எனக்கு நடந்த ஒரு விருந்தோம்பல்

தமிழர்களின் சிறப்பில் ஒன்று விருந்தோம்பல். எனக்கு நடந்த ஒரு சம்பவம் இங்கே…..TamilFoodOnBananaLeaf

தொழில் சம்பந்தமாக வெளியூரில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பத்தை நான் பார்க்க நேர்ந்தது. அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக என்னுடைய வாடிக்கையாளராக உள்ளனர். காலை 10 மணிக்கெல்லாம் அவர்களை பார்க்க அவர்கள் நடத்தும் பள்ளிக்கு சென்று விட்டேன். அங்கே உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டி சென்று இருந்ததால், என் வேலை உடனே தொடர்ந்தது. சில மணி நேர பயிற்சிக்கு பின்பு, நான் சிறு இடைவெளி விட்டுவிட்டு வெளியே சென்று வந்தேன். மணி 12.30 இருக்கும். ஒரு 10 நிமிடம் கழித்து வந்து மேலும் 1 மணி நேரம் தொடர்ந்தது. பின், சரி நீங்கள் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்றேன்….

“நாங்கள் எல்லாம் மதிய உணவை முடித்து விட்டோம்”
அது எப்போ?
“நீங்கள் 10 நிமிடம் இடைவெளி கொடுத்த போது…”
“??????”
(ஓ அப்போ நான் தான் பட்டினியா???)

வழக்கமாக வேலை விசயமாக வெளியூர் செல்லும்பொழுது மதிய உணவு நிறைய முறை சாப்பிட முடியாது. எனவே, எனக்கு சாப்பிடாதது பெரிதாக தெரியவில்லை. அதனால் பயிற்சியை தொடர்ந்தேன். பயிற்சி முடிந்தவுடன், “நம்ம” தமிழ் குடும்ப முதலாளியை பார்க்க சென்றேன்… அவர்களோ, “வீட்டுக்கு வாங்க… அங்க நீங்க கொடுத்த மென்பொருளில் சிறு பிரச்சனை உள்ளது, சரி செய்து கொடுங்கள்” என்றார்.

மணி 4.30, வீடு.

கணினியில் என்ன பிரச்சனை என்று பார்த்து கொண்டு இருந்தேன். அவர்களுக்கும் தெரியும் நான் மதியம் சாப்பிடவில்லை என்று. என் வேலை தொடர்ந்தது. சில நிமிடங்களில், நல்ல சாப்பாட்டு வாசணை என் மூக்கை துளைத்தது. ஆஹா, விருந்துதான் நமக்கு என்று மனது சொல்ல தொடங்கிய நேரம்…அப்படியே திரும்பி, பார்த்தால் அவர்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆஹா….இப்பவும் நான் தான் பட்டினியா???

சும்மா இருந்தால் பரவாயில்லை இந்த தமிழ் முதலாளி. குழந்தைகளின் அருகில் அமர்ந்துகொண்டு பல கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தார். நமக்கோ வாசத்தில் பின்னால் மனம். வீட்டில் ஒருமணி நேரத்திற்குள் என் வேலை முடிந்தது.

காலையில் இருந்து ஒரு டீ கூட கொடுக்கவில்லை. ஒரு டீ கூட கொடுக்க மாட்டாங்களோ? கேட்டுவிடுவோம்….

“மேடம், ஒரு டீ போட சொல்லுங்களேன்”.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே, வீட்டில் 3 வேலைக்காரர்கள்….ம்ம்ம்ம்.

டீ வர ஒரு 10 நிமிடம் காக்க வேண்டி இருந்தது.

“…..ச்ச, அவரச பட்டுடேனோ? பேசாம வெளியே போய் குடித்து இருக்கலாமோ?…..”

டீ வந்தது…

திடீர்னு ஒரு 3, 4 பேர் பாடும் சத்தம்… திரும்பி பார்த்தால், நம்ம தமிழ் முதலாளி ஒரு கூட்டத்துடன் சாமி படங்களுக்கு முன் அமர்ந்து சாமி பாடல்களை பாடிக்கொண்டு இருந்தார்…. எதற்கு என்று எனக்கு புரியவில்லை.

டீயை குடித்தும் குடிக்காமலும் எழுந்தேன். என்னை பார்த்து, பாடிகொண்டே, தலையை ஆட்டி போய் வாருங்கள் என்று சைகையில் வழி அனுப்பி வைத்தார் இந்த வசதி படைத்த ஏழை தமிழர்.

பின் குறிப்பு: இவர்களை பார்க்க கோவையில் இருந்து 500 கிலோமீட்டர் பயணம் செய்து சென்றிருந்தேன்.