம் இருந்தது, ஆசிரியருக்கு எவ்வளவு நேரம் இருந்தது என்று. ஒவ்வொரு ஆசிரியருக்கும், தன் மாணவனை செதுக்க நிறைய நேரம் கிடைத்தது. ஆனால் இன்றோ, மாணவன் படித்தானா இல்லை தூங்குகிறானா என்று பார்க்க கூட நேரமில்லை. என்னென்றால், நான் சொன்னது போல, அவர்களுக்கும், நிறைய பாடங்களை அதே காலகட்டத்தில் சொல்லி கொடுக்க வேண்டிய சுமை. அவர் என்ன செய்ய முடியும்?

எத்தனை குழந்தைகள், ஒரு வினாவை சிறிது மாற்றி கொடுத்தால் பதில் சொல்ல சிரமப்படுகிறது? ஒரு மிகச்சிறிய எடுத்துக்காட்டு. ஒரு சிறு குழந்தையிடம் 2+3 என்ன என்று கேட்டால், விரலை விட்டோ, அல்லது மனதிலோ கூட்டி 5 என சொல்லிவிடும். உடனே அடுத்த நிமிடமே, அதே குழந்தையிடம், 3+2 என்னவென்று கேட்டுப் பாருங்கள். திருப்பிக்கூட்டும். இது தான் நிலைமை. இது குழந்தையிடம் மட்டும் இல்லை. பெரிய மாணவர்களிடமும் தான். கொஞ்சம் கேள்வியை மாற்றிக் கேட்டால், “இது எங்களுக்கு சொல்லி தரவே இல்லை” என்று சொல்லுவார்கள். காரணம், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், திறமையை வளர்பதில்லை. வளர்ப்பதற்கான முறையும் சிறிது சிறிதாக மறைந்துவிட்டது. இதுவெல்லாம் திறமையின் கோளாறுகள் தான்.

ஒருவருக்கு கார் ஒட்டி கற்று கொடுக்கிறோம் என்றால், பயிற்சி முடிந்தவுடன் அவர் எந்த காரை கொடுத்தாலும் ஓட்ட வேண்டும். அப்பொழுதான் உங்கள் பயிற்சி நன்றாக இருந்தது என்று சொல்ல முடியும். அதுவே பயிற்சி முடிந்தவுடன், ஒரு புதிய காரை கொடுத்தால்…”எனக்கு இந்த காரை எல்லாம் ஓட்ட தெரியாது, நான் மாருதி 800 என்றால் ஓட்டிவிடுவேன்” என்று சொன்னால், அது பயிற்சியா? அது தான் நம் கல்வியில் நடக்கிறது. ஒப்புக்கொள்ள மனம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இது தான் உண்மை. இதை நான் சொல்லவில்லை. ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சரி இதை எப்படி சரி செய்ய முடியும்? எப்படி இவ்வளவு வேகமாக வளரும் இந்த யுகத்தில் நாம் நம் குழந்தைகளை வளர்ப்பது? சரி, எப்படி தான் பாட திட்டத்தை மாற்றுவது? ஒருவனுக்கு “மீன் எப்படி பிடிக்க வேண்டும் என்று தான் கற்று கொடுக்க வேண்டுமே” தவிர “மீன் பிடித்து கொடுக்கக கூடாது”. நாம் அதை தான் செய்து கொண்டு இருக்கிறோம். சின்ன வயதில், சின்ன மீனை பிடித்து தருகிறோம். பெரிய வயதில், பெரிய மீனை பிடித்து தருகிறோம். ஏன்? கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு மீன் பிடிக்கும் வித்தைகளை கற்று கொடுங்கள். திமிங்கலமோ, சுறாவோ பிடிப்பது அவன் திறமை.

அவன் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம் கற்று கொடுங்கள். நம் இந்தியர்களின் பாரம்பரிய கல்விமுறையான “குருகுலம்” கல்வி முறையை சற்று உற்று நோக்கி பாருங்கள். அதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு. அதற்காக, நாம் குருகுலத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அம்முறை ஏன் வெற்றிகரமாக அமைந்தது என்று ஆராயுங்கள்.

எதற்கும் விடை உண்டு. எதையும் நம்மால் மாற்ற முடியும்.