இந்தியப் பெருஞ்சுவர்: விடைகொடுப்போம்

ஜூன் 22, 1996 – லண்டன் லார்ட்ஸ் மைதானம். இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். 23 வயதான ராகுல் 5வது  ஆளாக களம் இறங்குகிறார். சச்சின் முதல் அனைத்து வீரர்களும் சொற்ப Rahul_Dravidரன்களுக்கு வெளியேறி இருந்தனர். கங்குலி மட்டும் ஆடிக்கொண்டு இருந்தார். இவர் தாக்கு பிடிப்பாரா என்று அசாருதீன் (அன்றைய கேப்டன்) நினைத்து இருக்க கூடும். அந்த இளைஞர் 6 மணி நேரம் நின்று, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்து 95 ரன்கள் எடுத்தார். அன்றே இவருக்கு WALL என்ற பெயர் வந்திருக்க வேண்டும். ஏனோ வெகு நாட்கள் கழித்துத்தான் வந்தது.

இன்று மார்ச் மாதம் 9ம் தேதி 2012 உடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து உள்ளார். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர். பல சோதனைகளை தாண்டி தனது கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்து உள்ளார். சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்து உள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில், இவர் அதிகம் கவனிக்கப்படாத, விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படாத, பாரட்டப்படாத ஒரு விளையாட்டு வீரராகவே ஓய்வு பெற்றுள்ளார். இவர் காலத்தில் சச்சின் மற்றும் கங்குலி என்று இரு பெரிய விளையாட்டாளர்கள் இருந்ததால், இவர் எப்பொழுதும் இரண்டாம் பட்சமாகவே கருதப்பட்டார். கடினமான பல காலங்களில் பலமுறை கை கொடுத்து உதவி இருக்கிறார். இவரும், சச்சினும் சேர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 சதம் கண்டுள்ளனர். ஆனால் அந்த நேரங்களில் எல்லா பத்திரிக்கைகளின் பார்வையும் சச்சின் மேல் தான் இருக்கும். இவருடைய டெஸ்ட் ஆட்டங்கள் பலமுறை சரியான ஜோடி இல்லாமலே முடிவு கண்டுள்ளது. கொல்கத்தாவில் லட்சுமணுடன் ஜோடி சேர்ந்து ஆடி, தோல்வியில் இருந்து மீட்டு வெற்றி காண வைத்த அந்த ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்திட மாட்டார்கள்.

ஒரு நாள் போட்டிகளுக்கு இவர் சரிப்பட மாட்டார் என்று இவரை உதாசீன படுத்திய பொழுது, இவர் தன்னை மேலும் மெருகேற்றி மீண்டும் நிரூபித்தார். இந்திய கிரிக்கெட் ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் பொழுது கேப்டன் பொறுப்பை ஏற்று, கூடவே விக்கெட் கீப்பர் பொறுப்பையும் ஏற்றார். அது அவருக்கு சோதனை காலம் என்றே சொல்லலாம். கண்டிப்பாக அவருடைய வாழ்கையில் மறக்க முடியாத கட்டாமாகவே இருக்கும்.

அதுமட்டுமில்லாமல், இவர் சிறந்த ஃபீல்டர் என்பதை மறுக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்ததில் இவர்தான் இன்றும் முன்னிலை. 1996ல் அறிமுகமாகி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 13288 ரன்களும், ஒரு தின போட்டிகளில் 10889 ரன்களும் எடுத்து உள்ளார். கண்டிப்பாக இது ஒரு பெரிய சாதனை தான். சச்சின் என்றொரு மாபெரும் சாதனையாளர் நம்மிடம் உள்ளதால் எல்லாருடைய பெரிய சாதனைகளும் சிறியதாகவே தெரிகின்றன. அதனால் தான் என்னவோ, இவர் பலமுறை நாம் கண்களுக்கு தெரியாமலே இருந்துள்ளார்.

இவரைப்போல் ஒரு தரமான, கிளாசிக் மட்டையாளரை நாம் இனி பார்ப்பது கடினம்தான். இவரே கடைசியாக கூட இருக்கலாம். இவருடைய இடத்தை நிரப்புவது கண்டிப்பாக கடினமான செயல் தான், ஏன் முடியாத ஒன்று என்றே சொல்லலாம்.