கல்வி உரிமைச் சட்டம் – சட்டமும், நடைமுறைப்படுத்தலும்

8 வருடமாக கிடப்பில் கிடந்த இந்த சட்டத்தை நிறைவேற்றியதற்காக, காங்கிரஸ் அரசை முதலில் பாராட்டுவோம். இதை இன்னும் முன்னரே நடைமுறைப் படுத்தி இருக்கலாம் என்று சொல்லுபவர்களும் உண்டு தான். இருந்தாலும், childrenஇப்பொழுதாவது செய்தார்களே என நாம் அவர்களை பாராட்டுவோம்.

முதலில் இந்த சட்டம் என்ன சொல்கிறது என பார்ப்போம். பிறகு, இதை நடைமுறைப் படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என காண்போம்.

இந்திய கல்வி உரிமைச் சட்டம் – 2010

அவற்றில் சில இங்கே

  • 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி என்பது கட்டாயமாக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வயதில் மட்டும் இந்தியாவில் 22  கோடி குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் மட்டும் 92 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை.
  • ஒவ்வொரு இந்திய குழந்தையும் கல்வி பெறுவது கட்டாயம் என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் புரிந்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • பள்ளி நிர்வாக கமிட்டியோ அல்லது உள்ளூர் நிர்வாகிகளோ இம்மாதிரியான குழந்தைகளை, பக்கத்தில் இருக்கும் அரசாங்க பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அவர்களுடைய வயதுக்கு ஒப்ப வகுப்புகளில் சேர்க்க தேவையான சிறப்பு பயிற்சியை அளிக்கவேண்டும்.
  • தனியார் பள்ளிகளும் 25 சதவிகித ஒதுக்கீட்டை இக்குழந்தைகளுக்காக அளிக்கவேண்டும். (இதை ஏற்கனவே பல தனியார் பள்ளிகள் எதிர்க்க ஆரம்பித்து விட்டன.)
  • நிதி அமைச்சகம் இதற்காக 25000 கோடியை மாநில அரசாங்களுக்கு கொடுக்கவுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கணக்குப்படி மொத்தம் 1.71 லட்சம் கோடிகள் இத்திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த தேவைப்படும்.
  • மேலும் இச்சட்டத்தின் படி எந்த ஒரு கல்வி நிறுவனமும் ஒரு குழந்தைக்கு கல்வி தர மறுக்கக்கூடாது. மேலும் ஒவ்வொரு பள்ளியும் தேர்ந்த ஆசிரியர்களை நியமித்து இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பள்ளிகள் அடுத்த மூன்று வருடங்களில், இதை சரி செய்துகொள்ள வேண்டும்.
  • பள்ளிகள் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர்கள், விளையாட்டு மைதானங்கள், கட்டிட வசதிகள் என சில.
  • மாநில அரசாங்கமும், கிராம நிர்வாகமும் வீடு வீடாக கணக்கெடுத்து பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும்.  இது சாதி மத வேறுபாடின்றி நடக்கவேண்டும்.
  • சுயநிதி தனியார் பள்ளிகளில், பிற்ப்படுத்தப்பட்ட மற்றும் பின் தங்கிய மாணவர்களை தனிமைப்படுத்துதல் கண்டிப்பாக கூடாது. அவர்களுக்கு தனியாக வகுப்புகளோ, தனிப்பட்ட நேரமோ ஒதுக்கி அவர்களை வேறு படுத்தக்கூடாது.
  • அனைத்து சமூக குழந்தைகளுக்கும் வேறுபாடின்றி கல்வி சென்றடைய வேண்டும்.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் நடக்கும் தூரத்தில் கண்டிப்பாக பள்ளிக்கூடம் இருக்க வேண்டும். அதாவது அதிக பட்சம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பள்ளி கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு மாநில நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்கும்போதே நம் மனதில் தோன்றி இருக்கும். இதெல்லாம் சாத்தியமா? இதை எப்படி நடை முறைப்படுத்தப் போகிறார்கள்? இதற்குமுன் வந்த சட்டங்களைப் போலவே இதுவும் புஷ்வானமாகி விடுமா? இதில் எவ்வளவு பணம் திட்டத்திற்கு போகும், எவ்வளவு அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகளுக்குச் செல்லும்? இப்படி நம் மனது பல கணக்கு போட துவங்கி இருக்கும்.

