பள்ளி நாட்களும், கல்லூரி நாட்களும் நம் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள். அழகான வருடங்கள். கால காலத்திற்கும் நினைத்தால் கூட நம்மை ஒரு புன்னகை பூக்க வைக்கும் ஒரு வசந்தகாலம். மறக்கமுடியாத நிமிடங்கள், நாட்கள், நண்பர்கள் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் இருக்கும். காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நான் கீழே கொடுத்தவைகளில் எதாவது ஒரு விஷயம் உங்களை, உங்கள் பள்ளி நாட்களுக்கு இழுத்துச்செல்லும்.
1. சேர்ந்து படிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, படிப்பதை தவிர எல்லாம் பண்ணுவது
2. நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்க்க சென்று, ஒரே ஆட்டம் போடுவது
3. நம் நண்பர்களின் அப்பா, அம்மாவையும் கூட அப்பா, அம்மா என்று பாசமாக கூப்பிடுவது, அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, படுத்து தூங்குவது
4. யாராவது பைக் வைத்து இருந்தால், அதில் குறைந்தது மூன்று பேர் ஏறி செல்வது
5. பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் பொட்டிகடையில் திருட்டு சிகரெட் அடிப்பது
6. சுற்றுலா செல்லும்போது, நமக்கு பிடித்த நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது
7. குறைந்த மார்க் வாங்கினால் கூட, “மச்சான் நான் உன்னை விட ஒரு மார்க் அதிகம்டா” என்று சொல்லி மார் தட்டிக்கொள்வது
8. ஆசிரியர் திட்டி வெளியே அனுப்பும்போது கூட, சிரித்துக்கொண்டே வெளியே நடப்பது
9. வீட்டு கணக்கு (Home Work) எழுதவில்லை என்றால், திட்டு வாங்க தமக்கு துணை தேடுவது
10. பொது தேர்வு முடிந்தவுடன், எல்லா கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்து விட்டு, நம் நண்பனையும் அதே கல்லூரியில் விண்ணப்பிக்க சொல்வது
கண்டிப்பாக இதை படிக்கும் பொழுது, சில நண்பர்கள் கண்முன் வந்து சென்றிருப்பார்கள். அந்த நண்பர்கள் எங்கே? எப்படி அவர்களை நாம் இன்று மறந்துவிட்டோம்?
நாம் படிக்கும்போது, இவ்வளவு தொலை தொடர்பு சாதனங்கள் கிடையாது. செல்போன் கிடையாது, sms வசதி கிடையாது, இனைய வசதி கிடையாது. ஆனாலும், ஒரு தடவை கூட நம் நண்பர்களை முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடாமல் விடமாட்டோம். அப்படி கூப்பிட முடியவில்லை என்றால், நிகழ்ச்சியே மாற்றிவிடுவோம். அப்படி வாழ்ந்த நாம், இன்று நம் நண்பரை அழைத்து பேச நேரமில்லை.
நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். நாம் இப்பொழுது எவ்வளவு தொலைதொடர்பு சாதனைகள் வைத்து இருக்கிறோம். நம் கையில் எந்நேரமும் அலைபேசி (செல்போன்). அதுவும் இன்றெல்லாம் ஒரு அழைப்பு அழைக்க மிக குறைந்த செலவே. கையில் அலைபேசி இருக்கும், அதில் காசும் இருக்கும், அதில் நம் நண்பர்களின் எண்களும் இருக்கும். ஆனால் பேச மட்டும் முடியாது. கேட்டால், நேரமில்லை. அப்படி என்ன நாம் செய்து கொண்டிருக்கிறோம்?
சில நேரங்களில், நண்பர்கள் உன்னோட அலைபேசி எண் கொடு என்பார்கள். நானும் கொடுப்பேன். ஆனால் அவ்வளவுதான். அதுக்கு மேலே எந்த தொடர்பும் இருக்காது. அப்பொழுது வாங்கிய எண் எதற்கு என்றால், இன்னொரு நண்பர் கேட்டால் கொடுபதற்கு. ஏனென்றால், அவருக்கு எதாவது தேவை இருக்கும். இல்லை, திருமணத்திற்கு அழைக்க கேட்டிருப்பார்கள்.
இப்பொழுது இதற்கு மேலும், மென் துறையில் இருக்கும் நண்பர்கள் (என்னையும் சேர்த்து???) இன்னும் தொழில்நுட்பத்தை நன்றாக உபயோகிக்கிறார்கள். அதாவது ஆன்லைன் சாட் (Online Chat) எனப்படும் நவீன தொ(ல்)லை தொடர்பு வசதி. நண்பர்களை எல்லாம் தனது சாட்-ல் சேர்த்துவிடுவார்கள். தினமும் நண்பர்கள் அதில் பேச சந்தர்ப்பம் கிடைக்கும். தினமும், நண்பர்கள் சாட்-ல் வருவதையும் போவதையும் பார்பார்கள். ஆனால், ஒரு நாள் கூட பேச மாட்டார்கள். இது தான் இன்றைய உலகம். நாம் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களே, நாம் நெருங்கிய நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்து கொள்ளமாட்டோம். எப்படி தெரியுமா பகிர்ந்து கொள்கிறோம்? orkut, facebook, twitter போன்ற தளங்களில் என்ன நடக்கிறது என்று போட்டுவிட்டால், யார் வேணாலும் பார்த்து கொள்ளலாம்.
இதையே, உங்கள் நெருங்கிய நண்பர்களை அலைபேசியில் அழைத்து ஓரிரு நிமிடங்கள் பேசிப்பாருங்கள்… அதில் உள்ள சந்தோசம் எதிலுமே கிடையாது. தயவு செய்து நேரம் இல்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டிருக்காதீர்கள். வாரம் ஒருமுறை, முக்கியமான நண்பர்களிடம் பேசவே சிறிது நேரம் எடுத்து கொள்ளுங்கள். இந்த வாரம் சில நண்பர்களிடம் பேசுங்கள். அடுத்த வாரம் சிலரிடம் பேசுங்கள். அந்த நாள் உங்களுக்கு ஒரு சந்தோஷமான நாளாகவே இருக்கும்.
நண்பர்கள் ஒரு பொக்கிஷம். வருடம் ஒரு முறையாவது அவர்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். திருமணம், அல்லது உங்கள் வீட்டில் ஓர் முக்கியமான நிகழ்ச்சி போன்றவற்றிற்கு நேரிலோ அல்லது தொலைபேசியிலோ சொல்ல முயற்சி செய்யுங்கள். கடிதம், மின்னஞ்சல் போன்றவற்றை அழைப்பு விடுக்க தவிர்த்து விடுங்கள். அதே போல, அவர்களின் முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடுமானவரை முயற்சி செய்யுங்கள்.
நம் காலத்தில், இந்த நவீன உலகத்தில் உறவுகள் சிதைந்து கொண்டிருகின்றன. அதை நம்மால் இயன்றவரை காப்பாற்ற முயற்சி செய்வோம்.