அருவருப்பு… அவமானம்…. இதுதான் ஊடகங்கள்….

தமிழ் வருட பிறப்பு அன்று, தமிழரைப்  பற்றி கவலைப்படுவதை விட நம் தொலைக்காட்சிகள் தமன்னாவையும் அவரது அழகைப் பற்றியுமே கவலைப்படுகின்றன. காலம் காலமாக, தினம் தினம் இந்த சினிமாவை வைத்துதான் இந்த Tamil Mediaதொலைக்காட்சிகள் பொழப்பை நடத்திக்கொண்டு இருக்கின்றன. ஓரிரு நாட்களாவது உருப்படியாக ஏதாவது செய்யலாமே. படம், பாட்டு, ஆட்டம், கூத்து, கும்மாளம்… இது தான் நம் தொலைக்காட்சிகளின் இன்றைய முகம். இளம் தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பதும் இதுதான்.

தேசிய மொழி இந்தியில் கூட இத்தனை தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது. ஆனால் நம் தமிழில் அத்தனை சேனல்கள். இதில் தமிழைப் பற்றி பேச பொதிகையும், மக்கள் தொலைக்காட்சியும் விட்டால் யாரும் இல்லை. இன்னும் கொஞ்ச நாளில், இந்த சேனல்களும் விளம்பரம் கிடைக்காமல் இழுத்து மூட வேண்டியது தான். தமிழைப் பற்றி பேச யார் விளம்பரம் தருவது?

மேஜர். ஸ்ரீராம் குமார், இந்த பெயரை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?  இல்லையென்றால், இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு அமைதி காலத்தில் கொடுக்கப்படும் மிக உயரிய விருதான “அசோக் சக்ரா” விருதை சென்ற வருடம் வென்ற தமிழர் இவர். இவ்விருது போர்க்காலத்தில் சாதிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் “பரம் வீர் சக்ரா” விருதுக்கு இணையானது. 30 வயதான இந்த மதுரையை சேர்ந்த தமிழர், தமிழர்களுக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்திய சரித்திரத்தில் இவ்விருதை பெரும் இரண்டாவது வாழும் அதிகாரி இவர். அதாவது, இதுவரை இவ்விருது இருவரைத் தவிர, உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இவர் செய்த மிகப்பெரிய செயலே இவரை இவ்வளவு பெருமைக்குரிய விருதை பெற வைத்துள்ளது. இந்தியாவின் கிழக்கு மாநில காட்டுப் பகுதியில் தன் படையினருடன் பல நாட்கள் தங்கி அங்கே இருந்த தீவரவாதிகளின் இணைப்பை துண்டித்து, அவர்களை கூண்டோடு அழித்தவர்.

விருது அறிவித்த பின்பும் சரி, விருது வாங்கிய தினமும் சரி, எந்த தமிழ் தொலைக்காட்சியிலும், செய்தித்தாளிலும் இதைப் பற்றி எந்த செய்தியும் வரவில்லை. சில ஆங்கில செய்திதாள்களிலும், தொலைக்காட்சியிலும் இவரைப்பற்றி செய்திகள் அன்றைய தினம் வந்தது. கொஞ்ச நாள் கழித்து, தினமலர் பத்திரிக்கையில் இவரைப்பற்றி பிரசுரித்து இருந்தார்கள். இது தான் அதிகபட்சம் நம் பத்திரிக்கை உலகம் சாதித்த தமிழருக்கு செய்த மரியாதை.

