கச்சத்தீவும்…. நம் மீனவனின் பாடும்…

கச்சத்தீவு.. அடிக்கடி தமிழ் செய்திகளில் அடிபடும் ஒரு பெயர். “தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு மீன் பிடிக்க சென்றபோது இலங்கை ராணுவத்தினரால் சுடப் பட்டனர்”, “கச்சத்தீவில் துப்பாகிச்சண்டை” இப்படி பல செய்திகள் கேள்விப்பட்டு fishmanஇருக்கிறோம். அப்படி அந்த தீவுக்கு என்னதான் பிரச்னை? யாருக்கு சொந்தம் இந்த தீவு? ஏன் நம் மீனவர்கள் அங்கேயே செல்கிறார்கள்? ஏன் அவர்களை இலங்கை ராணுவம் துரத்துகிறது? இதை எல்லாம் ஏன் தமிழக அரசோ, இந்திய அரசோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது? இங்கு என்னதான் பிரச்சனை? என்னால் முடிந்தவரை தகவல்களை எழுதப்  பார்க்கிறேன். கொஞ்சம் பிரச்சனை உள்ள விஷயம் தான்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள இந்த ஆளில்லா தீவு 285 ஏக்கர் நிலப்பரப்புடையது. இங்கே ஒரே ஒரு ரோமன் கத்தோலிக்க சர்ச் மட்டும் இருக்கிறது. இந்த சர்ச்சில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஒரு பெரிய விழா நடக்கும். இதில் இருநாட்டு மீனவர்களும் கலந்துகொண்டு இருந்தனர்.

ஆனால் இந்த தீவோ ஒரு அமுத சுரபியாக இருக்கும் என்று யாரும் அந்த நாளில் எண்ணவில்லை. இந்த தீவு மீன்கள், முத்து, இறால், பாசி, என ஒரு தாதுப்பொருட்கள் நிறைந்த இடமாக இருந்தது.  மீனவனின் தேவைகளை கொடுக்கும் வற்றாத இடமாகவே இருந்தது. இது மீனவர்களின் சொர்க்கம் என்றே சொல்லலாம். அதனால்தான் ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து மீனவர்களும் 15 மைல்கள் கடந்து இங்கே வருகிறார்கள். இங்கு நாம் மீன் பிடிக்கலாமா? ஒப்பந்தம் என்ன சொல்கிறது? யாருக்குத்தான் இது சொந்தம்? பிரச்னை எங்கே?

முதன் முதல் இந்த பிரச்னை 1946ல் துவங்கியதாக சிலர் கூறுகிறார்கள். சிலர் 1927ல் ஆரம்பித்ததாக கூறுகிறார்கள். சரியாக தெரியவில்லை. இருந்தாலும், எப்படி ஆரம்பித்தது என்று பார்போம். முதலில் 1949ல் இந்தியா இலங்கையிடமும், 1956ல் இலங்கை இந்தியாவிடமும் இந்த தீவை விமானப்படை பயிற்சிக்காக உபயோகப்படுத்த அனுமதி எதிர்பர்ர்க்கப்படது.   அன்றுதான் இந்த பிரச்சனையின் விதை ஊன்றப்பட்டது. அதிலிருந்தே இரு நாடுகளும் இப்பிரச்சனையை பல இடங்களில் பேசி தீர்க்கப்பார்த்தன. இப்படி பிரச்சனை இருக்கும்பொழுது, 1969ல் ஒரு இலங்கை செய்திதாளில் “கச்சத்தீவை இலங்கை கைப்பற்றியது” என வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் தான் பண்டாரநாயகேவும், இந்திராகாந்தியும் சந்தித்து இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நினைத்தார்கள்.

அப்படி இரண்டு நாடுகளும் தங்கள் கடல் எல்லையை பிரிக்க ஒப்பந்தம் போடும்போது தான்  கச்சத்தீவு பிரச்சினையே பெரிதானது. அப்படி பிரிக்கும் பொழுதுதான் இந்தியாவிடம் இருந்த கச்சத்தீவு இலங்கையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அரசும், அதை ஆமோதித்துத் தான் 1974ல் சில நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

அதில் சில முக்கியமான தகவல்கள் இங்கே.

  1. இரு நாடுகளும், தங்கள் கடல் எல்லைப் பகுதியில் உள்ள நிலப்பரப்பை ஆளவும், உரிமை கொண்டாடவும், அப்பகுதியில் உள்ள வளங்களை உரிமை கொள்ளவும் முழு தகுதி உண்டு.
  2. இந்த தீவுக்கு சுற்றுலா செல்ல எந்த தடையும் கிடையாது. மேலும், இலங்கை அரசிடம் இதற்காக அனுமதியோ, விசாவோ வாங்க தேவையில்லை.
  3. ஆனால் அங்கு இருக்கும் சர்ச்சில் வருடம் ஒருமுறை நடக்கும் விருந்தின் போது சுற்றுலா பயணிகளோ, மீனவர்களோ அனுமதிக்கப் படமாட்டார்கள். மேலும் மீனவர்கள் தங்கள் வலையை கூட இங்கே அந்நேரத்தில் காயப்போடக்கூடாது.
  4. இந்திய மற்றும் இலங்கை கப்பல்கள் தீவை சுற்றி உள்ள கடல் பகுதியை நிபந்தனையின்றி உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், இதில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க எந்த ஒப்பந்தமும் போடவில்லை. அதாவது, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியிலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியிலும் மீன் பிடிக்க எந்த ஒப்பந்தமும் அனுமதி அளிக்கவில்லை. இப்படி தெளிவற்ற ஒப்பந்தமே போடப்பட்டது.

மீண்டும் 1976ல் ஒப்பந்தம் ஒரு சில இடங்களை தெளிவுபடுத்த மாற்றி கையெழுத்திடப்பட்டது. அதன்படி, இரு நாடுகளும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட  நிலப்பரப்பில் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். மேலும், தமக்கு உட்பட்ட இடங்களில் மீன் பிடித்துக்கொள்ளலாம். இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், நாம் எல்லையை மீறக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம், இப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த தருணங்களில் தான் இங்கு கடல் வழி ஊடுருவலும் அதிகரிக்க ஆரம்பித்தது. இலங்கை தமிழர்கள் பலர் இத்தீவு வழியாக இந்தியா வர ஆரம்பித்தனர். மேலும், ஆயுத வணிகமும் கள்ளத்தனமாக நடப்பதாக இலங்கை அரசு கூறி, அங்கே தனது கப்பற்படையை ரோந்து பணியில் தீவிரப்படுத்தியது. பலமுறை இவர்களால் நம் மீனவர்கள் சுடப்படும், கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால் மீனவர்களோ, நமது எல்லையில் தான் இருந்தோம் என்று பல முறை கூறி இருக்கிறார்கள். இலங்கை அரசு எல்லை மீறுவதாக பல முறை குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இலங்கையோ, இது நியாயம் இல்லை என மறுக்கிறது.

பிரச்னை இப்படி இருக்கும்பொழுது, இதில் பாதிப்பவர்கள் இந்த மீனவர்கள் தான். தன் வயிற்று பிழைப்புக்காக கடலில் செல்லும் இவர்கள் இயற்கையிடம் போராடுவதை விட, இப்படி ரோந்து படையிடம் மாட்டி தத்தளிகின்றனர். மாதம் ஒரு முறையாவது நாம் இவர்களைப் பற்றி செய்தியை கேட்கலாம்.

அன்றாட வாழ்கைக்கு இவர்கள் படும் பாடு நாம் ஒரு கிலோ மீன் வாங்கும் பொழுது தெரிவதில்லை.