அதிக முறை பார்த்த திரைப்படம்

முதல் முறை நான் இந்த திரைப்படத்தை பார்த்த பொழுது, மிகவும் மெதுவாக செல்கிறது என்று பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஒரு வாரம் கழித்து விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்தேன். இம்முறை மீதி படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தேன்.

இது போன்று பல படங்கள் பார்த்தால், இது சிறையில் இருந்து தப்பிக்கும் இன்னொரு படம்தான் என்று பெரியதாக எடுத்துக்கொள்ள தோணவில்லை.  

பல வருடங்களாக IMDB தரவரிசையில் விடாமல் முதலிடத்தில் இருக்கும் இப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது. நான்தான்  விருப்பமில்லாமல் பார்த்ததால் அதிகம் கவனம் செலுத்தாமல் போய்விட்டேனோ என்று எண்ணி, சில நாட்களிலேயே மீண்டும் ஒருமுறை பார்த்தேன். பொதுவாக நான் ஒரு படத்தை ஒரு முறைக்கு மேல் பார்ப்பது அரிது. ஆனால், இரண்டாம் முறை பார்த்தேன். இன்றுவரை இப்படத்தை 10 (இதுவே எனக்கு ரொம்ப ரொம்ப அதிகம்) முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். கொஞ்சமும் சளைக்கவில்லை.

இந்த திரைப்படம் வெளிவந்து 25 வருடங்களாகி விட்டது. இன்றும் உலகளவில் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் வெளிவந்த அந்த வருடம், மிக குறைவான வசூலையே செய்திருந்தது. அந்த வருடத்திற்க்கான ஆஸ்கார் விருதுக்கு 7 துறைகளில் பரிந்துரை செய்திருந்தும், ஒரு விருது கூட வாங்கவில்லை. இதை காரணமாக வைத்து அடுத்த வருடம் மறுமுறை வெளியிட்டார்கள். அதற்குபிறகு  நடந்தது எல்லாம் வரலாறு.

அப்படத்தின் பெயர் “The Shawshank Redemption

அப்படி என்ன இந்த படத்தில் இருக்கிறது? மக்கள் ஏன் இப்படத்தை கொண்டாடுகிறார்கள்? எந்த ஒரு படம், இரண்டரை மணி நேரத்தை தாண்டி பல நாட்கள் மனதில் நிற்கிறதோ, எந்த ஒரு படத்தை நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்க முடியுமோ அவைகளே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.

இப்படத்தை எனக்கு பிடித்த காரணங்களும், கற்று கொடுத்த பாடங்களும் சில

  1. ஒப்பிட்டு பார்க்க முடியாத கதை, திரைக்கதை, கதாப்பாத்திரங்கள் மற்றும் அருமையான இயக்கம் என எல்லா துறையும் ஒன்று சேர்ந்து மிக அழகாக செதுக்கிய படம் இது
  2. Andy மற்றும் Redன் உண்மையான நட்பு என்பது படிப்பு, இனம், நிறம், அறிவு திறமைக்கு அப்பாற்பட்டது என்பதை அழகாக படம் பிடித்திருந்தது இப்படம்
  3. நான் Morgan Freeman-னின் குரலுக்கு அடிமையாக ஆரம்பித்தது இப்படத்திலிருந்து தான். பொதுவாகவே கதை எடுத்துரைக்கும் (Narration Method) முறையை யாரும் பெரியதாக விரும்பமாட்டார்கள். இப்படம் அதற்கு விதிவிலக்கு. அவரின் குரலுக்காகவே கேட்கலாம். Morgan Freeman இல்லாமல் நீங்கள் இந்த படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
  4. இப்படம் ஒரு சோக கதையை மையமாக வைத்துத்தான் எடுக்கப்பட்டுள்ளது. கடைசி 15 நிமிடமே படத்தின் சந்தோசம். துன்பங்களில் இருந்து வெளிப்பட நீங்கள் பாடுபடும்போழுது இன்பம் எவ்வளவு தொலைவில் என்று உங்களால் யூகிக்கவும் முடியாது, பாதியில் விட்டுவிட்டு ஓடிவிடவும் முடியாது. அது தான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் காட்சிகள்.
  5. ரகசியம் என்றால் அது உங்களிடம் இருக்கும் வரைதான். என்று உங்களை விட்டு அது இன்னொருவரிடம் செல்கிறதோ, அது யாராக இருப்பினும் அது இனிமேல் ரகசியம் இல்லை. இதில் நாயகன் தெளிவாகவும், திடமாகவும் இருப்பார்.
  6. வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களில் தான் நாம் நம் புத்தியை மிக சிறப்பாக பயன்படுத்திகிறோம் என்பதை இப்படம் உணர்த்தும்.
  7. நம் பிரச்சனைகள், நம்முடைய மோசமான கனவுகளை விட மோசமாக இருக்கும்பொழுது, பிரச்சனை இருப்பதை விரைவில் ஒத்துக்கொண்டு மிக விரைவாக விடையை தேடியே ஆகவேண்டும்.
  8. நல்லதை நோக்கி செல்லும்பொழுது சில நேரங்களில் நீங்கள் மோசமான தருணங்களையும் தாண்டியே செல்ல வேண்டும் என்பதை நீங்கள் மறக்க கூடாது என்பதை புரிய வைத்திருக்கும்.
  9. விடாமுயற்சியும், உறுதியுமே வெற்றிக்கு வழிவகுக்கும் அது எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி. இவ்விரண்டில் எது ஒன்று இல்லை என்றாலுமே வெற்றி என்பது உங்கள் பக்கமில்லை.
  10. நம்பிக்கை நல்லது, நம்பிக்கைதான் வாழ்க்கை. இது தான் இப்படம். அதனாலேயே இப்படத்தை எல்லோருக்கும் பிடிக்கிறது என்று சொல்லலாம். எல்லோரும் நம் வாழ்க்கை மாறும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தான் இவ்வுலகையும்  நடத்திக்கொண்டிருக்கிறது.

இப்படி இந்த படத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படம் பார்க்கும் பொழுதெல்லாம், இக்கதையை என்னுடைய தொழிலுடனும், அதில் உள்ள பிரச்சனைகளையும் ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உள்ளது. அப்படி பார்க்கும்பொழுது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் இப்படம் முடியும்பொழுது கிடைக்கும். இது எல்லோருடைய  வாழ்க்கைக்கும் பொருந்தும்.

இதுவரை இப்படத்தை பார்க்காமல் இருந்தால் கண்டிப்பாக பாருங்கள். இதற்குமுன் பார்த்திருந்தால் இன்னொருமுறை பாருங்கள், கண்டிப்பாக உங்களை இப்படம் ஏமாற்றாது.