இப்பொழுதெல்லாம் ஒரே நிகழ்ச்சிகள் பல பேரில் பல சேனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன. விளம்பரதாரர்கள் மட்டும் தான் வேறு. அதுவும், நடன போட்டி என்று நடத்தப்படும் நிகழ்ச்சிகளை குழந்தைகளுடனோ, குடும்பத்துடனோ பார்க்க மனம் கூசுகிறது. அதுவும், இந்த நமிதா போடும் உடைகளுக்கு அளவே இல்லை. படம் முடிந்தால் நாடகம், நாடகம் முடிந்தால் ஆட்டம், ஆட்டம் முடிந்தால் காமெடி, காமெடி முடிந்தால் மீண்டும் படம். இது தான் இவர்கள் பொழப்பு. இதில் நடு நடுவே நம்மை திருப்தி படுத்த செய்திகள். அதிலும் உலக செய்திகள் என்று வாசிப்பார்கள் பாருங்கள்… எங்கு இருந்து தான் கிடைக்குமோ இந்த செய்திகள். “அமெரிக்காவின் லூசியானா மாகணத்தில் உள்ள சரணாலயத்தில் உள்ள குரங்கு ஒன்று மூன்று குட்டிகளை ஈன்று உள்ளது. இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து இழுக்கிறது.” நாட்டுக்கு மிகவும் முக்கியமான செய்தி, அதுவும்  20  நிமிட விளம்பரங்களுக்கு இடையே 10 நிமிடம் சொல்லப்படும் முக்கிய செய்திகளில் இதுவும் ஒன்று.

அதிலும், எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் பேசுபவர்கள் பாதிக்கு மேல் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். ஒரு நிமிடம் பேசினால் அதில் பாதிக்கு மேல் ஆங்கிலம் தான். சில பேச்சு நிகழ்ச்சிகளிலும் கூட, தமிழில் பேசுபவர்கள் மிக மிக குறைவு. குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் நிகழ்ச்சிகளை விட பாடும் திறனையும், ஆடும் திறனையும் வளர்க்கும் நிகழ்சிகள் தான் அதிகம். எங்கே போய்கொண்டிருக்கிறது இந்த தமிழ் உலகம்?

எத்தனை பேருக்கு வேணு ஸ்ரீநிவாசனையோ, ஸ்டெர்லிங் சிவசங்கரனயோ தெரியும்? தமிழ் நாட்டில் எத்தனை மாபெரும் தொழில் மேதைகள், சாதனையாளர்கள்  இருக்கிறார்கள்… அவர்களை பற்றி சொல்லவும், அவர்களின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்வதும் எவ்வளவோ இருக்கின்றன. தமிழர் தினங்களான தமிழ் வருட பிறப்பு, தைத்திருநாள் அன்றாவது இவர்களை பற்றியோ, இவர்களை பெருமைப் படுத்தியோ கவுரவிக்கலாமே. 24  மணி நேரத்தில் நம் தொலைக்காட்சிகள் தமிழ் வளர்ச்சிக்கும், மற்ற முன்னேற்றத்திற்கும் ஒதுக்குவது அதிக பட்சம் 3  மணி நேரம் தான். அதுவும் காலை அந்த வணக்கம் தமிழகத்தில் தான்.

அட தொலைக்காட்சிகள் தான் இவ்வாறு என்றால், பத்திரிக்கைகளோ இதற்குமேல். பல வாரப்பத்திரிக்கைகளின் தலையங்க செய்திகளே கற்பழிப்பு, கொலை, காமம் இதைப்பற்றி தான். வாரம் இருமுறை வெளியாகும் சில பத்திரிக்கைகள் இது போன்ற செய்திகளை வைத்துத்தான் பணமே சம்பாதிகின்றன. அதுவும் அதில் போடப்பட்டு இருக்கும் செய்திகளோ, படங்களோ மிக மிக கேவலமாக இருக்கும். மிக பிரபலமான பத்திரிக்கைகள் கூட சினிமாவை நம்பித்தான் இருக்கின்றன. சினிமா செய்திகள், கிசு கிசு, கவர்ச்சிப்படங்கள் என்று தான் புத்தகம் முழுவதும் இருக்கும்.

கோடிகளை வாரிக்குவிக்கும் இந்த ஊடக நிறுவனங்கள் உருப்படியாக நிறைய செய்யலாமே. நித்யானந்தாவை தொடர்ந்து செய்திகளில் போடுவதை விட்டுவிட்டு, சாலை விதிமுறைகளை பற்றி எடுத்துரைப்பது, சுகாதாரம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தலை நிமிர்ந்த தமிழகளைப் பற்றி எழுதுவது போன்ற நாட்டுக்கு தேவையான விஷயங்களை பற்றி எழுதவோ, ஒளிபரப்பவோ செய்யலாமே.