ஆட்டோக்காரர்களா இல்லை அநியாயக்காரர்களா?

இந்த வாரம் நான் என் தொழில் சம்பந்தமாக புதுக்கோட்டை வரை செல்ல வேண்டியிருந்தது. அங்கே நடந்த ஓர் அனுபவத்தை நான் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நான் எந்த ஊருக்கு சென்றாலும், ஆட்டோ எடுக்கும் முன், பக்கத்தில் இருக்கும் கடையில் நான் போக வேண்டிய இடத்திற்கு  ஆட்டோவில் சென்றால் எவ்வளவு செலவாகும் என கேட்டு தெரிந்து தான் ஆட்டோ எடுப்பேன். இந்த auto1முறையும் ஓர் கடையில் நான் போகவேண்டிய இடத்தை சொல்லி கேட்டதற்கு 25 அல்லது  30 ரூபாய் கேட்பார்கள் என்று கடைக்காரர் சொன்னார். ஒரு நன்றியை சொல்லிவிட்டு நடந்து வந்தேன். வழக்கமாக நான் பேருந்து நிலையத்தில் நிற்கும் ஆட்டோக்களை கூப்பிடுவதில்லை. அவர்கள் அதிகமாக கேட்டு தொந்தரவு செய்வார்கள் என்ற எண்ணம் எனக்கு வெகு காலமாக உண்டு. ஆனால் நான் வெகு நேரம் தேடியும், வேறொரு ஆட்டோ கிடைக்கவில்லை. சரி, அங்கேயே எடுப்போம் என வரிசையில் இருக்கும் ஆட்டோக்களில் முதலில் நின்ற ஒரு ஆட்டோவை அழைத்தேன்.

அந்த நேரம் பார்த்து எனக்கு ஒரு போன் வந்தது. எடுத்து பேசிக்கொண்டே, ஆட்டோக்காரரிடம் நான் போக வேண்டிய இடத்தை கூறிவிட்டு ஏறி அமர்ந்தேன். பார்தீங்களா, எவ்வளவு என்று கேட்க மறந்து விட்டேன். சரி 30 ரூபாய் சொன்னதை அதிக பட்சமாக என்ன 50 ரூபாயா கேட்கவா போகிறார் என்றுகூட எண்ணி இருக்கலாம் என் மனது. பேசிக்கொண்டே இதெல்லாம் மறந்துவிட்டேன். வந்த இடம் இறங்கியவுடன், எவ்வளவு என்று ஆட்டோக்காரரிடம் கேட்டேன். அவர் வந்தது அதிகபட்சம் 2 கிலோமீட்டர் இருக்கும். நான் பாக்கெட்டில் இருந்து ஒரு 30 ரூபாயை எடுத்துக்கொண்டே கேட்டேன். எவ்வளவு சொன்னார் தெரியுமா? கேட்டவுடன், நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன். ஒரு சில வினாடிகள் பேசிப் பார்த்துவிட்டு,  ஒத்துவராததால் வந்த வேலையே பார்க்க உள்ளே நடக்க ஆரம்பித்தேன்.

ஏன் என்றால், அவர் கேட்டது 120 ரூபாய். உங்களால் நம்ப முடியவில்லை இல்லையா? ஆனால், இது நிசப்தமான உண்மை. யாராலும் நம்ப முடியாத ஒன்றை அவர் கேட்டார். அவர் பின்னாடியே வந்தார்.சார் பணம் கொடுங்கள் என்று. நான் பேசவே இல்லை. என் கையை பிடித்து இழுத்து நிறுத்தினார் அந்த அநியாயக்காரர். சில வாதத்திற்கு பிறகு சொன்னேன்  “என்னாலே பணம் எல்லாம் தர முடியாது, நீங்கள் காவல் நிலையத்தில் சென்று காவலரிடம் புகார் செய்யுங்கள். வேண்டும் என்றால், இங்கே கூட கூட்டிக்கொண்டு வாருங்கள். நான் இன்னும் 5 மணி நேரம் இங்கே தான் இருப்பேன்” என்றேன். அப்புறம் வாக்குவாதம் முத்தி, கடைசியில் அந்த அநியாயக்காரர் சொன்னார் “இந்த காசை நான் உனக்கு பிச்சை போடுறேன், வச்சு பொழச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு விறு விறு என்று சென்றுவிட்டார்.
இதில் யார் தப்பு என்று சொல்லுவது? “ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்களே முட்டாள்கள்” என்பார்கள். அப்பொழுது நான் முட்டாள் என்று ஒப்புக்கொள்வதா? ஒப்புக்கொள்கிறேன், என் தவறு தான். தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்த ஒருவரிடமே இப்படி என்றால், மற்றவர்கள் நம் ஊருக்கு வரும்பொழுது நிலைமையை நினைத்துப்பாருங்கள். அதில் ஒரு எடுத்துக்காட்டு…. முன் ஒருமுறை நான் சென்னையில் இருக்கும்பொழுது ஒரு சம்பவம் நடந்து, நாளிதழ்களில் கூட வந்தது. ஒரு வெளிநாட்டுக்காரர், சென்னையில் ஆட்டோ எடுத்திருக்கிறார். ஏறும்பொழுது 100 ரூபாய் என  கூறிய ஆட்டோக்காரர் இறக்கி விடும்பொழுது 100 டாலர் என கூறி, சண்டை போட்டு வாங்கி இருக்கிறார். என்ன அநியாயம். நம் நாட்டின் பெயர் எப்படி எல்லாம் கெடுக்கப்படுகிறது?
இதை உரியவர்கள், ஒழுங்கு படுத்தலாமே. தமிழ்நாட்டு ஆட்டோக்களில் என்றுமே மீட்டர் ஓடியதே இல்லை. இதை சரி செய்ய யாரும் முன் வரமாட்டார்களா? ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 7 ரூபாய் என்பதை 8 ரூபாய் என்று கூட இருக்கட்டும். ஆனால், அதை முறைப்படி சட்டமாக்கலாமே. இப்பொழுதெல்லாம், குறைந்தபட்ச கட்டணமே 30 ரூபாய் ஆக்கிவிட்டார்கள். கார் எடுத்தால் கூட இவ்வளவு செலவு கிடையாது. தினம் தினம் இவர்களிடம் ஏமாறுபவர்கள் எத்தனை பேர். மீட்டர் இல்லாமல் எந்த வண்டியும் ஓட்டக்கூடாது என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதை தீவிரப்படுத்தவும் வேண்டும். அவ்வாறு செய்தால், ஒவ்வொரு தமிழனும் ஆடோக்காரரை கண்டு பயப்படமாட்டார்கள்.இதனால் ஒட்டு மொத்த ஆட்டோ ஓட்டுனரையும் குற்றம் சொல்லவில்லை. சிலர் செய்யும் தவறுகளால், நாம் யாரைக்கண்டாலும் பயப்படவேண்டி இருக்கு. இது இயல்பு தானே.