என்ன பாவம் செய்தது கோவை?

கோவை நன்றாக தானே இருக்கிறது? இருந்தது. அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா? வருகிறதே “தமிழ் செம்மொழி மாநாடு” அது தான் பிரச்சனை. எப்படி என கேள்வி எழுகிறதா? மேலும் படியுங்கள்.Quite_Road_Coimbatore

நம் அரசு என்று கோவையில் செம்மொழி மாநாடு என்று அறிவித்ததோ அன்று துவங்கியது கோவையை அழகு செய்யும் வேலை. எல்லாம் படு வேகமாக. கோவை நகரவாசிகள் எல்லாம் சந்தோஷ பட ஆரம்பித்தனர். சாலைகளை அகலபடுத்தி, புது சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. மின்சார கம்பிகள் எல்லாம், பாதாளத்தில் கொண்டு செல்ல உத்தரவிட பட்டது. அதற்கும் நிதி ஒதுக்கபட்டது. 150 சொகுசு பேருந்துகளும், தாழ்தள சொகுசு பேருந்துகளும் புதிதாக விட பட்டன. அதுவே பெரிய செயல். இப்படி பல துறைகளில் பல வேலைகள் முடுக்கி விடப்பட்டன. இதை பார்த்த, கோவை மக்களுக்கு படு சந்தோசம். கூடிய விரைவில், ஒரு புது நகரை பாப்போம் என்ற உற்சாகம். உண்மை தான், நாம் கூடிய விரைவில், ஒரு புதிய கோவையை பாப்போம். ஆனால், கொஞ்ச நாளைக்கு மட்டும் தான் பார்க்க முடியும். என்னென்றால், போடுவது ஒப்பனை (make-up) அல்லவா? ஒப்பனை எவ்வளவு நாளைக்கு தாங்கும்?

ஆம். அனைத்தும், தற்காலிகமாக அழகு படுத்தும் வேலை. கல்யாணத்திற்கு, மணப்பெண்ணை அழகுபடுத்துவது போல. கல்யாணம் முடிந்ததும், யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். பணத்தை கோடி கணக்கில் கொட்டி செலவு செய்கிறார்களே, இந்த தற்காலிக வேலைக்கா? நம் ஊர் சாலைகளை பற்றி உங்களுக்கு தெரியும், பொருத்து, ஆற அமர போட்டாலே, ஆறே மாதத்தில் வாயை பிளக்க ஆரம்பித்துவிடும். இந்த லட்சணத்தில், அனைத்து சாலைகளையும் மூன்றே மாதங்களில் போட சொல்லி இருக்கிறது அரசு, யோசித்து பாருங்கள், எப்படி போடுவார்கள் என்று. இந்த மூன்று மாதத்தில் போடும் சாலைகளில் ஒன்று கோவை – மேட்டுப்பாளையம் சாலையும் ஒன்று. இங்கு இருக்கும் பல பேருக்கு தெரியும், அந்த சாலை ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட சாலை. அதை சரி செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக முழு சாலையும் அடியோடு பெயர்த்து எடுத்துவிட்டு தான் போட முடியும். ஆனால், அது கண்டிப்பாக இந்த மூன்று மாதத்தில் முடியாது. அதனால், இப்பொழுது இவர்கள் செய்வது ஒரு தற்காலிக செயல். அதாவது, இருக்கும் சாலையின் மேலே இன்னொரு சாலை போடுவது. எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இது யாருடைய காசு? இப்படி வீண் செய்கிறீர்கள்? வேலையை செய்து முடித்துவிட்டு மாநாடு தேதியை அறிவித்து இருக்கலாமே.

உங்க ஆட்சியில் பேருந்து கட்டணத்தை ஏத்தவே மாட்டேன் என்று அடம் பிடித்து, புதுசு புதுசா பேருந்து விடுறீங்க. அதுவும் புது புது கட்டணத்தில். என்ன நியாயம்? இருக்கும் பண வீழ்ச்சியில், விலைவாசி ஏற்றத்தில், இப்படி கொள்ளை அடிக்குறீர்களே. அதுவும், கோவையில் திடீர்னு என்ன அக்கறை? மக்கள் ஏமாந்தவர்கள் என்றா? சென்னையை தான் பல நாளாக இப்படி ஒட்டி கொண்டு இருக்கிறோம்.

அதே போல அனைத்து முக்கிய சாலைகளில் இருக்கும் மின் கம்பிகளை பாதாளத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட பட்டுள்ளது. நம் மின் வர்ரியதிற்கு இதற்கு முன் அதன் பயிற்சியோ, இதில் முன்அனுபவமுள்ள நபரோ கிடையாது. எப்படி செய்வார்கள்? வேலை செய்கிறேன் என்ற பெயரில், அவ்வபோது மின்சாரத்தை வேறு முன் அறிவிப்பு இன்றி தடை செய்கிறீர்கள். இது குழந்தைகளுக்கு பரீட்சை நேரம் வேறு, மேலும் வெயில் காலம் வேறு. யாரு இதை பற்றி யோசிக்கிறார்கள்?

ஆமாம், இதெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? தமிழ் மக்கள் பல நாடுகளில் இருந்து வருகிறார்கள் என்றா? நம்ம ஊரும் முன்னேறி உள்ளது என்று காண்பிக்கவா? ஏன், அவர்கள் கோவையை தவிர எந்த ஊருக்கும் செல்லவே மாட்டார்களா? அவர்களது பூர்வீகம் எல்லாம் கிராமங்கள் தானே… அங்கே செல்லும் பொழுது நம் லட்சணம் தெரிந்து விட்டால்?

மாநாடு முடிந்து சில நாட்களிலேயே ஒப்பனை களைய ஆரம்பிக்கும். அதை செய்ய கண்டிப்பாக அரசுக்கு பணமும் இருக்காது, நேரமும் இருக்காது. என்னென்றால் செம்மொழி மாநாடு முடிந்து உடனே, கொஞ்ச காலத்தில் சட்டமன்ற தேர்தல் வந்து விடும். அப்புறம் கோவையை யார் பார்ப்பது?என்ன எண்ணத்தில் மக்கள் பணத்தில் இந்த வேலையை எல்லாம் இப்படி கோடிகளை கொட்டி செலவு செய்து கொண்டு இருக்குறீர்களோ? கோவை மக்கள் ஒப்பனை களையும் போதுதான் தெரிந்து கொள்வார்கள். தெரிந்தால் மட்டும்?