யார் எப்படி கணக்கு போட்டாலும், இதை நாம் எவ்வளவு தூரம் நடைமுறைப் படுத்துகிறோமோ, அதில்தான் நம் வெற்றியும், நம் நாட்டின் வளர்ச்சியும் உள்ளது. கண்டிப்பாக இதை செய்வதில் மெத்தனம் இருக்க கூடாது. மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்கும் நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும். அதை நிர்வாகிக்க, கண்டிப்பாக தனி அமைப்பு வேண்டும். இல்லை என்றால், உங்களுக்கே தெரியும் என்ன அகும் என்று. கிலோமீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடம் என்பது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. அதில் கட்டிட ஊழல் வராமல் பார்த்துக்கொள்வதே பெரிய வேலை. அது தவிர, சுகாதாரமான கழிப்பறைகள் கண்டிப்பாக வேண்டும். இன்னும் நிறைய கிராம பள்ளிகளில், பெண்களுக்கு கழிப்பறைகளே இல்லை. இருக்கும் பள்ளிகளை மேம்படுத்த நிறைய நிதி ஒதுக்க வேண்டும். புதிதாக கட்டும் பள்ளிகளில் இவ்வசதிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஐ.நா.அமைப்பின் கணக்குப்படி இந்தியாவில் கடந்த 6 வருடங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதிகரித்து உள்ளது. வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால், இதற்கு எவ்வளவு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், மிக சொச்சமே. நம் கல்வி வளர மிக மிக முக்கியமான அடிப்படை வசதிகளில் ஒன்று, திறமையான ஆசிரியர்களை உருவாக்குவதே. அதற்கு முதலில் ஆசிரிய பயிற்சி கல்லூரிகளை தரமிக்க ஆக்குவதே மிகப்பெரிய சவால். அங்கு தான் பிரச்சனையின் வேர் உள்ளது. இதுவும், அரசாங்கத்துக்கு ஒரு பெரிய சவாலே. மேலும் நிறைய தனியார் பள்ளிகளில் சம்பளம் என்பது ஒரு மிக மிகச் சிறிய தொகையே. 2000 அல்லது 3000 ரூபாய்களுக்கு எல்லாம் 12 மணி நேரம் வேலை வாங்கும் பல பள்ளிகள் உள்ளன. இன்று தொழிநுட்ப துறையிலும் மற்ற துறைகளிலும் கொடுக்கும் சம்பளத்தை பார்க்கும் பொழுது இதெல்லாம் இன்றைய விலைவாசிக்கு ஒன்றுமே இல்லை. நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் இளைய தலைமுறையை உருவாக்குபவர்களே இவர்கள் தான். இவர்களை முதலில் கவனியுங்கள், இந்த துறையை மற்றவர்களும்விரும்பி வேலைக்கு வருமாறு மாற்றுங்கள்.

பணம் பணம் என்று அலையும் தனியார் பள்ளிகளின் பண்பை மாற்ற வேண்டிய நேரம் இது. சட்டம் சொல்வது போல், பின் தாங்கும் மாணவர்களை தனிமைப்படுத்துவதை தவிர்க்க தனியார் பள்ளிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களும், இது போன்ற கொடுமைகளின் காரணமும், விளைவுகளையும் அறிய வேண்டும்.  எந்த தனியார் பள்ளிகளும் காசு இல்லாமல், ஒரு மாணவரைக் கூட சேர்த்துக்கொள்வது இல்லை. இதில் எங்கே 25% ஒதுக்கி தருவது? எத்தனை தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சரியாக இருக்கின்றன? வாங்கும் காசு கொஞ்சமா? எத்தனை பள்ளிகளில் விளையாட மைதானங்கள் இருக்கின்றன? இருந்தாலும் எந்த குழந்தையை விளையாட விடுகிறார்கள்? அதனால் தானோ என்னவோ, இன்றெல்லாம் பள்ளிகளில் மைதானங்கள் தேவையற்றதாக ஆகிவிட்டது.  இதெல்லாம் எப்படி சரி செய்யப் போகிறார்கள்?தனியார் பள்ளிகளுக்கு சவுக்கு சுழற்றும் நேரம் வந்து விட்டது.

இச்சட்டம் ஒரு ஆரம்பமே. நாம் வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கும். இது ஒரு கொடிய, நெடிய பாதை. நிறைய சமாளிக்க வேண்டி இருக்கும். . கண்டிப்பாக, ஆரம்பத்தில், அனைத்தும் ஒரு விமர்சனத்துக்கு உரியதே. அதை தாண்டித்தான் நாம் வந்தாக வேண்டும். அனைத்தையும் ஒரே நாளில் நம்மால் செய்ய முடியாது. ஆனால், தவறுகளையும், ஓட்டைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்ய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாடு முன்னேற, ஒவ்வொரு குடிமகனும், தன்னால் இயன்ற வரை இச்சட்டத்தை சரி வர பயன்பட தங்களால் இயன்றவரை பாடு பட வேண்டும்.

விரைவில், ஒரு புது இந்தியாவை எதிர்கொள்வோம்.