அழு, அழுதுவிடு, அழுதுவிட்டு போ

தமிழ் தொலைக்காட்சிகள் முற்றிலும் அழுகையும், நம்முடைய அனுதாபத்தையும் நம்பியே பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றன என்பCrying_Indian_Ladyதை நாம் உணரவேண்டிய தருணம் இது. எப்பொழுதும் சீரியல்கள் தான் அழுதும், அழவைத்துக் கொண்டும் இருக்கும். இப்பொழுது எல்லா நிகழ்ச்சிகளுமே அதன் பின்னணியை பின்பற்ற ஆரம்பித்து உள்ளன.

ஆரம்ப காலங்களில் விசு அவர்கள் “அரட்டை அரங்கம்” என்ற பெயரில் சொந்த கதைகளையும், சோக கதைகளையும், கேட்க கூடாத கேள்விகளையும்  கேட்டு எல்லார் முன்னிலையுலும் யாரையாவது அழ வைத்து பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தார். பின்னர் அதையே ஓவ்வொரு நிகழ்ச்சிக்கும் செய்ய ஆரம்பித்தார். இப்படி ஆரம்பித்த இந்த கலாச்சாரம் இப்பொழுது எல்லா நிகழ்சிகளுக்கும் பரவி உள்ளது. இப்பொழுது யாரையாவது அழ வைக்காமல் எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லை. நிகழ்ச்சிகளின் தரத்தைப் பற்றி பேசினால் அது தனிக் கதை. அதைப்பற்றி இப்பொழுது நான் எழுதவில்லை.

மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 நிகழ்சிகளின் தரத்தைப் பற்றி நான் சொல்ல தேவை இல்லை.  அதில் நடுவர்கள் திட்டுவார்கள், சண்டை போடுவார்கள். அப்புறம் பார்த்தல் யார் அழுவார்கள் என்றே தெரியாது. ஒரு பக்கம் நடுவர் அழுதுகொண்டே போவார், இன்னொரு பக்கம் போட்டியாளர் அழுதுகொண்டு இருப்பார்.

அதே போல், குழந்தைகள் பாடும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், குழந்தைகளை பாட அழைத்து அவர்களை கொடுமை செய்வதற்கு ஒரு அளவே இல்லை. அவர்கள் குழந்தைகள், அவர்களுடைய திறமைக்கு ஏற்பத்தான் பாடுவார்கள் என்று முதலில் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்களிடம் SPB, ஜானகி அளவுக்கு எதிர் பார்த்தால் என்ன செய்ய முடியும். இன்னும் எதி இறக்கு, சுத்தி இந்த வரியில் சரி இல்லை என இவர்கள் ஆராய்வது கொடுமை. அதோடு நின்றால் பரவாயில்லை. அவர்களை அவர்கள் நண்பர்கள், பெற்றோர்கள் முன்பு திட்டுவதோடு மட்டும் இல்லாமல் உலகமே பார்க்குமாறு திட்டி அழவைப்பதில் என்ன ஒரு சந்தோசம்? இதைத் தான் நாம் தினமும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

கதை அல்ல நிஜம்னு ஒரு நிகழ்ச்சி. சொல்லவே தேவை இல்லை. அவ்வளவு கொடுமை. ஏன் உங்க புருஷன் உங்கள அடிச்சார், ஏன் நீங்க தற்கொலைக்கு முயற்சி பண்ணினீங்க, ஏன் ஏன் ஏன் னு உயிர் பொழச்சு வந்தவங்கள, இவர்கள் கேள்வி கேட்டே கொன்னுகிட்டு இருப்பாங்க. அவர்களுக்கு அழுகை வரவில்லை என்றால், இன்னும் கேள்வி அருவருப்பானதாக இருக்கும்.  பதில் சொல்லவில்லை என்றால், சொல்லுங்க சொல்லுங்க, மனசுல உள்ள பாரத்தை இறக்கி வைங்க என்று வேற நம்ம லட்சுமி சொல்லுவாங்க.

இப்படி பரவி இந்த ஒரு அசிங்கமான கலாசாரம் இப்பொழுது எல்லா நிகழ்சிகளிலும் உள்ளது. இது நாடகமா, இல்லை நிகழ்வா? இது எல்லாம் உண்மை என்றால், ஏன் இதை எல்லாம் எடிட்டிங்கில் நீக்குவதில்லை? அப்போ இதனால் அவர்கள் அடைவது வெறும் பணம் மட்டுமே. அடுத்தவனை எல்லோர் முன்பும் அசிங்கப்பட வைத்து, அழ வைத்து இதில் பணம் சம்பாதிப்பது ஒரு பெரும் வாடிக்கையாகிவிட்டது. இது ஒரு இழிவான செயல் என்று ஏன் நாம் எண்ணுவதில்லை? இல்லை இதெல்லாம் பொய், நாடகம் என்றால் நம்மை ஏமாற்றி பணம் சம்பாதிக்க இது தான் வழியா?

இதற்கு துணை போவது நாம்தான். அதெல்லாம் பார்த்து நாமும் அழுது, சந்தோசப்பட்டு மேலும் பார்ப்பதால்தான் இந்நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. உங்களை அப்படி அழைத்து எல்லோர் முன்னிலையிலும் அழவைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதுபோல் தான் மற்றவர்களுக்கும்.  இதை தவிர்க்க என்ன வழி?

நாம் பார்ப்பதை தவிர்க்கலாமே. நாம் பார்ப்பதை வைத்துத்தான் TRP ரேட்டிங் போடப்படுகிறது. அதன் அடிப்படியில் தான் மக்களின் விருப்பம் கண்டு கொள்ளப்படுகிறது. நாம் இதுபோன்ற இழிவான நிகழ்சிகளை பார்ப்பதை நிறுத்திவிட்டால், தானாகவே மாற்றம் வர ஆரம்பிக்கும். இதற்க்கு ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். எத்தனை பேர் பார்கிறாங்க, நான் பார்த்தால் தப்பா? என எண்ணுவதை தவிர்த்தால் வெற்றியின் விளிம்பை தொட்டு விட்டோம் என்று சொல்லலாம்.

மாற்றத்தை நாம் தான் ஆரம்பிக்க வேண்டும்.